திருமுழுக்கு விசுவாசிகளுடன் நிலைத்திருக்கும் ஒரு 'புனித அடையாளம்'!

திருத்தந்தையின் நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரை, திருமுழுக்கு அருளடையாளத்தின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டிருந்தது. மேலும் கடவுளின் குழந்தைகளாக விசுவாசிகளை ஒன்றிணைக்கும் இந்த அடித்தள இறையருளுக்கு தங்கள் உறுதிப்பாட்டைப் புதுப்பித்துக்கொள்ளவும் அவர்களுக்கு அழைப்பு விடுத்தது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

"கடவுள் நம் வாழ்வில் தொலைவில் இல்லை அல்லது நம்மீது அக்கறையற்றவர் அல்ல. மாறாக, அவர் நம்முடன் இருக்கிறார், தம்முடைய வார்த்தையின் வழியாக தம்முடைய ஞானத்தைப் பகிர்ந்து கொள்கிறார், எல்லா மக்களுக்கும் தம்முடைய அன்பான திட்டத்தை வெளிப்படுத்துகிறார்" என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஜனவரி 11, ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு வழங்கிய நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையில் இவ்வாறு மொழிந்தார் திருத்தந்தை.

இந்நாளில் திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட ஆண்டவரின் திருமுழுக்குப் பெருவிழாக் குறித்த நற்செய்தி வாசகத்தை (காண்க. மத்  3: 13-17) மையமாகக் கொண்டு தனது சிந்தனைகளை விசுவாசிகளுடன் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை.

திருமுழுக்கைப் புதுப்பித்துக்கொள்ளுங்கள் 

திருஅவையின் வழிபாட்டு நாள்காட்டியில் பொதுக் காலத்தின் தொடக்கத்தை இயேசுவின் திருமுழுக்குப் பெருவிழா குறிக்கிறது என்று விளக்கிய திருத்தந்தை, இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி, அவருடைய வார்த்தையைக் கேட்டு, அவரது அன்புச் செயல்களை உருவகப்படுத்தி, அதன் வழியாக தாங்கள் பெற்ற சொந்த திருமுழுக்கைப் புதுப்பித்துக்கொள்ளும்படி விசுவாசிகளை வலியுறுத்தினார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தை எடுத்துக்காட்டி, இயேசு பாவமற்றவராக இருந்தபோதிலும், யோர்தான் ஆற்றில் யோவானால் திருமுழுக்குப் பெறத் தேர்ந்தெடுத்த ஆழமான தருணத்தை எடுத்துரைத்தார் திருத்தந்தை.

மூவொரு இறைவனின் பிரசன்னம்

"இந்தத் தருணத்தில், மூவொரு கடவுளின் பிரசன்னம் வெளிப்படுகிறது, அதாவது, இயேசு தண்ணீருக்குள் இறங்குகிறார், தூய ஆவி புறா வடிவில் அவர்மீது இறங்கி வருகிறார், “என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” என்று வானத்திலிருந்து இறைத்தந்தையின் குரலொலி ஒலிக்கிறது என்று விளக்கிய திருத்தந்தை, "இது மனித வரலாற்றில் கடவுளின் ஈடுபாட்டின் தொடக்கத்தைக் குறிக்கிறது" என்றும், "அவரது அன்பையும் இரக்கத்தையும் காட்டுகிறது" என்றும் எடுத்துரைத்தார்.

பாவிகளோடு பாவமற்ற இயேசு

"கடவுளின் எல்லையற்ற இரக்கத்தை வெளிப்படுத்த பாவமற்ற நிலையில் ஒரு பாவியைப் போல திருமுழுக்குப் பெற இயேசு தன்னை அனுமதிக்கிறார்" என்று கூறிய திருத்தந்தை, "இயேசு தீர்ப்பளிக்க அல்ல, மனுகுலத்திற்குப் பணியாற்றவும் மீட்பளிக்கவும் வந்தார்" என்று உரைத்தார்.

"திருமுழுக்கின் வழியாக, கிறிஸ்தவர்கள் பாவத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, புதிய மற்றும் நிலைவாழ்விற்குரிய அருளைப் பெறுகிறார்கள்" என்றும், "இது அனைத்து விசுவாசிகளின் அடையாளத்தையும் வடிவமைக்கும் மற்றும் அவர்களை விசுவாசத்தில் ஒரே குடும்பமாக ஒன்றிணைக்கும் ஒரு கொடை" என்றும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

திருமுழுக்கு ஒரு புனித அடையாளம்

அன்று காலை சிஸ்டைன் பேராலயத்தில் நிகழ்ந்த திருப்பலியில் புதிதாகப் பிறந்த பல குழந்தைகளுக்குத் திருமுழுக்குக் கொடுத்து, அவர்களைத் திருஅவையின் புதிய உறுப்பினர்களாக வரவேற்றதன் மகிழ்ச்சியை நினைவுகூர்ந்து, அதனை  ஒரு தனிப்பட்ட சிந்தனையாக விசுவாசிகளுடன் பகிர்ந்து கொண்டார் திருத்தந்தை.

திருமுழுக்கை விசுவாசிகளுடன் நிலைத்திருக்கும் ஒரு "புனித அடையாளம்" என்று அழைத்த திருத்தந்தை, "இது இருள் சூழ்ந்த காலங்களில் ஒளியையும், மோதல்களின் தருணங்களில் நல்லிணக்கத்தையும், இறப்பின் வேளையில் நம்பிக்கையையும் வழங்குகிறது" என்று குறிப்பிட்டார்.

அன்னை மரியாவிடம் வேண்டுவோம்

இறுதியாக, திருஅவையின் பணியை நிலைநிறுத்தவும், அனைத்துக் கிறிஸ்தவர்களின் நம்பிக்கையை ஆழப்படுத்தவும் அன்னை கன்னி மரியாவிடம் இறைவேண்டல் செய்யுமாறு விசுவாசிகளுக்கு அழைப்புவிடுத்து தனது மூவேளை இறைவேண்டல் உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.

திருமுழுக்கு எவ்வாறு வாழ்க்கையை மாற்றும் என்பதையும் கடவுளின் அன்பு மற்றும் இரக்கத்தின் மூலம் விசுவாசிகளை எவ்வாறு ஒன்றிணைக்கும் என்பதையும் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த விசுவாசிகளுக்கும், உலகெங்கிலும் உள்ள அனைவருக்கும் திருத்தந்தையின் சிந்தனைகள்  நினைவூட்டின.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 ஜனவரி 2026, 11:39