"நலமான சமூகங்கள் மனித உயிரைப் பாதுகாக்கின்றன" - திருத்தந்தை
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
"மனித வாழ்க்கையின் புனிதத்தைப் பாதுகாத்து, அதை மேம்படுத்த தீவிரமாகச் செயல்படும்போதுதான் ஒரு சமூகம் நலமானதாகவும், உண்மையிலேயே முன்னேற்றம் நிறைந்ததாகவும் காணப்படுகிறது" என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
"2026 வாழ்க்கைக்கான அணிவகுப்பு" என்ற தலைப்பில் அமெரிக்காவின் வாஷிங்டனில் இடம்பெறும் நிகழ்வொன்றின் பங்கேற்பாளர்களுக்கு ஜனவரி 22, வியாழனன்று, அனுப்பியுள்ள செய்தியொன்றில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை, அவர்களுக்குத் தனது வாழ்த்துக்களையும் ஆன்மிக ஆதரவையும் வழங்கியுள்ளார்.
பிறக்காத குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக இந்நிகழ்வின் பங்கேற்பாளர்களைப் பாராட்டியுள்ள திருத்தந்தை, "மனித உயிரைப் பாதுகாப்பதே அனைத்து மனித உரிமைகளுக்கும் அடிப்படை" என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு மக்கள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் உரையாடல் மூலம், ஒவ்வொரு கட்டத்திலும் உயிருக்கு மரியாதை அளிக்கும் முயற்சியில் ஈடுபடுமாறு, குறிப்பாக இளைஞர்களை ஊக்குவித்துள்ள திருத்தந்தை, "மனித வாழ்க்கையின் புனிதத்தைப் பாதுகாக்கும்போதுதான் ஒரு சமூகம் உண்மையிலேயே முன்னேற்றம் காண முடியும்" என்று எடுத்துக்காட்டியுள்ளார்.
இறுதியாக, இந்நிகழ்வில் கலந்துகொள்பவர்களுக்குத் தனது அன்பான ஆதரவையும் ஆன்மிக ஆதரவையும் உறுதியளித்துள்ள திருத்தந்தை, அவர்கள் அனைவரையும் அன்னை கன்னி மரியாவின் பாதுகாவலில் ஒப்படைத்து தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கி தனது உரையை நிறைவு செய்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
