தேடுதல்

திருப்பீட தூதரகங்களில் பணிபுரியும் திருப்பீட அதிகாரிகளுடன் திருத்தந்தை திருப்பீட தூதரகங்களில் பணிபுரியும் திருப்பீட அதிகாரிகளுடன் திருத்தந்தை  

உலகளாவிய உரையாடல் மற்றும் மனித மாண்பைப் பாதுகாப்பது அவசியம்!

திருத்தந்தை தனது உரையில், மோதல் மற்றும் பிரிவினையை விட உரையாடல், பன்முகத்தன்மை மற்றும் மனித உரிமைகளுக்கான மரியாதை ஆகியவை முன்னுரிமை பெறும் நம்பிக்கை சார்ந்த தீர்வுகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட எதிர்காலத்திற்கான தனது தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்தியுள்ளார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

"இம்மண்ணுலகில் நாம் மேற்கொள்ளும் திருப்பயணத்தின் போது, ​​அமைதியை நிலைநாட்ட பணிவும் துணிவும் தேவை” என்றும், “உண்மையாக வாழ்வதற்குப் பணிவும், மன்னிப்பதற்குத் துணிவும் தேவைப்படுகிறது" என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ

ஜனவரி 09, வெள்ளியன்று, வத்திக்கானில் உலகம் முழுவதும் உள்ள திருப்பீட தூதரகங்களில் பணிபுரியும் திருப்பீட அதிகாரிகளுக்கு வழங்கிய உரையொன்றில் இவ்வாறு தெரிவித்துள்ள திருத்தந்தை, “நம் கண்முன்னே உள்ள சூழல் துயரம் நிறைந்தது என்றாலும், அமைதி இன்னும் ஒரு சவாலான ஆனால் சாத்தியமான இலக்காக உள்ளது” என்றும் உரைத்தார்.

அதிகரித்து வரும் உலகளாவிய பதட்டங்களுக்கு மத்தியில் உரையாடல், பன்முகத்தன்மை மற்றும் மனித மாண்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த திருத்தந்தை, கஜகஸ்தான், புருண்டி மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளிலிருந்து வந்த புதிய தூதர்களை வரவேற்றதுடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கொள்கைகள்  மற்றும் யூபிலி ஆண்டு குறித்தும் தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்.

‘இரண்டு நகரங்கள்’ என்ற புனித அகுஸ்தினாரின் சிந்தனையைப் பயன்படுத்தி, அமைதிக்கும் நீதிக்கும் எதிராக அதிகரித்து வரும் ஆபத்துகளை எடுத்துரைத்த திருத்தந்தை, அவைகளில் ஒன்று அன்பை அடிப்படையாகக் கொண்டது, மற்றொன்று தற்பெருமை மற்றும் அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டது என்று விளக்கினார்.

மேலும் உலகளாவிய நீதியை மேம்படுத்துவதில் வலுவான பலதரப்பு உரையாடல், அனைத்துலக மனிதநேயச் சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் அவைக்கு ஆதரவு அளிக்க அவர்களுக்கு அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.

குறிப்பாக, வங்க தேசம் மற்றும் நைஜீரியா போன்ற பகுதிகளில் இடம்பெற்று வரும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான துன்புறுத்தலை வன்மையாகக் கண்டித்த திருத்தந்தை, மதச் சுதந்திரத்திற்கும் மனசாட்சி அடிப்படையிலான மறுப்புக்கும் மரியாதை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இடம்பெயர்வு, வாழ்க்கையின் புனிதத்தன்மை மற்றும் குடும்பத்தின் முக்கியத்துவம் போன்ற பிரச்சனைகள் குறித்தும் தனது சிந்தனைகளை அவர்களுடன் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, சமூகத்தில் அவர்களுக்கு இருக்க வேண்டிய பொறுப்புணர்வையும் பங்களிப்பையும் குறித்து எடுத்துக்காட்டினார்.

இறுதியாக, அமைதிக்கான தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்திய திருத்தந்தை, உக்ரைன் மற்றும் ஆப்பிரிக்கா உட்பட இடம்பெற்று வரும் உலகளாவிய மோதல்களைத் தீர்ப்பதில் மனித மாண்பில் கவனம் செலுத்தவும், இன்றையத் தார்மீக சவால்களைச் சமாளிக்க அறநெறிமுறை, நம்பிக்கை சார்ந்த தீர்வுகளை ஏற்றுக்கொள்ளவும் அனைத்துலகச் சமூகத்தை வலியுறுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 ஜனவரி 2026, 13:18