தேடுதல்

பின்லாந்து நாட்டின் கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான பிரதிநிதிகளுடன் திருத்தந்தை பின்லாந்து நாட்டின் கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான பிரதிநிதிகளுடன் திருத்தந்தை   (ANSA)

பின்லாந்து, கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான ஒரு முன்மாதிரியான நாடு!

“பெரும்பாலும் விரக்தியால் நிறைந்திருக்கும் இவ்வுலகில், அனைத்து விசுவாசிகளும் "நம்பிக்கையின் தூதுவர்களாக இருக்க வேண்டும்” : திருத்தந்தை பதினான்காம் லியோ

செபாஸ்தியான் வனத்தையன் – வத்திக்கான்

ஜனவரி 19, திங்கள்கிழமையன்று, உரோமையில் நடைபெற்ற புனித ஹென்றிக் திருவிழாவின் போது, பின்லாந்து நாட்டின் கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான பிரதிநிதிகளை வரவேற்று மகிழ்ந்த வேளை, "பின்லாந்து கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான ஒரு முன்மாதிரியான நாடு" என வர்ணித்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஹெல்சின்கியின் பேராயர் எலியா மற்றும் பேராயர் தபியோ லூமா இருவரையும் வாழ்த்தியதுடன் பின்லாந்தின் அரசுத் தலைவர் அலெக்சாண்டர் ஸ்டப் அவர்களின் வாழ்த்துச் செய்திகளையும், டர்குவின் உயர்மறைமாவட்டத்தின் 750-வது ஆண்டு விழாவையும் குறிப்பிட்டு அவர்களுடன் உரையாடினார் திருத்தந்தை.

கிறிஸ்தவ ஒன்றிப்புக்காக நடத்தப்படும் இறைவேண்டல் வாரம் குறித்து பேசிய திருத்தந்தை லியோ அவர்கள், திருமுழுக்கில் வேரூன்றிய கிறிஸ்தவ நம்பிக்கையை வலியுறுத்தியதுடன், பெரும்பாலும் விரக்தியால் நிறைந்திருக்கும் இவ்வுலகில், அனைத்து விசுவாசிகளும் "நம்பிக்கையின் தூதுவர்களாக" இருக்க வேண்டும் என்ற அழைப்பினையும் விடுத்தார்.

நோய் தடுப்பு, பராமரிப்பு மற்றும் இடம்பெற்று வரும் கத்தோலிக்க-லூத்தரன் உரையாடல் உள்ளிட்ட சமூக மற்றும் இறைப்பணிக்கான முயற்சிகளில் ஆர்த்தடாக்ஸ், லூத்தரன் மற்றும் கத்தோலிக்கத் தலைவர்கள் இடையேயான ஒத்துழைப்பைக் குறிப்பிட்டு, "பின்லாந்து கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான ஒரு முன்மாதிரியான நாடு" என வர்ணித்துப் பாராட்டினார்.

புனிதர்கள் பேதுரு, பவுல் மற்றும் ஹென்றிக் ஆகியோரின் பரிந்துரையை வேண்டி, அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் அனைத்துலகக் கத்தோலிக்க-லூத்தரன் உரையாடலின் ஆறாவது கட்டத்திற்கு இந்த அனுபவங்களை எடுத்துச் செல்லுமாறு தூதுக்குழுவினரை ஊக்குவித்த திருத்தந்தை, ஒன்றிப்புக்கான ஒரு சிறிய இறைவேண்டலுடன் தனது உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 ஜனவரி 2026, 15:20