தேடுதல்

திருத்தந்தையுடன் பர்ஹாம் சாலிஹ் திருத்தந்தையுடன் பர்ஹாம் சாலிஹ்   (ANSA)

அனைத்துலகளவில் புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவளிக்கிறது திருஅவை!

"மோதல்களைத் தடுப்பதற்கும், புலம்பெயர்ந்தோர் தங்கள் வாழ்க்கையை மாண்புடனும் பாதுகாப்புடனும் மீண்டும் கட்டியெழுப்ப அனுமதிக்கும் நிலையான தீர்வுகளைக் கண்டறிவதற்கும் அனைத்துலகச் சமூகம் இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டும்" : பர்ஹாம் சாலிஹ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஜனவரி 26, திங்களன்று, புதிதாக நியமிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் அவையின் புலம்பெயர்ந்தோருக்கான உயர் ஆணையர் பர்ஹாம் சாலிஹ் அவர்கள், திருப்பீடத்தில் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களைச் சந்தித்து, தற்போதைய புலம்பெயர்ந்தோர் நெருக்கடி மற்றும் உதவி வழங்குவதில் திருஅவையின் முக்கிய பங்களிப்பு குறித்து விவாதித்ததை வத்திக்கான் செய்திகளுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் விளக்கியுள்ளார்.

இவ்வாண்டு ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் தனது பொறுப்பை ஏற்றுக்கொண்ட சாலிஹ் அவர்கள், தற்போது உலகளவில் 11.73 கோடியாக அதிகரித்து வரும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை நிவர்த்தி செய்வதில் உலகளாவிய ஒத்துழைப்பின் அவசரத்தை தனது சந்திப்பின்போது வலியுறுத்தியதையும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது, திருத்தந்தையின் அசைக்க முடியாத தார்மீக ஆதரவைப் பாராட்டியதாகவும், நம்பிக்கை சார்ந்த அமைப்புகள், குறிப்பாக, திருஅவை ஐக்கிய நாடுகள் அவையின் புலம்பெயர்ந்தோர் ஆணையத்தின் (UNHCR) பணியை முன்னெடுப்பதில் முக்கிய துணைவர்களாக இருப்பதைக் குறிப்பிட்டுக் காட்டியதாகவும் எடுத்துரைத்தார் சாலிஹ்.

திருத்தந்தையுடன் உரையாடும் உயர் ஆணையர் பர்ஹாம் சாலிஹ்
திருத்தந்தையுடன் உரையாடும் உயர் ஆணையர் பர்ஹாம் சாலிஹ்   (ANSA)

"திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தொடர்ந்து புலம்பெயர்ந்தோரை ஆதரித்து வருகிறார்" என்றும், "அவர்களின் அவல நிலையை சமாளிக்க உலகளாவிய நடவடிக்கையை வலியுறுத்தி வருகிறார்" என்றும் தனது நேர்காணலின்போது கூறினார் சாலிஹ்.

வரையறுக்கப்பட்ட வளங்கள், அதிகரித்து வரும் இடம்பெயர்வு மற்றும் நீண்டகால தீர்வுகளுக்கான தேவை உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் அவையின் புலம்பெயர்ந்தோர் ஆணையம் எதிர்கொள்ளும் குறிப்பிடத்தக்க சவால்கள் குறித்தும் சாலிஹ் விளக்கினார்.

"அமெரிக்கா போன்ற முக்கிய நன்கொடையாளர்களிடமிருந்து நிதிக் குறைப்புகளை எதிர்கொண்டுள்ள நிலையில், உதவித் திறனை மேம்படுத்த அனைத்துலக ஆதரவையும் சீர்திருத்தங்களையும் அதிகரிக்க வேண்டும்" என்று அவர் அழைப்பு விடுத்தார்.

கென்யா மற்றும் சாட் போன்ற புலம்பெயர்ந்தோருக்கான உள்ளடக்கிய கொள்கைகளை ஏற்றுக் கொள்ளும் நாடுகளின் பங்களிப்பையும் அவர் எடுத்துரைத்தார்.

இறுதியாக, "மோதல்களைத் தடுப்பதற்கும், புலம்பெயர்ந்தோர் தங்கள் வாழ்க்கையை மாண்புடனும் பாதுகாப்புடனும் மீண்டும் கட்டியெழுப்ப அனுமதிக்கும் நிலையான தீர்வுகளைக் கண்டறிவதற்கும் அனைத்துலகச் சமூகம் இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டும்" என்று சாலிஹ் அவர்கள் வலியுறுத்தி தனது நேர்காணலை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 ஜனவரி 2026, 12:52