அருள்பணியாளர் அகஸ்டோ இரஃபேல் ராம்ரெஸ் மொனாஸ்டீரியோ அருள்பணியாளர் அகஸ்டோ இரஃபேல் ராம்ரெஸ் மொனாஸ்டீரியோ  

புனிதர்பட்ட படிநிலையின் ஆணைக்கு திருத்தந்தை ஒப்புதல்

திருத்தந்தையால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள இந்த ஆணைகள் பல்வேறு நூற்றாண்டுகள் மற்றும் கண்டங்களில் இறை நம்பிக்கை, பிறரன்புப் பணிகள் மற்றும் மறைச்சாட்சி வாழ்க்கையை கௌரவிக்கும் வகையில், கத்தோலிக்கத் திருஅவையின் புனிதர் பட்டத்தை நோக்கிய செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளைக் குறிக்கின்றன.

ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்

ஆறு நபர்களுக்குப் புனிதர் பட்டம் வழங்கும் பணியை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும் ஆணைகளுக்கு  ஒப்புதல் அளித்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.  இதன் மூலம் இருவர்  அருளாளர் நிலைக்கும் நால்வர் வணக்கத்திற்குரியவர் நிலைக்கும் உயர்த்தப்படவுள்ளனர்.

ஜனவரி 22, வியாழனன்று, புனிதர் பட்ட படிநிலைகளுக்குரிய திருப்பீடத் துறையின் தலைவர் கர்தினால் மார்செல்லோ செமராரோ அவர்களைச் சந்தித்தபோது இந்த ஒப்புதலை வழங்கியுள்ளார் திருத்தந்தை.

குவாத்தமாலாவைச் சேர்ந்த பிரான்சிஸ்கன் சபைத் துறவியான அருள்பணியாளர் அகஸ்டோ இரஃபேல் ராம்ரெஸ் மொனாஸ்டீரியோ அவர்கள், விசுவாசத்திற்காகக் கொல்லப்பட்டதால் மறைச்சாட்சி என அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

மேலும், அசோலாவின் இயேசுவின் திரு இருதய உர்சுலைன் சபையின் நிறுவனரான அருள்சகோதரி மரியா இக்னாசியா இசாகி அவர்களின் பரிந்துரையால் நடந்த ஓர் அருளடையாளம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரங்களின் அடிப்படையில், இவர்கள் இருவரும் விரைவில் அருளாளர் நிலைக்கு உயர்த்தப்படுவார்கள்.

1983-ஆம் ஆண்டு குவாத்தமாலாவின் உள்நாட்டுப் போரின் போது, அருள்பணியாளர் அகஸ்டோ அவர்கள், பலமுறை விடுக்கப்பட்ட மிரட்டல்கள் மற்றும் துன்புறுத்தல்களுக்குப் பிறகு கொல்லப்பட்டார். அவர் ஆண்டவர்மீது கொண்ட ஆழமான விசுவாசத்தின் காரணமாகவே கொலை செய்யப்பட்டார் என்பதை திருப்பீடம்  அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.

1950-ஆம் ஆண்டு தனது சபையைச் சேர்ந்த சக துறவி ஒருவருக்கு ஏற்பட்ட தீர்க்க முடியாத நோய் ஒன்று சகோதரி மரியா இக்னாசியா இசாகி அவர்களின் பரிந்துரையால் அதிசயமாகக் குணமானது. இதனைத் திருப்பீடம் தற்போது அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளதன் காரணமாக அவருக்கு அருளாளர் பட்டம் வழங்கப்பட உள்ளது.

மேலும் திருத்தந்தை லியோ அவர்கள், நான்கு நபர்களின் வீரத்துவ பண்புகளை அங்கீகரித்து, அவர்களை வணக்கத்திற்குரியவர்கள் என்று அறிவிக்கவும் ஒப்புதல் அளித்துள்ளார்.

இத்தாலியைச் சேர்ந்த ஒரு பொதுநிலையினரான நெரினோ கோபியான்கி அவர்கள், தான் செய்த பிறரன்புப் பணிகளுக்காகவும், இளைஞர்களுக்கு அவர் ஆற்றிய சேவைக்காகவும் சிறப்பாக அறியப்படுகிறார்.

மேலும், இதேநாட்டைச் சேர்ந்த அருள்சகோதரி குரோசிபிசா மிலிதெர்னி அவர்கள், ஏழை எளியவர்கள் மற்றும் நோயாளர்களின் பராமரிப்பிற்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்ததுடன், துன்பப்படுபவர்களிடம் காட்டிய இரக்கச் செயல்களுக்காகப்  போற்றப்படுகிறார்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த கார்மெல் துறவற சபையின் அருள்சகோதரி மரியா கிசெல்டா வில்லேலா அவர்கள், தனது ஆன்மிக வழிகாட்டுதல் மற்றும் இரக்கச் செயல்களுக்காக நினைவுகூரப்படுகிறார்.

அமல உற்பவ பக்திமிகு பணியாளர் சகோதரிகள் சபையின் நிறுவுனரான அருள்சகோதரி மரியா தேக்ளா அந்தோனியா ரெலூசென்டி அவர்கள், தனது வீரத்துவப் பண்புகளுக்காக சிறப்பாக அறியப்படுகிறார்.

திருத்தந்தையால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள இந்த ஆணைகள் பல்வேறு நூற்றாண்டுகள் மற்றும் கண்டங்களில் இறை நம்பிக்கை, பிறரன்புப் பணிகள் மற்றும் மறைச்சாட்சி வாழ்க்கையை கௌரவிக்கும் வகையில், கத்தோலிக்கத் திருஅவையின் புனிதர் பட்டத்தை நோக்கிய செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளைக் குறிக்கின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 ஜனவரி 2026, 14:16