திருத்தந்தையின் ‘ஊர்பி எத் ஓர்பி’ சிறப்புச் செய்தி!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
வத்திக்கான் வானொலியின் அன்பு உள்ளங்களே, உங்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்து பிறப்புப் பெருவிழா நல்வாழ்த்துக்கள். கடவுளின் கனிந்த பேரன்பும் பேரிக்கமும் உங்கள் அனைவரின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் நிறைந்து விளங்குவதாக! ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழா, கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழா ஆகிய இரு முக்கிய நாள்களில், திருத்தந்தையர், வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலின் நடுமாடத்திலிருந்து, 'ஊருக்கும் உலகிற்கும்' எனப் பொருள்படும் ஊர்பி எத் ஓர்பி (Urbi et Orbi) என்ற சிறப்புச் செய்தி, மற்றும் வாழ்த்துக்களை வழங்கி வருகின்றனர். ஊர்பி எத் ஓர்பி சிறப்பு ஆசீர் வழங்கும் பழக்கம், 13-ஆம் நூற்றாண்டில் திருத்தந்தை பத்தாம் கிரகோரி அவர்களின் தலைமைப் பணி காலத்தில் தொடங்கியது.
டிசம்பர் 25, வியாழக்கிழமை இன்று, கிறிஸ்து பிறப்புப் பெருவிழா நாளில், பகல் 12 மணிக்கு, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலின் நடுமாடத்திலிருந்து, தனது முதல் ‘ஊர்பி எத் ஓர்பி’ என்ற சிறப்பு செய்தியை வழங்கினார். திருத்தந்தையை நேரில்கண்டு, அவரது ஆசீரைப் பெறுவதற்காக குளிரையும் சாரல் மழையையும் பொருள்படுத்தாது அதிகாலையிலேயே மக்கள் தங்களின் குழந்தைகளுடன் வந்து வரிசையில் நிறக்கத் தொடங்கிவிட்டனர். சரியாக பகல் 12 மணிக்கு திருத்தந்தை மேல்மாடத்திற்கு வந்ததும் திருப்பயணிகளின் கூட்டம் மகிழ்ச்சி பொங்க கரங்களை உயர்த்தி ஆர்ப்பரித்தது. அவர்களைக் கண்டு பேரானந்தம் கொண்ட திருத்தந்தையும் பதிலுக்குத் தனது திருக்கரங்களை உயர்த்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து, 'ஊர்பி எத் ஓர்பி' எனப்படும் சிறப்புச் செய்தியை அவர்களுக்கு வழங்கத் தொடங்கினார் திருத்தந்தை லியோ.
அன்புள்ள சகோதரர் சகோதரிகளே,
"நம்முடைய மீட்பர் இயேசு உலகில் பிறந்திருப்பதால், நாம் அனைவரும் ஆண்டவருக்குள் மகிழ்வடைவோம். இன்று, உண்மையான அமைதி விண்ணகத்திலிருந்து நமக்கு இறங்கி வந்துள்ளது" என்று நேற்றய நள்ளிரவுத் திருப்பலியின் வருகைப் பல்லவியில் பாடினோம். அன்னை கன்னி மரியாவுக்குப் பிறந்த குழந்தை, பாவத்திலிருந்தும் இறப்பிலிருந்தும் நம்மைக் காப்பாற்ற இறைத்தந்தையால் அனுப்பப்பட்ட ஆண்டவராகிய கிறிஸ்து. உண்மையில், அவரே நமது அமைதி; கடவுளின் இரக்கமுள்ள அன்பின் மூலம் வெறுப்பையும் பகைமையையும் அவர் வென்றுள்ளார். இந்தக் காரணத்திற்காக, இயேசுவின் பிறப்பு அமைதியின் பிறப்பாக அமைந்துள்ளது (புனித பெரிய லியோ, மறையுரை 26).
“மரியா தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே, பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார்” (லூக் 2:7) என்று நாம் லூக்கா நற்செய்தியில் வாசிக்கின்றோம். எல்லாவற்றையும் படைத்த கடவுளின் மகன் வரவேற்கப்படவில்லை, மேலும் விலங்குகளுக்கு கிடைத்த ஓர் எளிய தொட்டில்தான் அவருக்கும் கிடைத்தது.
