காங்கோவில் பாதிக்கப்பட்ட மக்கள் காங்கோவில் பாதிக்கப்பட்ட மக்கள்   (AFP or licensors)

காங்கோ மற்றும் தெற்கு ஆப்பிரிக்காவுக்காக திருத்தந்தை இறைவேண்டல்!

காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெற்கு ஆப்பிரிக்காவுக்காக தமது உடனிருப்பை வெளிப்படுத்தி திருத்தந்தையின் சிறப்பு இறைவேண்டல்.

செபாஸ்தியான் வனத்தையன் – வத்திக்கான்

ஜனவரி 18, ஞாயிறன்று, காங்கோ  ஜனநாயகக் குடியரசில் (DRC) தொடரும் மனிதாபிமான நெருக்கடி மற்றும் அங்கு இடம்பெற்றுவரும் வன்முறையின் காரணமாக பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தப்பட்டுள்ள நிலை குறித்து தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஜனவரி 18, ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில்  வழங்கிய தனது நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையில், உரையாடல் மற்றும் அமைதிக்கு அழைப்பு விடுத்ததுடன், ஆயிரக்கணக்கானோரை இடம்பெயரச் செய்த மோதலை முடிவுக்குக் கொண்டுவருமாறும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.

அண்மையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 18 பேர் உயிரிழந்த நிலையில், தீவிர வானிலையின் பேரழிவுத் தாக்கத்தை சுட்டிக்காட்டிய திருத்தந்தை, முகாம்களில் புலம்பெயர்ந்தோர் தங்களுக்கான உணவு, தண்ணீர், மருத்துவப் பராமரிப்புக்கான குறைந்தபட்ச தேவைகள் மற்றும் அதிகரித்து வரும் நோய்களின் ஆபத்தான சூழ்நிலைகளை எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்பது குறித்தும் எடுத்துக்காட்டினார்.

தென்னாப்பிரிக்கா, மொசாம்பிக் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் சிறப்பு இறைவேண்டல் செய்த திருத்தந்தை, அங்கு ஏற்பட்ட கனமழை காரணமாக ஏறத்தாழ 100-க்கும் மேற்பட்டடோர் உயிரிழந்துள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

இறுதியாக, பாதிக்கப்பட்டவர்களுக்கும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளோருக்கும் தனது உடனிருப்பை வெளிப்படுத்தி, இந்தத் துயரமான காலங்களில் திருஅவையின் ஆதரவுத்  தொடர்ந்து இருக்கும் என்பதை உறுதியாகத் தெரிவித்தார்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 ஜனவரி 2026, 13:41