தேடுதல்

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்கள்   (ANSA)

ஸ்விட்சர்லாந்து தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு திருத்தந்தை இரங்கல்!

அதிகாரிகள் இந்தத் தீ விபத்துக்கான காரணத்தை ஆராய்ந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் உதவிகளை வழங்கி வரும் வேளையில், சுவிட்சர்லாந்து நாட்டு மக்கள் அனைவரும் இந்தத் துயரத்தில் அவர்கள் அனைவருடனும் ஒன்றிணைந்து நிற்கின்றனர்.

ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்

ஜனவரி 1, வியாழனன்று சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ்-மொன்டானாவில் உள்ள ஆல்ப்ஸ் மலைப்பகுதி மதுக்கூடம் ஒன்றில், ஏற்பட்ட தீ விபத்தில் ஏறத்தாழ 40 பேர் உயிரிழந்தும் மற்றும் 110-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ள வேளை,  இந்தத் துயரச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

திருத்தந்தையின் பெயரில் திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின்.அவர்களால் கையொப்பமிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ள இந்த இரங்கல் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை.

மேலும், இறந்தவர்களின்  ஆன்மாக்கள் இறைவனின் நிறையமைதி பெறவேண்டும் என்றும், உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ துயரப்படுபவர்களுக்குத் தேவையான மனவலிமையை கடவுள் வழங்க வேண்டும் என்றும் தான் இறைவேண்டல் செய்வதாகவும் அச்செய்தியில் உரைத்துள்ளார் திருத்தந்தை.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவரையும்  அன்னை கன்னி மரியாவின் பரிந்துரை செபத்தில் ஒப்படைப்பதாகக் மொழிந்துள்ள திருத்தந்தை, அவர்கள் அனைவரும் ஆறுதல் பெறவும், இந்தத் துயரமான வேளையில், அவர்களின் இதயங்களில் நம்பிக்கையும் விசுவாசமும் தூண்டப்பட வேண்டும் என்று அன்னை மரியாவிடம் இறைவேண்டல் செய்வதாவும் கூறியுள்ளார்.

அதிகாரிகள் இந்தத் தீ விபத்துக்கான காரணத்தை ஆராய்ந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் உதவிகளை வழங்கி வரும் வேளையில், சுவிட்சர்லாந்து நாட்டு மக்கள் அனைவரும் இந்தத் துயரத்தில் அவர்கள் அனைவருடனும் ஒன்றிணைந்து நிற்கின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 ஜனவரி 2026, 13:01