இயேசு கிறிஸ்துவே நமது அமைதி
கடவுளின் என்றுமுள்ள வார்த்தையான இயேசு அன்பினால் உலகிற்குள் வருவதைத் தேர்ந்தெடுத்தார், மனிதராக மாறினார், ஏழ்மையையும் நிராகரிப்பையும் ஏற்றுக்கொண்டார், ஒடுக்கப்பட்டவர்களுடனும் ஒதுக்கப்பட்டவர்களுடனும் தன்னை அடையாளம் கண்டுகொண்டார். இயேசு தனது பிறப்பிலிருந்தே தனது பணி எதுவென்பதைக் காட்டினார். அதாவது, மனிதகுலத்தின் பாவத்தை ஏற்றுக்கொண்டு, மற்றவர்களை அன்புகூரவும், அவர்கள்மீது அக்கறை கொள்ளவும் நமக்குக் கற்பித்தார். அன்பு செலுத்தாதவர்கள் மீட்கப்படுவதில்லை; அவர்கள் தொலைந்து போகிறார்கள். "தம் கண் முன்னேயுள்ள சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதோர், கண்ணுக்குப் புலப்படாத கடவுளிடம் அன்பு செலுத்த முடியாது" (1 யோவா 4:20) என்கிறார் புனித யோவான்.
சகோதரர் சகோதரிகளே, பொறுப்பு என்பது அமைதிக்கான உறுதியான வழி. நாம் அனைவரும், ஒவ்வொரு நிலையிலும், மற்றவர்களைக் குறை கூறுவதை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக நம் சொந்த தவறுகளை ஒப்புக்கொண்டு, கடவுளிடம் மன்னிப்பு கேட்டு, மற்றவர்களின் துன்ப துயரங்களில் உண்மையிலேயே தலையிட்டு வலுக்குறைந்தவர்களுடனும் ஒடுக்கப்பட்டவர்களுடனும் ஒன்றிணைந்து நின்றால், உலகம் மாறும்.
இயேசு கிறிஸ்துவே நமது அமைதி, ஏனென்றால் அவர் நம்மை பாவத்திலிருந்து விடுவித்து, பெரியதோ சிறியதோ எல்லா வகையான மோதல்களையும் எவ்வாறு தீர்ப்பது என்று நமக்குக் கற்பிக்கிறார். பாவத்திலிருந்து மன்னிக்கப்பட்ட இதயம் மட்டுமே உண்மையிலேயே அமைதியின் நபராக இருக்க முடியும். இதன் காரணமாகத்தான், பாவத்திலிருந்து நம்மை மீட்பதற்காக, இயேசு பெத்லகேமில் பிறந்து சிலுவையில் இறந்தார். அவரது உதவியுடன், நாம் அனைவரும் வெறுப்பு மற்றும் வன்முறையை நிராகரித்து, அதற்கு பதிலாக உரையாடல், அமைதி மற்றும் ஒப்புரவிற்காகப் பணியாற்ற முடியும்.
மத்திய கிழக்கிற்காக மன்றாடுவோம்
இந்தக் கிறிஸ்து பிறப்புக் கொண்டாட்ட நாளில், அனைத்துக் கிறிஸ்தவர்களுக்கும், குறிப்பாக, மத்திய கிழக்கில் வாழும் கிறிஸ்தவர்களுக்கும், அண்மையில் எனது முதல் திருத்தூதுப் பயணத்தில் நான் சந்தித்தவர்களுக்கும், ஒரு தந்தைக்குரிய உணர்வோடு எனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் தங்கள் அச்சங்களை என்னிடம் வெளிப்படுத்தியபோது நான் அவர்களுக்குச் செவிமடுத்தேன். மேலும் அவர்களை மூழ்கடிக்கும் வலிமை வாய்ந்த எற்றத்தாழ்வுகளுக்கு முன் அவர்களின் வலிமையற்ற உணர்வை நான் நன்கு அறிவேன்.
இன்று பெத்லகேமில் பிறந்துள்ள குழந்தை, "என் வழியாய் நீங்கள் அமைதி காணும் பொருட்டே நான் இவற்றை உங்களிடம் சொன்னேன். உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு, எனினும் துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றி கொண்டுவிட்டேன்” (யோவா 16:33) என்று கூறும் அதே இயேசுதான். "நேர்மையால் வரும் பயன் நல்வாழ்வு; நீதியால் விளைவன என்றுமுள அமைதியும் நம்பிக்கையும்" (எசா 32:17) என்ற இறைவார்த்தைகளை நம்பி, லெபனோன், பாலஸ்தீனம், இஸ்ரேல் மற்றும் சிரியா உள்ளிட்ட நாடுகளில் நீதி, அமைதி மற்றும் நிலைத்தன்மையை நிலவிட இன்று கடவுளிடம் மன்றாடுவோம்.
