தேடுதல்

கிரான்ஸ்-மொன்தானா தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருத்தந்தை ஆறுதல்!

"உங்களுடன் சேர்ந்து திருஅவை இந்தத் துன்பத்தைத் தாங்குகிறது. துயரமோ இறப்போ அவர்களையும் அல்லது அவர்களது அன்புக்குரியவர்களையும் கிறிஸ்துவின் அன்பிலிருந்து பிரிக்க முடியாது" : திருத்தந்தை பதினான்காம் லியோ.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

"சுவிட்சர்லாந்தில் உள்ள கிரான்ஸ்-மொன்தானாவில் ஏற்பட்ட கொடிய தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த ஆறுதலையும் ஆன்மிக ஆதரவையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஜனவரி 14 புதன்கிழமையன்று, இவ்விபத்தில் இறந்தவர்களின் அல்லது படுகாயமடைந்தவர்களின் உறவினர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது, "இந்தத் துயரத்தை உலகெங்கிலும் உள்ள மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பெரும் துன்பத்தின் தருணம்" என்று வர்ணித்தார் திருத்தந்தை.

அவர்களின் வலியின் ஆழத்தையும், அத்தகைய இழப்பை எதிர்கொள்ளும் போது மனித வார்த்தைகள் போதுமானதாக இல்லை என்பதையும் அவர்களிடம் ஒப்புக்கொண்ட திருத்தந்தை, கிறிஸ்தவ நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு, சிலுவையில் கைவிடப்பட்ட கிறிஸ்துவின் கூக்குரலை எடுத்துக்காட்டி, இறப்பிற்கு அப்பாற்பட்ட நம்பிக்கையின் அடித்தளமாக உயிர்த்தெழுதலைச் சுட்டிக்காட்டினார்.

"உங்களுடன் சேர்ந்து திருஅவை இந்தத் துன்பத்தைத் தாங்குகிறது" என்றும், "துயரமோ இறப்போ அவர்களையும் அல்லது அவர்களது அன்புக்குரியவர்களையும் கிறிஸ்துவின் அன்பிலிருந்து பிரிக்க முடியாது" என்றும் அவர்களுக்கு உறுதியளித்த திருத்தந்தை, "இயேசு அவர்களின் வலியில் பங்கு கொள்கிறார்" என்றும், "துயரம் மற்றும் நிச்சயமற்ற நிலையில் அவர்களுடன் நடப்பார்" என்றும் வலியுறுத்திக் கூறினார்.

வியாகுல அன்னை மரியாவிடம் அவர்தம் குடும்பங்களை ஒப்படைத்து, அவரது தாய்வழி உடனிருப்பில் ஆறுதலைத் தேடவும், விசுவாசத்தைப் பற்றிக்கொள்ளவும் அவர்களை ஊக்குவித்த திருத்தந்தை, தீயின் விளைவுகளால் இன்னும் அவதிப்படுபவர்களுக்கும், குடும்பங்களுக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கி தனது உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 ஜனவரி 2026, 13:39