துயருறும் குழந்தைகளுக்கு இசை நிகழ்ச்சியை அர்ப்பணித்த திருத்தந்தை!
ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்
“இறைவனின் குரலுக்கு அமைதியில் செவிமடுக்கும் அன்னை மரியாவின் முன்மாதிரியிலிருந்து விசுவாசிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
ஜனவரி 3, சனிக்கிழமையன்று, திருப்பீடத்தில் சிஸ்டைன் சிற்றாலய இசைக்குழுவின் கிறிஸ்து பிறப்பு இசை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடம் உரையாற்றிய போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
“கிறிஸ்து பிறப்பு பெருவிழா எப்போதும் இசையிலிருந்து பிரிக்க முடியாத ஒன்று” என்று மொழிந்த திருத்தந்தை, இயேசுவின் பிறப்பின் போது, 'விண்ணகத் தூதர் பேரணி, “உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!' என்று கடவுளைப் புகழ்ந்து பாடியது (லூக் 2:13-14) என்று நற்செய்தியே நமக்குச் சொல்கிறது என்பதை எடுத்துக்காட்டினார்.
மேலும், அன்று நிகழ்ந்த முதல் கிறிஸ்து பிறப்பு இசை நிகழ்ச்சி பற்றி எடுத்துக் கூறிய திருத்தந்தை, அந்த இரவின் நேரடிப் பார்வையாளர்களாகவும் சாட்சிகளாகவும் திகழ்ந்த பெத்லகேம் இடையர்களைப் பற்றியும் அவர்கள் கடவுளை மகிமைப்படுத்தி, புகழ்ந்தும் சென்றதைப் பற்றியும் சுட்டிக்காட்டினார்.
விண்ணக இசை எதிரொலித்த மற்றொரு இடமும் இருந்தது என்றும், அந்த அமைதியான இடம் மரியாவின் இதயம் என்றும் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.
மகிழ்ச்சி, இசை, அடிப்படைத் தேவைகள் அல்லது அமைதி எதுவுமின்றி கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவைக் கொண்டாடும் உலகெங்கிலும் உள்ள குழந்தைகளுக்காக இந்த இசை நிகழ்ச்சியை அர்ப்பணிப்பதாகக் கூறிய திருத்தந்தை, அவர்களின் மௌனமான துயரங்களுக்குக் கடவுள் செவிமடுக்க வேண்டும் என்றும், அன்னை மரியாவின் பரிந்துரை வழியாக, இவ்வுலகிற்கு நீதியையும் அமைதியையும் வழங்க வேண்டும் என்றும் இறைவேண்டல் செய்வதாகக் கூறினார்.
கிறிஸ்து பிறப்பின் மறைபொருளைப் பற்றி கேட்பவர்கள் ஆழமாகச் சிந்திக்கத் தூண்டும் வகையில், இசையையும் பாடலையும் பயன்படுத்தியதற்காக இசைக்குழுவிற்குத் தனது நன்றியைத் தெரிவித்த திருத்தந்தை, அந்த இசைக்குழுவின் இயக்குனர் பேரருள்திரு. மார்கோஸ் பவன் மற்றும் சிறுவர் இசைக்குழுவின் இயக்குநர் மிஷேல் மாரினெல்லி ஆகியோரின் கலைத்துவமான தலைமைத்துவத்தைப் பாராட்டினார்.
இறுதியாக, சிஸ்டைன் சிற்றாலய இசைக்குழுவினருக்கும், இந்நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளைக் கூறி தனது உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