ஐரோப்பாவிற்காக வேண்டுவோம்
ஒன்றிப்பு, ஒத்துழைப்பு, அதன் கிறிஸ்தவத் தோற்றம், விசுவாசம் மற்றும் தேவையில் இருப்போரிடம் இரக்கம் ஆகியவற்றை ஊக்குவிக்கும்படி ஆண்டவரிடம் வேண்டி, ஐரோப்பா முழுவதையும் அமைதியின் அரசராம் இயேசுவின் பராமரிப்பில் ஒப்படைப்போம். உக்ரைனின் துயருறும் மக்களுக்காக குறிப்பாக, நாம் இறைவேண்டல் செய்வோம். அங்குப் போர் நிறுத்தப்படட்டும், அனைத்துலகச் சமூகத்தின் உதவியுடன் அனைத்துத் தரப்பினரும் நேர்மையான மற்றும் மரியாதைக்குரிய உரையாடலைத் தொடங்குவதற்கான துணிவைக் காணட்டும். உலகில் தற்போது இடம்பெற்று வரும் அனைத்துப் போர்களிலும் பாதிக்கப்பட்டவர்கககுக்காக, குறிப்பாக, மறக்கப்பட்டவர்களுக்காக, அநீதி, அரசியல் நிலைத்தன்மையின்மை, மதத் துன்புறுத்தல் மற்றும் பயங்கரவாதத்தால் துன்புறுவோருக்காக, பெத்லகேமின் குழந்தையிடமிருந்து அமைதியையும் ஆறுதலையும் கேட்டு நாம் மன்றாடுவோம்.
சூடான், காங்கோ, ஹைட்டி நாடுகளுக்காக வேண்டுவோம்
சூடான், தெற்கு சூடான், மாலி, புர்கினா பாசோ மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசு நாடுகளைச் சேர்ந்த நமது சகோதரர் சகோதரிகளை நான் சிறப்பான முறையில் நினைவில் கொள்கிறேன். எதிர்நோக்கின் யூபிலி ஆண்டின் இந்த இறுதி நாள்களில், ஹைட்டியின் அன்பான மக்களுக்காக உன்னதக் கடவுளிடம் இறைவேண்டல் செய்வோம், அந்நாட்டில் அனைத்து வகையான வன்முறைகளும் நிறுத்தப்பட்டு, அமைதி மற்றும் ஒன்றிப்பின் பாதையில் முன்னேற்றம் ஏற்படட்டும்.
இலத்தின் அமெரிக்க நாடுகளுக்காக மன்றாடுவோம்
இலத்தீன் அமெரிக்காவில் அரசியல் பொறுப்புகளை வகிக்கும் அனைவருக்கும் குழந்தை இயேசு ஊக்கம் அளிப்பாராக. இதனால், அவர்கள் ஏராளமான சவால்களை எதிர்கொள்ளும்போது, கருத்தியல் மற்றும் பாரபட்சமான தப்பெண்ணங்களுக்குப் பதிலாக, பொது நன்மைக்கான உரையாடலுக்கு இடம் கொடுப்பார்களாக!
மியான்மாருக்காக வேண்டுவோம்
மியான்மார் நாட்டை ஒப்புரவுக்கான எதிர்காலத்தின் ஒளியால் ஒளிரச் செய்ய, இளையத் தலைமுறையினர் நம்பிக்கையை மீட்டெடுக்க, அதன் முழு மக்களையும் அமைதிப் பாதைகளில் வழிநடத்த, தங்குமிடம், பாதுகாப்பு அல்லது நாளைய நம்பிக்கையின்றி வாழ்பவர்களுடன் உடன் பயணிக்க, அமைதியின் இளவரசராம் பாலன் இயேசுவிடம் நாம் வேண்டிக் கொள்வோம்.
தாய்லாந்து மற்றும் கம்போடியாவிற்காக மன்றாடுவோம்
தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையிலான பண்டைய நட்பு மீட்டெடுக்கப்பட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட இருதரப்பினரும் ஒப்புரவு மற்றும் அமைதியை நோக்கி தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும் என்றும் இறைவனிடம் வேண்டுவோம்.
