தேடுதல்

யூபிலி ஆண்டிற்காக ஒத்துழைப்பு நல்கிய அமைப்பினருடன் திருத்தந்தை யூபிலி ஆண்டிற்காக ஒத்துழைப்பு நல்கிய அமைப்பினருடன் திருத்தந்தை   (ANSA)

உங்களின் அர்ப்பணம் நிறைந்த பணிகளுக்கு நன்றி!

இத்தாலிய அரசு, உள்ளூர் அதிகாரிகள், திருப்பீடத்தின் பல்வேறு துறைகள் மற்றும் புனித ஆண்டின் போது உரோமைக்கு வருகை புரிந்த 3 கோடிக்கும் அதிகமான திருப்பயணிகளை வரவேற்க உதவிய ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களுக்கும் தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

"உங்கள் அர்ப்பணிப்பு நிறைந்த பணியின் வழியாக, திருப்பயணிகள் பலர் மீண்டும் தங்கள் எதிர்நோக்கைக் கண்டறியவும், புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையுடனும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற விருப்பத்துடனும் வாழ்க்கையில் தங்கள் பயணத்தைத் தொடரவும் நீங்கள் உதவியுள்ளீர்கள்" என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஜனவரி 10, சனிக்கிழமையன்று, யூபிலி ஆண்டிற்காக ஒத்துழைப்பு நல்கிய அமைப்புகளின் பிரதிநிதிகளைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது அவர்களிடம் இவ்வாறு மொழிந்த திருத்தந்தை,  “இந்த முக்கியமான விசுவாச தருணத்தை அனைவரும் முழுமையாக அனுபவிக்க உதவிய உங்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகளும் பாராட்டுகளும்” என்று கூறினார்.

நான்கு நாட்களுக்கு முன்பு நிறைவடைந்த எதிர்நோக்கின் யூபிலி ஆண்டை ஆதரித்த குடிமை மற்றும் திருஅவைசார் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டார் திருத்தந்தை.

இத்தாலிய அரசு, உள்ளூர் அதிகாரிகள், திருப்பீடத்தின் பல்வேறு துறைகள் மற்றும் புனித ஆண்டின் போது உரோமைக்கு வருகைபுரிந்த 3 கோடிக்கும் அதிகமான திருப்பயணிகளை வரவேற்க உதவிய ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களுக்கும் தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்.

யூபிலி ஆண்டு அனுபவத்தின் முக்கியத்துவத்தை, குறிப்பாக மன்னிப்பு மற்றும் இரக்கத்தின் கருப்பொருள்களை அவர்களுக்கு எடுத்துக்காட்டிய திருத்தந்தை, “இது பலர் கிறிஸ்துவை ஆழமான வழிகளில் சந்திக்க அனுமதித்தது” என்றும் சுட்டிக்காட்டினார்.

உலகம் முழுவதிலுமிருந்து உரோமை நகருக்கு வருகை தந்த இளைஞர்களின் உற்சாகத்தையும் இறைவேண்டல் நிறைந்த அர்ப்பணிப்பையும் கண்டு, இதற்குக் காரணமான அவர்களின் பங்களிப்பையும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

இளைஞர்களின் எதிர்காலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று  அவர்களுக்கு அழைப்புவிடுத்த  திருத்தந்தை, அன்பு, தூய்மை  மற்றும் நன்மையை நோக்கி இளையோரை வழிநடத்த எடுத்துக்காட்டான வாழ்க்கை வாழ வேண்டியதன் அவசியத்தையும் அவர்களுக்கு எடுத்துக்காட்டினார்.

தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவிக்கும் வண்ணமாக, ஒவ்வொரு பிரதிநிதிக்கும் சிறிய சிலுவை ஒன்றைப் பரிசாக வழங்கிய திருத்தந்தை, “இது யூபிலி ஆண்டுப் பணியில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்ட அனைவரின் பயனுள்ள ஒத்துழைப்பையும் குறிக்கிறது” என்றும் குறிப்பிட்டார்.

இறுதியாக, அவர்கள் அனைவருக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கிய திருத்தந்தை, புத்தாண்டு வாழ்த்துக்களைத்  தெரிவித்துக்கொண்டு, தனது உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 ஜனவரி 2026, 13:28