ஸ்பெயின் இரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு திருத்தந்தை இரங்கல்!
ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்
ஸ்பெயினின் கோர்தோபா மாநிலத்தில் உள்ள அதாமுஸ் பகுதியில் நிகழ்ந்த இரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
திருத்தந்தையின் பெயரில் திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்களால் கையொப்பமிடப்பட்ட இந்த இரங்கல் செய்தி ஸ்பெயினின் ஆயர் பேரவைத் தலைவரும் வல்லாடோலிட் பேராயருமான லூயிஸ் சேவியர் அர்குயெல்லோ கார்சீயா அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், இவ்விபத்தில் இறந்தவர்களின் ஆன்மாக்கள் இறைவனில் நிறையமைதி பெறவேண்டும் என்று இறைவேண்டல் செய்வதாகக் கூறியுள்ள திருத்தந்தை, இதில் ஈடுசெய்ய முடியாத இழப்பைச் சந்தித்துள்ள அவர்தம் குடும்பத்தினருக்குத் தனது ஆதரவைத் தெரிவிப்பதாக அச்செய்தியில் உரைத்துள்ளார்.
அதேவேளையில், மீட்புப் பணிகள் மற்றும் அவசரகால சேவைகளில் ஈடுபட்டுள்ள குழுவினர், விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதில் சோர்வின்றித் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று அவர்களைக் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவரையும் புனித பிலார் அன்னை மரியாவின் பரிந்துரை செபத்தில் ஒப்படைப்பதாகக் மொழிந்துள்ள திருத்தந்தை, உயிர்த்தெழுந்த ஆண்டவரில் நம்பிக்கையின் அடையாளமாக, இதில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