தெற்காசியா மற்றும் ஓசியானியாவிற்காக மன்றாடுவோம்
அண்மைல், பேரழிவு தரும் இயற்கை பேரழிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட தெற்காசியா மற்றும் ஓசியானியா மக்கள் அனைவரையும் நாம் கடவுளிடம் ஒப்படைத்து வேண்டுவோம். இத்தகைய சோதனைகளை எதிர்கொள்ளும் வேளையில், துயருறுவோருக்கு உதவுவதற்கான நமது பகிரப்பட்ட அர்ப்பணிப்பை, இதயப்பூர்வமான உறுதியுடன் புதுப்பிக்க அனைவரையும் நான் அழைக்கிறேன்.
போராடும் மக்களுடன் உடன் நிற்கும் இயேசு
அன்புள்ள சகோதரர் சகோதரிகளே, இருளில் கூட, அனைவருக்கும் ஒளி தரும் உண்மையான ஒளி உலகிற்கு வந்தது (யோவா 1:11). ஆனாலும் பலர் அந்த ஒளியாகிய இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை. மற்றவர்களின் துன்பங்களைப் பற்றி நாம் அலட்சியமாக இருக்க வேண்டாம், ஏனென்றால் கடவுள் நம் வலிகளைக் குறித்து ஒருபோதும் அலட்சியமாக இருப்பதில்லை. மனுவுரு எடுத்ததன் வழியாக இயேசு நம் பலவீனத்தையும் துன்பத்தையும் பகிர்ந்து கொண்டார்.
காசாவில் உள்ளவர்களைப் போல எல்லாவற்றையும் இழந்த மக்கள்; ஏமனில் உள்ளவர்களைப் போல பசி மற்றும் வறுமையால் துயருறும் ஏழை மக்கள்; இடம்பெயர்ந்தோர் மற்றும் புலம்பெயர்ந்தோர் போன்ற சிறந்த எதிர்காலத்தைக் கண்டறிய தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ள மக்கள்; வேலையில்லாதவர்கள், குறிப்பாக வேலை தேடும் இளைஞர்கள்; வேலையில் நியாயமற்ற முறையில் நடத்தப்படும் மக்கள்; மற்றும் பெரும்பாலும் கடுமையான சூழ்நிலையில் வாழும் சிறையில் உள்ளவர்கள் ஆகிய போராடும் மக்கள் அனைவருடனும் அவர் உடன் நிற்கின்றார்.
இந்தப் புனித நாளில், துன்பப்படும் அல்லது தேவையில் இருக்கும் நம் சகோதரர் சகோதரிகளைப் பற்றிக் கவலைப்படுவோம். இதைச் செய்யும்போது, குழந்தை இயேசுவை நாம் வரவேற்கிறோம், அவர் நம்மை அன்புடன் ஏற்றுக்கொண்டு, தான் யார் என்பதை நமக்குக் காட்டுகிறார். "அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார்" (யோவான் 1:12) என்று வாசிக்கின்றோம்.
இயேசு எப்போதும் திறந்திருக்கும் கதவு
இன்னும் சில நாள்களில், யூபிலி ஆண்டு முடிவுக்கு வரும். புனிதக் கதவுகள் மூடப்படும், ஆனால் நம் எதிர்நோக்கான இயேசு கிறிஸ்து எப்போதும் நம்முடன் இருக்கிறார்! அவர் எப்போதும் திறந்திருக்கும் கதவு, அவர் நம்மை தெய்வீக வாழ்க்கைக்குள் வழிநடத்துகிறார்.
"பிறந்துள்ள குழந்தை இயேசு கடவுளால் உருவாக்கப்பட்ட மனிதர். அவர் கண்டனம் செய்ய அல்ல, மனிதகுலத்தைக் காப்பாற்றவே வருகிறார்; அவர் ஒரு நிலையற்ற தோற்றம் அல்ல, ஏனென்றால் அவர் நம்மோடு தங்கி தன்னையே நமக்காகக் கொடுக்க வருகிறார்" என்பதுதான் இந்த நாளின் மகிழ்ச்சியான அறிவிப்பு. அவரில், ஒவ்வொரு காயமும் குணமாகிறது, ஒவ்வொரு இதயமும் ஓய்வையும் அமைதியையும் காண்கிறது. "ஆண்டவருடைய பிறப்பு அமைதியின் பிறப்பு."
உங்கள் அனைவருக்கும், அமைதியும் புனிதமும் நிறைந்த கிறிஸ்து பிறப்பு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
