ஒன்றிணைந்து பயணிக்க கர்தினால்களுக்குத் திருத்தந்தை அழைப்பு!
ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்
திருஅவையின் பணிக்காக தூய ஆவியாரின் வழிநடத்துதலைக் கண்டறியவும், ஒன்றிணைந்து செயல்படவும் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
ஜனவரி 08, வியாழனன்று, வத்திக்கானில் இடம்பெற்ற சிறப்புநிலை கர்தினால்கள் ஆலோசனை அவைக் கூட்டத்தில் உரையாற்றியபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, திருஅவை நற்செய்தியை அறிவிப்பதற்காகவே உள்ளது என்றும் அது திருநிலையினர் குழாமுக்காக (clergy) மட்டும் உருவானது அல்ல என்றும் வலியுறுத்திக் கூறினார்.
உரோமைத் தலைமைச் செயலகம் மற்றும் பிற இடங்களிலிருந்து வருகை தந்த கர்தினால்கள், "நற்செய்தியின் மகிழ்ச்சி" (Evangelii Gaudium) என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருத்தூது மடலில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள திருஅவையின் மறைபரப்புத் தன்மை, திருத்தூது அமைப்புவிதித் தொகுப்பு (Praedicate Evangelium), வத்திக்கான் தலைமை அலுவலகத்தின் பங்கு மற்றும் குறிப்பிட்ட திருச்சபைகளுடனான அதன் உறவு, ஒன்றிணைந்த பயணத்தின் (synodality) முக்கியத்துவம் மற்றும் வழிபாட்டு முறையின் எதிர்காலம் ஆகியவற்றை கலந்துரையாடலுக்கான தலைப்புகளாகத் தேர்வுசெய்திருந்தனர்.
ஒரு கருப்பொருளை மற்றொரு கருப்பொருளிலிருந்து பிரிக்க முடியாது என்று மொழிந்த திருத்தந்தை, ஒன்றிணைந்த பயணம் என்பது திருஅவையின் மறைபரப்புப் பணியின் நோக்கத்தைப் பிரதிபலிக்கிறது என்றும், அதேவேளையில், நற்செய்தியின் மகிழ்ச்சி என்பது கிறிஸ்துவை மையமாக வைத்து நற்செய்தியை அறிவிக்க அழைப்பு விடுக்கிறது என்றும் எடுத்துரைத்தார்.
மேலும், கர்தினால்கள் தங்களுக்குள் திறந்த மனதுடன் உரையாடல்களைத் தொடருமாறு ஊக்குவித்த திருத்தந்தை, ஒரு முடிவை எடுப்பதைக் காட்டிலும் அந்த முடிவை நோக்கி மேற்கொள்ளப்படும் தெளிந்து தேர்ந்திடும் பயணம் மிகவும் முக்கியமானது என்று தெளிவுபடுத்தினார்.
திருஅவை என்பது உயிர்த்துடிப்புடன் இருக்கிறதா? என்றும், உருவாகி வரும் புதிய மாற்றங்களை ஏற்றுக்கொள்ள திறந்த மனதுடன் இருக்கிறதா? என்றும் கேள்விகள் எழுப்பிய திருத்தந்தை, அச்சம் நம்மைப் பார்வையற்றவைகளாக ஆக்கிவிடும், ஆனால் நற்செய்தி விடுதலை அளிக்கும் என்று எடுத்துக்காட்டினார்.
நாம் அனைவரும் ஒன்றாக ஒரே படகில் ஒன்றிணைந்திருப்பது எவ்வளவு அழகானது! என்று கூறிய திருத்தந்தை, இந்தக் கர்தினால்கள் ஆலோசனை அவைக் கூட்டம் ஊக்குவிக்கும் தோழமை உணர்வையும், ஒருவருக்கொருவர் ஒத்துழைத்துச் செயல்படும் மனப்பாங்கையும் சிறப்பாகப் பாராட்டினார்.
திருத்தந்தை சிறு குழு விவாதங்களில் நேரடியாகப் பங்கேற்கவில்லை என்றாலும், ஒவ்வொரு குழுவின் செயலாளர்களும் தங்கள் பணிகளைச் சமர்ப்பித்த பொது அமர்வில் கலந்து கொண்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
