திருத்தந்தை திருத்தந்தை   (ANSA)

வெனிசுலாவில் அமைதித் திரும்ப திருத்தந்தை வேண்டுகோள்!

வெனிசுலாவின் அரசுத் தலைவர் நிக்கோலஸ் மதூரோ மற்றும் அவரது மனைவி சில்லியா ஃப்ளோரஸ் இருவரின் கைதுக்குப் பிறகு அந்நாட்டில் அமைதி மற்றும் இறையாண்மையை பாதுகாக்க திருத்தந்தை வேண்டுகோள்

செபாஸ்தியான் வனத்தையன் – வத்திக்கான்

அமெரிக்கப் படைகளால் வெனிசுலாவின் அரசுத் தலைவர் நிக்கோலஸ் மதூரோ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டில் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர திருத்தந்தை லியோ அவர்கள் வலியுறுத்தியுள்ளார்,

ஜனவரி 4, ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் வழங்கிய மூவேளை இறைவேண்டல் உரையின் இறுதியில் இவ்வாறு வேண்டுகோள் விடுத்த திருத்தந்தை, வெனிசுலாவின் இறையாண்மை, சட்டத்தின் ஆட்சி, மனித மற்றும் குடிமக்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

வெனிசுலா மக்களின் நலனே மற்ற எல்லா செயல்முறைகளையும் விட முன்னுரிமை பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை, அந்நாட்டின் தொடர்ச்சியான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகள் மீது சிறப்புக் கவனம் செலுத்தி, நீதி, அமைதி, அரசியலமைப்பு ஒழுங்கு மற்றும் ஒருமைப்பாட்டிற்காக சிறப்பாக இறைவேண்டல் செய்தார்.

உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்கர்களை வெனிசுலாவிற்காக செபிக்கும் படி அழைப்பு விடுத்துள்ள திருத்தந்தை, அந்த நாட்டை கொரோமோட்டோ அன்னை மற்றும் வெனிசுலா புனிதர்களின் பரிந்துரை செபத்தில் ஒப்படைத்தார்.

மேலும்  அமைதியின் கடவுள் மீது நம்பிக்கை கொள்ளவும், போரால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களின் துயரத்தில் ஒன்றித்து அவர்களுடன் தொடர்ந்து தோழமையி;ல் இருக்கவும் ஊக்குவித்துள்ளார் திருத்தந்தை.

முன்னதாக, ஜனவரி 3, சனிக்கிழமையன்று, அமெரிக்க சிறப்புப் படையினர் கரகாஸில் நுழைந்து, மதூரோ மற்றும் அவரது மனைவி சில்லா ஃப்ளோரஸ் இருவரையும் கைதுசெய்து, நியூயார்க்கிற்குக் கொண்டு சென்றதாகக் கூறப்பட்ட நிலையில், அங்கு அவர்கள் மீது பல கொடூரமான குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கள் நாட்டின் இத்தகைய நெருக்கடியான சூழலில், வெனிசுலா ஆயர்கள் தங்கள்  மக்களுடன் நெருக்கத்தை வெளிப்படுத்தியுள்ளதுடன், அமைதி, நிம்மதி மற்றும் ஒன்றிப்பு தொடர்ந்து நிலவிட இறைவேண்டல் செய்து வருகின்றனர்.

மேலும் வெனிசுலா ஆயர்கள் அனைத்து வகையான வன்முறைகளையும் கண்டித்துள்ளதுடன், அந்நாட்டின் நலனை முன்னிலைபடுத்தும் முடிவுகள் மட்டுமே தற்போது மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 ஜனவரி 2026, 13:14