உண்மையை நோக்கி பயணிக்க இளைஞர்களுக்கு அழைப்பு!
ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்
"உரோமை நகரின் இளைஞர்கள் வெறும் மேலோட்டமான இணையவழித் தொடர்புகளோடு திருப்தி அடைந்துவிடக் கூடாது" என்றும், "அதற்குப் பதிலாக கடவுளையும் மற்றவர்களையும் நேரில் சந்திப்பதன் மூலம் கிடைக்கும் ஆழமான உண்மை, நற்பண்பு மற்றும் உறவுநிலையைத் தேட வேண்டும்" என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
ஜனவரி 10, சனிக்கிழமையன்று, வத்திக்கானின் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கில் இடம்பெற்ற கூட்டத்தில், ஆயிரக்கணக்கான இளைஞர்கள், அருள்பணியாளர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு உரையாற்றியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
நாம் அனைவரும் எப்போதும் இணைய வழி தொடர்பில் இணைக்கப்பட்டிருந்தாலும், இன்று பலர் அனுபவிக்கும் தனிமை மற்றும் திசைதெரியாத நிலை குறித்து வெளிப்படையாகப் பேசிய திருத்தந்தை, உண்மையான பிணைப்பு என்பது விசுவாசத்திலேயே காணப்படுகிறது என்பதை வலியுறுத்தினார்.
மேலும், இணையதளத் தொடர்புகள் அதிகரித்தாலும் இளைஞர்களிடையே பெருகிவரும் தனிமை குறித்துப் பேசிய திருத்தந்தை, புகழ்பெற்ற கவிஞர் சால்வதோர் குவாசிமோதோவின் கவிதை வரிகளை மேற்கோள் காட்டி அவற்றை விசுவாசத்தின் ஒளியில் மறுபரிசீலனை செய்தார்.
"இதயத்தைத் துளைக்கும் அந்தக் கதிர் என்பது வந்து போகும் தற்காலிகமான ஒளியல்ல" என்றும், "அது தோன்றி மறையும் மினுமினுப்பும் அல்ல, மாறாக அது நீதியின் கதிரவன், அவரே கிறிஸ்து" என்றும் கூறினார் திருத்தந்தை.
தொடர்ந்து கிறிஸ்து நமது இதயங்களுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் அளிக்கிறார் என்றும் சமூக மாற்றத்திற்கு நம்மைத் தூண்டுகிறார் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
"இளைஞர்களின் முயற்சிகள் மற்றவர்களால் கவனிக்கப்படாதபோது கூட, அவர்கள் விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும்" என்று கூறிய திருத்தந்தை, "சமூக மாற்றம் என்பது தனிமனித மாற்றத்திலிருந்தே தொடங்குகிறது" என்று அவர்களுக்கு நினைவுபடுத்தினார்.
"மனித மனதைச் சிறைபிடிக்கும் சலிப்பு, அகந்தை மற்றும் அலட்சியம் ஆகியவற்றிலிருந்து விடுபட இறைவேண்டல் ஒன்றே திறவுகோல்" என்று எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.
இறுதியாக, "இறைவேண்டல் என்பது ஒரு கிறிஸ்தவர் மற்றவர்களுக்காகவும், இந்த உலகத்தின் நலனுக்காகவும் செய்யும் மிக உறுதியான செயலாகும்" என்று கூறிய திருத்தந்தை "இளைஞர்கள் தங்கள் ஆன்மிகப் பயணத்தில் இறைவேண்டலை மாற்றத்தை உருவாக்கும் ஒரு கருவியாக ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று வலியுறுத்தி தனது உரையை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
