தேடுதல்

திருத்தந்தையின் ஜனவரி மாத செபக் கருத்து - இறைவார்த்தையுடன் இறைவேண்டல்

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வெளியிட்டுள்ள ஜனவரி மாதத்திற்கான செபக்கருத்து, மிகவும் இரக்கமுள்ள மற்றும் நம்பிக்கை நிறைந்த உலகைக் கட்டியெழுப்புவதற்கான புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பைத் தூண்டுகிறது.

ஜான்சி ராணி  அருளாந்து - வத்திக்கான்

இறைவார்த்தையை மையமாகக் கொண்ட ஒருமித்த செபத்தின் மூலம் தங்கள் ஆன்மிக வாழ்வைப் புதுப்பிக்குமாறு கிறிஸ்தவச் சமூகங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஜனவரி 07, புதனன்று, வெளியிடப்பட்டுள்ள ஜனவரி மாதத்திற்கான செபக்கருத்து அடங்கிய காணொளி ஒன்றில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை, முழு கருத்தையும் செப வடிவில் வழங்கியுள்ளார்.

மனித இதயத்தின் அமைதியின்மைக்கு மத்தியில், இறைவார்த்தையைக் கேட்பது ஒளி, வழிகாட்டுதல் மற்றும் நம்பிக்கையின் ஆதாரமாக இருப்பதாகக் கூறியுள்ளார்.

இந்த செபம் இயேசுவை தந்தையின் உயிருள்ள வார்த்தையாக வெளிப்படுத்துகிறது என்றும், நற்செய்தி மட்டுமே மனித வாழ்க்கைக்கு அமைதி, அர்த்தம் மற்றும் முழுமையைக் கொண்டுவர முடியும் என்பதை உறுதிப்படுத்துகிறது என்றும் மொழிந்துள்ளார்.

மேலும் இது விசுவாசிகளை நாள்தோறும் இறைவார்த்தைகளை எதிர்கொள்ள அழைக்கிறது என்றும், கடவுளுடைய வார்த்தை தனிப்பட்ட மற்றும் சமூக முடிவுகளை சந்திக்கவும்,, வளர்க்கவும், வழிநடத்தவும் அனுமதிக்கிறது என்றும் உரைத்துள்ளார்.

திருநூல் மிகவும் வலிமை வாய்ந்ததாகக் காணப்படுகிறது என்றும், நாம் சோர்வாக இருக்கும்போது ஆறுதலையும், இருள்சூழ்ந்த தருணங்களில் நம்பிக்கையையும், விசுவாச சமூகங்களுக்குப் பலத்தையும் தருகிறது என்றும் விளக்கியுள்ளார்.

இந்த செபம், கடவுளுடைய வார்த்தையை கிறிஸ்தவ அடையாளத்தின் அடித்தளமாகக் கொண்டு, விசுவாசிகளை மகன்களாகவும் மகள்களாகவும், சகோதரர் சகோதரிகளாகவும், இயேசுவின் பணிக்குத் தங்களை அர்ப்பணித்த சீடர்களாகவும் உருவாக்குகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

திருஅவையானது, இறைவார்த்தைகளுக்கு செபத்துடன் செவிசாய்ப்பதிலும், நற்செய்தியை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்வதிலும் வேரூன்றிய ஒரு சமூகமாக மாற ஊக்குவிக்கிறது என்று எடுத்துக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

இறைவார்த்தையுடனான இந்தச் சந்திப்பின் வழியாக, விசுவாசிகள் நம்பிக்கையில் வளரவும், மிகவும் வலுவற்றவர்களுக்குப் பணியாற்றுவதன் வழியாகவும், மன்னிப்பு, உறவுப் பாலங்களை கட்டியெழுப்புதல் மற்றும் வாழ்க்கை மற்றும் நம்பிக்கையின் அறிக்கை மூலம் பதிலளிக்கவும் அழைக்கப்படுகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

இறுதியாக, இதயத்திலிருந்து செயலுக்கு நகரும் நம்பிக்கைக்கான அழைப்போடு ஜனவரி மாதத்திற்கான தனது செபக் கருத்தை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 ஜனவரி 2026, 14:26