அமைதியையும் நம்பிக்கையையும் புதுப்பித்துக் கொள்ளுங்கள்!

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், புத்தாண்டைத் தொடங்கி வைத்து, மக்களிடையே அமைதி, நம்பிக்கை மற்றும் நட்புக்கான வலுவான வேண்டுகோளை விடுத்ததுடன், மோதல் மற்றும் பிரிவினையைத் தாண்டி உலகம் முன்னேற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் -  வத்திக்கான்

"நன்மைகள் நிறைந்த படைப்பாளரான கடவுள், மரியாவின் இதயத்தையும் நம் இதயங்களையும் எப்போதும் அறிந்திருக்கிறார்" என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஜனவரி 01, வியாழக்கிழமையன்று, ‘கன்னி மரியா கடவுளின் தாய்’ என்ற பெருவிழாவைச் சிறப்பித்த வேளை, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு வழங்கிய சிறப்பு நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையில் இவ்வாறு மொழிந்தார் திருத்தந்தை.

பிரிவினையைத் தாண்டி உலகம் முன்னேற வேண்டும்

மக்களிடையே அமைதி, நம்பிக்கை மற்றும் நட்புக்கான வலுவான வேண்டுகோளுடன் புத்தாண்டைத் தொடங்கிய திருத்தந்தை, “மோதல் மற்றும் பிரிவினையைத் தாண்டி உலகம் முன்னேற வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

“மனிதகுலத்தின் நன்மைக்கான உண்மையான விருப்பத்துடன் இருந்தால் மட்டுமே பழைய ஆண்டிலிருந்து புதிய ஆண்டிற்குள் நுழைவது அர்த்தமுள்ளதாக இருக்கும்” என்று எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.

நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள்

நிறைவடைந்து வரும் யூபிலி ஆண்டைக் குறித்துச் சிந்தித்த திருத்தந்தை, விசுவாசிகள் தங்கள் இதயங்களை கடவுளிடம் திருப்புவதன் வழியாக, நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுமாறும், தவறுகளை மன்னிப்பாகவும், துன்பங்களை ஆறுதலாகவும் மாற்றுமாறும் ஊக்குவித்தார்.

இயேசு கிறிஸ்துவை மையமாகக் கொண்டு, தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, “மனச்சான்றுகளை ஒளிரச் செய்து, ஒவ்வொரு நபரையும் வரவேற்கும் எதிர்காலத்தை உருவாக்க உதவும் வரலாற்றில் நுழையும் மீட்பர்” என்று அவரை விவரித்தார்.

கிறிஸ்துவின் உடனிருப்பை அனுபவித்த மரியா

கிறிஸ்து பிறப்பு விழா மற்றும் கிறிஸ்துவின் உடனிருத்தலை முதன்முதலில் அனுபவித்த அன்னையாக மரியாவை விவரித்ததன் வழியாக, பிறக்காத ஒவ்வொரு குழந்தையிலும் பிரதிபலிக்கும் மனித வாழ்க்கையின் மாண்பை எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.

குறிப்பாக, போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளிலும், வன்முறை அல்லது வலியால் காயமடைந்த குடும்பங்களிலும் அமைதி நிலவிட இறைவேண்டல் செய்யுமாறு விசுவாசிகள் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.

நம்பிக்கையின் நீடித்த ஆதாரம் கிறிஸ்து

இறுதியாக, உலகிற்கு நம்பிக்கையின் நீடித்த ஆதாரமாக கிறிஸ்து தொடர்ந்து இருக்கிறார் என்ற உறுதியை வெளிப்படுத்திய திருத்தந்தை, தனது இறைவேண்டலை கடவுளின் தாயாம் அன்னை கன்னி மரியாவின்  பரிந்துரையில் ஒப்படைத்து தனது சிறப்பு நண்பகல் மூவேளை செப உரையை நிறைவு செய்தார்  திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 ஜனவரி 2026, 11:46