தேடுதல்

உரை வழங்கும் திருத்தந்தை உரை வழங்கும் திருத்தந்தை   (@Vatican Media)

பெரும் புகழைத் தேடாமல் கிறிஸ்துவைப் பகிர்ந்து கொள்கிறது திருஅவை!

திருத்தந்தை தனது உரையில் நீதி, உண்மை மற்றும் பிறரன்புப் பணிகளின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டி, அதன் அதிகார வரம்பிற்குட்பட்ட குற்றங்கள் உட்பட, நுட்பமான வழக்குகளில் ஆயர்கள் மற்றும் மேலதிகாரிகளுக்கு உதவுவதில் விசுவாசக் கோட்பாட்டிற்கான திருப்பீடத் துறையின் பங்களிப்பை அங்கீகரித்தார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

"திருஅவை பெரும் புகழையே அல்லது தனிப்பற்றையோ தேடாமல் கிறிஸ்துவைப் பகிர்ந்து கொள்கிறது” என்றும், “அதில் உள்ள ஒவ்வொருவரும் கடவுளின் பணியில் தங்களை மனத்தாழ்மைக்கொண்ட ஒரு பணியாளராகக் கருத வேண்டும்" என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஜனவரி 29, வியாழக்கிழமையன்று, விசுவாசக் கோட்பாட்டிற்கான திருப்பீடத் துறையின் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தில் பங்கேற்கும் அதன் உறுப்பினர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, கத்தோலிக்கக் கோட்பாட்டைப் பாதுகாப்பதிலும் தெளிவுபடுத்துவதிலும் அவர்களின் அர்ப்பணம் கொண்ட பணியைப் பாராட்டினார்.

ஆன்மிக வளர்ச்சி மற்றும் மேய்ப்புப்பணி வழிகாட்டுதல் இரண்டிலும் அவர்களின் பங்களிப்பைக் குறிப்பிட்டு, அருளடையாளங்கள், மனித மாண்பு, மரியன்னை பக்தி, செயற்கை நுண்ணறிவு மற்றும் திருமணம் குறித்த வழிகாட்டுதல்கள் உள்ளிட்ட அவர்களின் அண்மைய முக்கிய வெளியீடுகளை எடுத்துரைத்தார் திருத்தந்தை.

வரலாற்று ரீதியாக, கிறிஸ்தவப் பகுதிகளில் மத ஈடுபாடு குறைந்து வருவதைக் குறிப்பிட்டு, இளைய தலைமுறையினருக்கு நம்பிக்கை பரிமாற்றத்தை வலுப்படுத்த வேண்டிய அவசரத் தேவையையையும் அவர்களிடம் வலியுறுத்திய திருத்தந்தை, நிறுவன ரீதியான முக்கியத்துவத்தை விட கிறிஸ்துவின் அன்பின் மூலம் ஈர்க்கும் ஒரு மறைபரப்புத் திருஅவைக்கு அழைப்பு விடுத்தார்.

நீதி, உண்மை மற்றும் பிறரன்புப் பணிகளின் முக்கியத்துவத்தை கோடிட்டுக் காட்டி, அதன் அதிகார வரம்பிற்குட்பட்ட குற்றங்கள் உட்பட, நுட்பமான வழக்குகளில் ஆயர்கள் மற்றும் மேலதிகாரிகளுக்கு உதவுவதில் இத்திருப்பீடத் துறையின் பங்களிப்பை அங்கீகரித்தார் திருத்தந்தை.

இறுதியாக, அர்ப்பணமும் மனத்தாழ்மையும் கொண்ட அவர்களின் பணிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட திருத்தந்தை, அவர்கள் அனைவருக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கி தனது உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 ஜனவரி 2026, 12:28