மக்களை ஈர்ப்பது திருஅவை அல்ல, கிறிஸ்துவே!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
"நாம் பல்வேறு பின்னணிகள், அனுபவங்கள் மற்றும் அருள்கொடைகளைப் பெற்ற ஒரு பன்முகத்தன்மை கொண்ட குழு. நமது முதல் பணி ஒருவரையொருவர் அறிந்துகொள்வதும் உரையாடுவதும் ஆகும், இதன் மூலம் நாம் ஒன்றிணைந்து திருஅவைக்குப் பணியாற்ற முடியும்" என்றும், "நாம் ஒன்றிப்பில் வளர்ந்து, அதன் வழியாக தோழமை உணர்வின் ஒரு மாதிரியை வழங்க முடியும் என நான் நம்புகிறேன்" என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
ஜனவரி 07, புதன்கிழமையன்று, சிறப்புநிலை கர்தினால்கள் ஆலோசனை அவைக் கூட்டத்தைத் தொடங்கிவைத்து வழங்கிய உரையில் இவ்வாறு தெரிவித்த திருத்தந்தை, ஆண்டவருடைய திருக்காட்சிப் பெருவிழாவிற்கு அடுத்தநாள் நாம் ஒன்றுகூடியிருப்பது மிகவும் பொருத்தமானதாக இருக்கின்றது என்றும் கூறினார்.
ஒன்றிப்பு, பணி மற்றும் செவிசாய்ப்புக்கான வலுவான அழைப்பை விடுத்த திருத்தந்தை, மதமாற்றம் செய்வதன் மூலம் அல்லாமல் கிறிஸ்துவின் அன்பின் மூலம் மற்றவர்களை ஈர்ப்பதன் வழியாக திருஅவை தனது பணியை நிறைவேற்றுகிறது என்றும் குறிப்பிட்டார்.
ஜனவரி 06, செவ்வாயன்று சிறப்பிக்கப்பட்ட திருக்காட்சிப் பெருவிழாவிற்கு அடுத்த நாள் உரையாற்றிய திருத்தந்தை இதனை "கிறிஸ்து நாடுகளின் ஒளி" என்று தெரிவித்ததுடன், இந்தக் கருத்தை இறைவாக்கினர் எசாயாவின் கண்ணோட்டத்துடனும், இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கத்தின் படிப்பினைகளுடனும் இணைத்துக்காட்டினார்.
திருத்தந்தையர் பதினாறாம் பெனடிக்ட் மற்றும் பிரான்சிஸ் ஆகியோரின் படிப்பினைகளை நினைவு கூர்ந்த திருத்தந்தை, அன்பின் மூலம் மக்களை ஈர்ப்பதன் வழியாக திருஅவை வளர்ச்சி பெறுகிறது என்றும், இந்த அன்பு கடவுளிடமிருந்து வருகிறது, அது இயேசு கிறிஸ்துவில் காட்டப்படுகிறது என்றும் மொழிந்தார்.
"மக்களை ஈர்ப்பது திருஅவை அல்ல, கிறிஸ்துவே" என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை, கிறிஸ்துவின் அன்பை தங்கள் மூலம் வெளிப்படுத்த அனுமதிக்கும்போதுதான் கிறிஸ்தவச் சமூகங்கள் மற்றவர்களை ஈர்க்கின்றன என்றும், "அன்பு மட்டுமே நம்பகத்தன்மைக் கொண்டது; அன்பை மட்டுமே நம்ப முடியும்" என்றும் விளக்கினார்.
பிரிவினை திருஅவையின் சான்று வாழ்வை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்று எச்சரித்ததுடன், ஒன்றிப்பு மட்டுமே ஓர் ஈர்ப்புத் திறனைக் கொண்டுள்ளது என்பதைக் குறிப்பிட்ட திருத்தந்தை, யோவானின் நற்செய்தியை மேற்கோள் காட்டி, கிறிஸ்தவர்களிடையே அன்பு என்பது சீடத்துவத்தின் வரையறுக்கும் அடையாளம் மற்றும் உண்மையான மறைபரப்புத் திருஅவையின் அடித்தளம் என்று வலியுறுத்தினார்.
கர்தினால்கள் அவையின் பணியைப் பற்றி குறித்து எடுத்துக்காட்டிய திருத்தந்தை, கர்தினால்களிடையே தோழமை, உரையாடல் மற்றும் கவனமுடன் கூடிய செவிசாய்ப்பை வலியுறுத்திய அவர், ஒன்றிணைந்த பயணத்தை (synodalty) திருஅவை வாழ்க்கையின் ஒரு வழிமுறை மற்றும் ஒரு பாணி என்று விவரித்த அதேவேளை, அண்மைய ஆண்டுகளின் ஒன்றிணைந்த பயண (synodalty) செயல்முறையின் தொடர்ச்சியாக, எல்லாவற்றிற்கும் செவிமடுக்க விரும்புவதாகவும் கூறினார்.
இன்றையத் திருஅவையின் பணி, உரோமைத் தலைமை அலுவலகத்தின் பணி, ஒன்றிணைந்த பயணம் (synodalty) மற்றும் திருவழிபாடு போன்ற முக்கியமான தலைப்புகளை கர்தினால்கள் விவாதிப்பார்கள் என்றும், இந்தச் சந்திப்பு அதிகாரப்பூர்வ ஆவணங்களை உருவாக்காது, ஆனால் அடுத்த ஓரிரு ஆண்டுகளுக்குத் தனது மற்றும் திருப்பீடத்தின் முன்னுரிமைகளை நெறிப்படுத்த உதவும் வகையில் உரையாடலைத் தொடரும் என்று தெரிவித்தார்.
இறுதியாக, "நாம் ஒருவருக்கொருவர் செவிசாய்த்து ஒன்றிணைந்து பயணிக்கும் விதம் புதிய ஒன்றை உருவாக்கும்" என்று உரைத்த திருத்தந்தை, "கர்தினால்கள் ஆலோசனை அவையின் பணியை தூய ஆவியின் வழிகாட்டுதலிலும் திருஅவையின் தாயான மரியாளின் பரிந்துரை இறைவேண்டலிலும் ஒப்படைத்து தனது உரையை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
