நல்ல சமாரியராம் இயேசுவைப் பின்பற்றி வாழ்ந்திடுங்கள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
"அன்பு செயலற்றது அல்ல; அது மற்றவரைச் சந்திக்கச் செல்கிறது. அண்டை வீட்டாராக இருப்பது உடல் அல்லது சமூக நெருக்கத்தால் தீர்மானிக்கப்படுவதில்லை, மாறாக அன்பு செலுத்துவதற்கான முடிவால் தீர்மானிக்கப்படுகிறது" என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
பிப்ரவரி 11, புதன்கிழமையன்று, "சமாரியரின் பரிவிரக்கம்: மற்றவரின் வலியைத் தாங்கிக் கொண்டு அன்பு செலுத்துதல்" என்ற மையக்கருத்தில் பெரு நாட்டின் சிக்லாயோவில் கொண்டாடப்படவிருக்கும் 34-வது உலக நோயுற்றோர் நாளிற்கான செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை.
ஜனவரி 19, திங்கள்கிழமையன்று வெளியிட்டுள்ள இந்தச் செய்தியில் ஐந்து தலைப்புகளின்கீழ் தனது சிந்தனைகளை விசுவாசிகளோடுப் பகிர்ந்துள்ளார் திருத்தந்தை
01. நல்ல சமாரியரின் மீது கவனம் செலுத்துங்கள்:
இரக்கம், பிறரன்புப் பணி மற்றும் சமூக அக்கறையின் ஒரு முன்மாதிரியாக நல்ல சமாரியரின் உவமையை (லூக்கா 10:25-37) சிந்திக்க அழைப்பு விடுத்துள்ள திருத்தந்தை, பரிவிரக்கம் என்பது செயலற்றது அல்ல; அதற்குத் துன்பப்படுபவர்களிடம் அதிக ஈடுபாடும் தனிப்பட்ட நெருக்கமும் தேவை என்று கூறியுள்ளார்.
02. எதிர்கொள்ளலின் (encounter) கொடை
"நமக்கு அடுத்திருப்போரிடம் உண்மையான அன்பு காட்டுவது என்பது, மற்றவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அப்பால், அவர்களை நிறுத்தி, கவனித்து, தனிப்பட்ட முறையில் கவனித்துக்கொள்வதை உள்ளடக்கியது" என்று தெரிவித்துள்ளார் திருத்தந்தை.
"அடுத்திருப்போராக இருப்பது என்பது ஒரு செயலில் உள்ள முடிவாகும்" என்றும், "இது மூலாதாரமான தெய்வீக சமாரியர் இயேசு கிறிஸ்துவால் ஈர்க்கப்படுவதாகும்" என்றும் மொழிந்துள்ள திருத்தந்தை, "உண்மையான இரக்கம் கொடுப்பவரை மாற்றுகிறது" என்றும், "அவர்களைக் கிறிஸ்துவுடன் இணைக்கிறது மற்றும் அன்பான சேவையில் மகிழ்ச்சியைக் கொண்டு வருகிறது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
03. நோயாளர்களைப் பராமரிப்பதற்கான பகிரப்பட்ட பணி
"பரிவிரக்கம் என்பது குடும்பங்கள், நலவாழ்வுப் பணியாளர்கள் மற்றும் மேய்ப்புப் பணி பராமரிப்பு வலையமைப்புகளை உள்ளடக்கிய ஒரு சமூகப் பொறுப்பாகும்" என்று எடுத்துக்காட்டியுள்ள திருத்தந்தை, "நோயுற்றவர்களைப் பராமரிப்பது திருஅவைப் பணியின் ஒரு முக்கிய பகுதியாகும் மற்றும் இது சமூகத்தின் நலனைப் பிரதிபலிக்கிறது" என்றும், "துன்பத்தில் மற்றவர்களுக்குப் பணியாற்றுவது சமூகத்தை கிறிஸ்துவில் ஒரே உடலாக ஒன்றிணைக்கிறது" என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
04. கடவுளை அன்புகூர்வது இரக்கத்தைத் தூண்டுகிறது
"நமக்கு அடுத்திருப்போர் மீதான அன்பு கடவுள் மீதான அன்பிலிருந்து பிரிக்க முடியாதது" என்றும், "அக்கறை மற்றும் பணிக்கான செயல்பாடுகள் இறையன்பின் வெளிப்பாடுகள்" என்றும் விளக்கியுள்ள திருத்தந்தை, "உண்மையான சுய அன்பு என்பது உலக வெற்றி அல்லது தகுதிநிலையிலிருந்து அல்ல, கடவுள் மற்றும் பிறருடனான உறவுகளிலிருந்து வருகிறது" என்றும், "உடன்பிறந்த அன்பில் வேரூன்றிய கிறிஸ்தவ வாழ்க்கை மனிதகுலத்தின் காயங்களை ஆற்ற உதவுகிறது" என்றும் விவரித்துள்ளார்.
05. இறைவேண்டல் மற்றும் ஆசீர்
நோயாளர்களின் அன்னையாம் கன்னி மரியாவிடம் துன்பப்படுபவர்களுக்காகவும், அவர்களைப் பராமரிப்பவர்களுக்காகவும், இறைவேண்டல் செய்யுமாறு ஊக்குவித்துள்ள திருத்தந்தை, குறிப்பாக, இந்த உலக நோயுற்றோர் நாளில், நோயுற்றோர், அவர்களது குடும்பங்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்குத் தனது அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கி தனது செய்தியை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
