தேடுதல்

ஒவ்வொரு தருணத்தையும் கடவுளின் நேரமாக தழுவிக்கொள்ளுங்கள்!

ஜனவரி 25, ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு இயேசுவின் பொதுவாழ்வுப் பணியின் தொடக்கம் குறித்த தனது சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

"நம் வாழ்வின் ஒவ்வொரு நேரமும், ஒவ்வொரு இடமும் ஆண்டவருடைய உடனிருப்பாலும் அன்பாலும் நிறைந்திருப்பதை அறிந்து, அவரது அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள நாம் அழைக்கப்பட்டுள்ளோம்" என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஜனவரி 25, ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு வழங்கிய நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையில் இவ்வாறு மொழிந்தார் திருத்தந்தை.

இந்நாளில் திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட பொதுக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு குறித்த நற்செய்தி வாசகத்தை (காண்க. மத்  4: 12-23) மையமாகக் கொண்டு தனது எண்ணங்களை விசுவாசிகளுடன் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, இயேசுவின் பணியின் நேரம் மற்றும் அது தொடங்கிய இடம் குறித்த இரண்டு முக்கிய அம்சங்களைப் பற்றி குறிப்பிட்டார்.

ஒவ்வொரு கணமும் கடவுளுக்குச் சொந்தமானது

"திருமுழுக்கு யோவான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இயேசு தனது பொதுவாழ்வுப் பணியைத் தொடங்கிய தருணம் பொருத்தமற்றதாகத் தோன்றுகிறது" என்றும், "கடவுளின் பணி எந்தச் சூழ்நிலையிலும், அது சாதகமற்றதாகத் தோன்றினாலும் கூட வெளிப்படும் என்பதை நிரூபிக்கிறது" என்றும் எடுத்துரைத்தார்.

"ஒவ்வொரு கணமும் கடவுளுக்குச் சொந்தமானது" என்று கூறிய திருத்தந்தை, "அச்சமோ அல்லது நிச்சயமற்ற தன்மையோ உங்கள் செயல்பாடுகளைத் தடுப்பதை அனுமதிக்க வேண்டாம், மாறாக, சவால்கள் இருந்தபோதிலும், நிகழ்காலத்தை நீங்கள் நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்றுஅவர்களை  ஊக்குவித்தார்.

கப்பர்நாகூம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது

"இயேசு தனது பணியைத் தொடங்கிய கலிலேயாவில் உள்ள கப்பர்நாகூம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது" என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை, "பன்முகத்தன்மை கொண்ட மற்றும் பன்முக கலாச்சாரப் பகுதியாக இருக்கும் இந்த இடம், இயேசுவின் செய்தி இஸ்ரேலிய மக்களுக்கு மட்டுமல்ல, அவர்களின் பின்னணி அல்லது நம்பிக்கைகள் எதுவாக இருந்தாலும், அனைவருக்கும் எவ்வாறு பொருந்தியது என்பதைக் குறிக்கிறது" என்று சுட்டிக்காட்டினார்.

உடன்பிறந்த உறவையும் அமைதியையும் வளர்க்க வேண்டும்

"கிறிஸ்தவர்கள் தனிமைப்படுத்தலைக் கடந்து, ஒவ்வொரு சூழலிலும் நற்செய்தியை வாழ்ந்து பகிர்ந்து கொள்ள வேண்டும்" என்றும், "கலாச்சாரங்கள் மற்றும் மதங்களுக்கு இடையில் உடன்பிறந்த உறவையும் அமைதியையும் வளர்க்க வேண்டும்" என்றும் விசுவாசிகளுக்கு அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.

இறுதியாக, கடவுள் எப்போதும் தங்களுடன் இருக்கிறார் என்பதை நம்பவும், தங்கள் பயணத்தில் உதவி மற்றும் வலிமைக்காக அன்னை புனித கன்னி மரியாவிடம் இறைவேண்டல் செய்யவும் விசுவாசிகளை ஊக்குவித்து தனது நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 ஜனவரி 2026, 12:15