தேடுதல்

எதிர்நோக்குடனும் ஒருமைப்பாட்டு உணர்வுடனும் திகழ்ந்திடுங்கள்!

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், திருக்காட்சிப் பெருவிழா நாளின் சிறப்பு நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையில், சவாலான காலங்களில் உலகில் கடவுளின் உடனிருப்பை அங்கீகரிப்பதால் ஏற்படும் ஆழமான மகிழ்ச்சியைக் குறித்துத் திருப்பயணிகளுக்கு எடுத்துரைத்தார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஞானிகள் மூவரின் பரிசுகளில், நாம் ஒவ்வொருவரும் எதைப் பொதுவில் வைக்கலாம், எதை இனி நமக்காக வைத்திருக்க முடியாது, எதைப் பகிர்ந்து கொள்ளலாம் என்பதைக் காண்கிறோம் என்றும், அப்போதுதான் இயேசு நம்மிடையே வளரக்கூடும் என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஜனவரி 6, செவ்வாயன்று, சிறப்பிக்கப்பட்ட திருக்காட்சிப் பெருவிழா நாளில், வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு பெருங்கோவிலின் நடுமாடத்திலிருந்து வழங்கிய சிறப்பு நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை.

திருக்காட்சி என்பது வெளிப்பாடு

"திருக்காட்சி" என்பது "வெளிப்பாடு" எனப் பொருள்படும் என்றும், இது கடவுளின் வாழ்க்கையின் வெளிப்பாட்டைக் குறிக்கிறது, அதாவது, கடவுளின் வாழ்க்கை இனி மறைக்கப்படவில்லை, மாறாக இயேசு கிறிஸ்துவின் வழியாக அது தெளிவாகக் காட்டப்படுகிறது என்றும் விளக்கினார்.

மேலும் இந்த வெளிப்பாடு, துன்பங்களுக்கு மத்தியிலும் நம்பிக்கையையும் மீட்பையும் வழங்குகிறது என்றும், கடவுளின் ஒரே நோக்கம் மனிதகுலத்தைக் காப்பாற்றுவது என்பதை விசுவாசிகளுக்கு நினைவூட்டுகிறது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

குழந்தை முன் பணிவுடன் மண்டியிடுவோம்

கடவுளின் மாட்சிமை ஒளிர்ந்திடும் இயேசுவில் உண்மையான மனித இயல்பை கண்டுகொள்வதன் அடையாளமாக, ஞானிகள் செய்தது போன்று, பெத்லகேமில் உள்ள குழந்தையின் முன் பணிவுடன் மண்டியிடுமாறு கிறிஸ்தவர்களை கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

இயேசுவில், தெய்வீக வாழ்க்கை அனைவருக்கும் அணுகக்கூடியதாக மாற்றப்பட்டுள்ளது என்றும், கடவுளுடனான ஒன்றிப்பின் மூலம் மக்கள் அமைதியையும் அச்சத்திலிருந்து விடுதலையையும் அனுபவிக்க அழைக்கிறது என்றும் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.

ஞானிகள் வழங்கிய பரிசு

குழந்தை இயேசுவுக்கு ஞானிகள் மூவரும் வழங்கிய பரிசுகளான பொன், தூபம், வெள்ளைப்போளம் குறித்து விளக்கிய திருத்தந்தை, அவை பிறருக்கு நம்மையே கொடுப்பதன் ஆழமான அர்த்தத்தை நமக்கு வெளிப்படுத்துகிறது என்று மொழிந்தார்.

இந்தப் பரிசுகள் ஒரு குழந்தைக்குப் பயனுள்ளதாகத் தெரியவில்லை என்றாலும், அவை எல்லாவற்றையும் கொடுக்கும் விருப்பத்தைக் காட்டுகின்றன என்று கூறிய திருத்தந்தை, இது ஆலயத்தில் தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே கொடுத்த ஏழைக் கைம்பெண்ணின் காணிக்கையை எடுத்துக்காட்டுகிறது (லூக்கா 21:1-4) என்றும், உண்மையாகக் கொடுப்பது என்பது முழுமையானது மற்றும் தன்னலமற்றது என்பதை வலியுறுத்துகிறது என்றும் சுட்டிக்காட்டினார்.

நீதி, சமத்துவம் மற்றும் வளங்களை மறுபகிர்வு செய்வதன் அடிப்படையில் சமூகத்தை மறுசீரமைக்க அழைப்பு விடுத்த அண்மைய யூபிலி ஆண்டுடன் இக்கருத்தை இணைத்துக் காட்டிய திருத்தந்தை, இது ஒரு நியாயமான உலகத்திற்கான கடவுளின் கனவை எதிரொலிக்கிறது என்றார்.

ஒருமைப்பாடு மற்றும் அமைதி பற்றிய புதிய கதை

கிறிஸ்தவர்கள் பகிர்ந்து கொள்ளும் நம்பிக்கை உண்மையான உலகில் அடித்தளமாக இருக்க வேண்டும் என்றும், அது ஒரு புதிய கதையை உருவாக்கும் ஊக்கமளிக்கும் செயலாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்த திருத்தந்தை, ஒருமைப்பாடு மற்றும் அமைதி பற்றிய புதிய கதையை நாம் உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நம்பிக்கையின் கைவினைஞர்களாக இருப்போம்

நாம் நம்பிக்கையின் கைவினைஞர்களாக இருக்க வேண்டும் என்றும், இயேசுவின் வார்த்தைகள் வாழ்ந்து காட்டப்படும், சமத்துவமின்மைகள் நியாயத்தால் மாற்றப்படும், மற்றும் போரை விட அமைதிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் ஓர் எதிர்காலத்தை உருவாக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 

இறுதியாக, நீதி மற்றும் ஒருவருக்கொருவர்மீதான அக்கறையால் வடிவமைக்கப்பட்ட எதிர்காலத்தை நோக்கி வேறுபட்ட பாதையில் பயணிக்க வேண்டும் என்று விசுவாசிகள் அனைவரையும் ஊக்குவித்து, தனது சிறப்பு நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 ஜனவரி 2026, 12:09