நீதித்துறையில் உண்மையும் அன்பும் ஒன்றிணைந்திருக்க வேண்டும்!
ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்
திருஅவையின் நீதித்துறையில் உண்மைக்கும் அன்புக்கும் இடையே உள்ள ஆழமான தொடர்பை எடுத்துக்காட்டி, "இவை இரண்டும் ஒன்றிணைந்து இருக்க வேண்டும்" என்றும் "ஏனெனில்,அன்பு மற்றும் உண்மையின் வடிவாகத் திகழும் இறைவனின் தெய்வீகத் தன்மையால் இவை இரண்டும் பிரிக்க முடியாத வகையில் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளன" என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
ஜனவரி 26, திங்களன்று, ரோமன் ரோட்டா எனப்படும், திருமணம் சார்ந்த விவகாரங்களுக்குப் பொறுப்பான, வத்திக்கான் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை திருப்பீடத்தில் சந்தித்த வேளை, அவர்களுக்கு வழங்கிய உரையில் இவ்வாறு மொழிந்தார் திருத்தந்தை.
திருத்தந்தை பன்னிரண்டாம் பத்திநாதர் முதல் திருத்தந்தை பிரான்சிஸ் வரை தமக்கு முன் இருந்த திருத்தந்தையர்களின் படிப்பினைகளை எடுத்துக்காட்டிய திருத்தந்தை, "இரக்கம் என்ற பெயரில் உண்மையை நீர்த்துப்போகச் செய்வதோ அல்லது சிதைப்பதோ கூடாது" என்று எச்சரிக்கை விடுத்தார்.
"திருமண முறிவு (Annulment) போன்ற வழக்குகளில், வெறும் மேய்ப்புப் பணி சார்ந்த அணுகுமுறையை மட்டும் பின்பற்றுவது ஆபத்தானது" என்றும், "இத்தகைய போக்கு, நீதியின் புறநிலை அடிப்படையையே சிதைத்துவிடும் என்றும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.
அதேவேளையில், தனிமனிதர்களின் மாண்பையும் ஆன்ம மீட்பையும் கருத்தில் கொள்ளாமல், வெறும் உண்மையை மட்டும் இயந்திரத்தனமாகச் செயல்படுத்துவதற்கு எதிராகவும் எச்சரிக்கை விடுத்தார் திருத்தந்தை.
"திருஅவையின் நீதித்துறைப் பணிகள் எப்போதும் ஆன்மாக்களின் மீட்பிற்காகவே அமைய வேண்டும்" என்று வலியுறுத்திய திருத்தந்தை, "நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் ஏனையோர் உள்ளிட்ட திருஅவை சட்ட நடவடிக்கைகளில் பங்கேற்கும் அனைவரும் மிக உயர்ந்த தார்மீக நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்" என்றும் எடுத்துக்காட்டினார்.
"நீதிமன்ற நடைமுறையை வெறும் முரண்பட்ட நலன்களுக்கு இடையிலான போட்டியாகக் கருதாமல், உண்மையை வெளிக்கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட ஓர் உரையாடலாக இருக்க வேண்டும்" என்று விவரித்த திருத்தந்தை, "உண்மை மற்றும் அன்பின் சமநிலையே சிறப்பியல்பு கொண்ட உண்மையான கிறிஸ்தவ சட்ட ஞானத்தை திருஅவையின் நீதித்துறை அமைப்பைச் சேர்ந்த அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்" என்று அழைப்பு விடுத்தார்.
உண்மை மற்றும் அன்பின் இலக்கணமாகத் திகழும் அன்னை மரியாவை, 'நீதியின் கண்ணாடியே' என்று அழைத்து, அவர்களின் பணிகளை அன்னையின் பரிந்துரை செபத்தில் ஒப்படைத்துத் தனது உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.
இந்த உரை, அறிவுப்பூர்வமான துல்லியத்தன்மையோடும், அதேவேளையில், மனிதாபிமானத்தோடும் திருஅவை நீதியை நிலைநாட்டுவதற்கு எடுத்துவரும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு முக்கிய வெளிப்பாடாக அமைந்தது. மேலும் இது ஆன்மாவின் நிலையான மீட்பு என்னும் திருஅவையின் இறுதிப் பேரின்ப இலக்கை முழுமையாகப் பறைசாற்றுகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
