கர்தினால்கள் ஆலோசனை அவைக் கூட்டம் ஓர் அருளின் தருணம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
"நமது கர்தினால்கள் அவை, பல திறமைகள் மற்றும் குறிப்பிடத்தக்க அருள்கொடைகளைப் பெற்றிருந்தாலும், முதன்மையாக வெறும் நிபுணர்களின் குழுவாக அல்ல, மாறாக ஒரு நம்பிக்கை சமூகமாக அழைக்கப்படுகிறது என்றும், ஒவ்வொரு நபரும் கொண்டு வரும் கொடைகள் இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டு அவரால் திருப்பித் தரப்படும்போது மட்டுமே, அவருடைய அருளின்படி அவை மிகப்பெரிய பலனைத் தரும்" என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
ஜனவரி 08, வியாழக்கிழமையன்று, சிறப்புநிலை கர்தினால்கள் ஆலோசனை அவைக் கூட்டத்தில் தலைமையேற்று நிகழ்த்திய சிறப்புத் திருப்பலியில் வழங்கிய மறையுரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை, திருச்சபைத் தலைவர்களை நிதானமாகப் பயணிக்கவும், செவிமடுக்கவும், ஒன்றாகத் தெளிந்து தேர்வுசெய்யவும் வலியுறுத்தினார்.
திருஅவை தனது ஒன்றிப்பை திட்டங்கள் அல்லது வியூகங்கள் மூலம் அல்ல, மாறாக இறைவேண்டல், அமைதி மற்றும் கடவுளின் திருவுளத்தை ஒன்றாகச் சிந்திப்பதன் மூலம் காட்டும் ஓர் அருளின் தருணம் என்று கர்தினால்கள் ஆலோசனை அவையை விவரித்தார் திருத்தந்தை.
'கர்தினால்கள் அவை' என்ற வார்த்தைக்கு 'பேரவை' அல்லது 'ஒரு கணம் அமைதி' என்று ஆகிய இரண்டையும் அர்த்தப்படுத்திய திருத்தந்தை, நமது பரபரப்பான உலகில், ஓர் இடைநிறுத்தம் எடுப்பது எதிர்காலத்தை உணர்த்தும் ஒரு செயலாக இருக்கலாம் என்று சுட்டிக்காட்டினார்.
"நாம் நமது தனிப்பட்ட அல்லது குழுவின் செயல்பாட்டுத் திட்டங்களை ஊக்குவிப்பதற்காக ஒன்றுகூடியிருக்கவில்லை, ஆனால் நமது திட்டங்களையும் அகத்தூண்டுதல்களையும் கடவுளின் தெளிந்து தேர்தலுக்கு ஒப்படைக்கவே நாம் ஒன்றுகூடியுள்ளோம்" என்றும் விளக்கினார் திருத்தந்தை.
கர்தினால்கள் அவை, நிபுணர்களின் குழுவாக இருப்பதற்குப் பதிலாக, நம்பிக்கையின் சமூகமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை, ஒவ்வொரு உறுப்பினரின் கொடைகளும் திறமைகளும் இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டு, அவரது அருளால் மாற்றப்பட்டுத் திரும்பும்போது மட்டுமே பலனளிக்கும் என்று மொழிந்தார்.
மூவொரு கடவுளில் காணப்படும் அன்பிலிருந்து வரும் திருஅவையின் ஒன்றிப்புணர்வை எடுத்துக்காட்டிய திருத்தந்தை, மற்றவர்களிடம் கடவுளின் ஒளியைக் காண வேண்டும் என்ற திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்களின் படிப்பினைகளையும் நினைவூட்டினார்.
மேலும் "உண்மையான தெளிந்து தேர்தல் என்பது இறைவேண்டல், மற்றும் கவனமாக செவிசாய்ப்பதன் மூலம் வருகிறது" என்றும், "இது திருஅவைத் தலைவர்கள் தங்கள் மக்களை உண்மையிலேயே பிரதிநிதித்துவப்படுத்தவும் பராமரிக்கவும் உதவுகிறது" என்றும் கூறினார் திருத்தந்தை.
உலகம் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றிப் பேசுகையில், அமைதி, நன்மை மற்றும் அர்த்தத்திற்கான பரவலான ஏக்கத்தை ஒப்புக்கொண்ட திருத்தந்தை, திருச்சபையின் பணியை, அப்பங்கள் மற்றும் மீன்களின் பலுகுதலின் நற்செய்தி அருளடையாளத்துடன் ஒப்பிட்டுக்காட்டியதுடன், தீர்வுகள் எப்போதும் உடனடியாகக் கிடைக்காவிட்டாலும், விசுவாசிகள் நம்பிக்கைக்கொள்வதில் ஒன்றாகச் செயல்படும்போது தேவையானதை வழங்க கடவுள் ஒருபோதும் தவறமாட்டார் என்று குறிப்பிட்டார்.
தன்னுடன் இணைந்து ஓய்வின்றி உழைத்ததற்காக கர்தினால்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டதுடன், திருஅவையை கடவுளிடம் ஒப்படைத்த திருத்தந்தை, "நீங்கள் கட்டளையிடுவதைக் கொடுங்கள், நீங்கள் விரும்புவதைக் கட்டளையிடுங்கள்" என்ற புனித அகுஸ்தினாரின் சொற்களை மேற்கோள்காட்டி தனது மறையுரையை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
