அனைவருக்குமான நமது அர்ப்பணிப்பு நிலையானதாக இருக்க வேண்டும்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
“வலுக்குறைந்த மனித உடலில் இயேசுவின் வருகை நம் நம்பிக்கையை மீண்டும் தூண்டியெழுப்புகிறது. அதேவேளையில், ஒன்று கடவுளுக்கும் மற்றொன்று நம் சக மனிதர்களுக்கும் என, அது நமக்கு இரு மடங்கு அர்ப்பணிப்பை அளிக்கிறது” என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
ஜனவரி 04, ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு வழங்கிய நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையில் இவ்வாறு மொழிந்தார் திருத்தந்தை.
கிறிஸ்து மனுவுருவெடுத்தலின் பொருள்
கிறிஸ்தவ நம்பிக்கை, கிறிஸ்து மனுவுருவெடுத்தலின் பொருள் மற்றும் எதிர்நோக்கின் யூபிலி ஆண்டின் முடிவு குறித்த தனது சிந்தனைகளைத் திருப்பயணிகளுடன் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, இன்னும் இரண்டு நாள்களில் புனித பேதுரு பெருங்கோவிலின் புனிதக் கதவு மூடப்படுவதோடு யூபிலி ஆண்டு முடிவடையும் என்பதை திருப்பயணிகளுக்கு நினைவுபடுத்தினார்.
யோவானின் நற்செய்தியை எடுத்துக்காட்டி, கிறிஸ்தவ எதிர்நோக்கு என்பது மனித நம்பிக்கையில் வேரூன்றவில்லை, மாறாக இயேசு கிறிஸ்துவில் மனிதராக மாறுவதற்கான கடவுளின் முடிவில் வேரூன்றியுள்ளது என்பதை வலியுறுத்திக் கூறினார் திருத்தந்தை.
மேலும் மனிதகுலத்தின் பயணத்தைப் பகிர்ந்து கொள்ளவும், அன்றாட வாழ்வில் மக்களுடன் நெருக்கமாக இருக்கவும் கடவுள் தேர்ந்தெடுத்தார் என்பதை இயேசுவின் மனுவுருவெடுத்தல் நமக்கு எடுத்துக்காட்டுகிறது என்று குறிப்பிட்டார் திருத்தந்தை.
இரட்டை அர்ப்பணிப்பு
கடவுளுக்கு நம்பகத்தன்மையுடன் இருப்பது மற்றும் மற்றவர்கள் மீதான பொறுப்பு என இந்த எதிர்நோக்கிலிருந்து உருவாகும் "இரட்டை அர்ப்பணிப்பை" குறித்து விளக்கிய திருத்தந்தை, கடவுள் தொலைவில் இல்லை, மாறாக மனித வலுவற்ற இயல்பு மற்றும் அன்றாடச் சூழ்நிலைகளில் இருக்கிறார் என்பதை உணர்ந்து, உறுதியான மற்றும் மனுவுருவெடுத்த ஒரு நம்பிக்கையை வாழ கிறிஸ்தவர்களை வலியுறுத்தினார்.
மேலும் ஒவ்வொரு நபரின் மாண்பையும் மதிக்க வேண்டும் என்றும், ஒருமைப்பாடு, நீதி, அமைதி மற்றும் வலுக்குறைந்தவர்களுக்கான அக்கறை ஆகியவற்றை விசுவாசத்தின் அத்தியாவசிய வெளிப்படுத்திறன்களாக வலியுறுத்த வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.
கடவுளுக்கும் அடுத்திருப்போருக்கும் பணியாற்ற உதவுங்கள்
மகிழ்ச்சியை முன்னெடுத்துச் செல்ல விசுவாசிகளை ஊக்குவித்து, அவர்களைக் கன்னி மரியாவின் பரிந்துரை செபத்தில் ஒப்படைத்த திருத்தந்தை, விசுவாசிகள் கடவுளுக்கும் தங்களுக்கு அடுத்திருப்போருக்கும் பணியாற்ற உதவுமாறு கேட்டுக் கொண்டு தனது நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
