தேடுதல்

திருப்பலியில் மறையுரை வழங்கும் திருத்தந்தை  திருப்பலியில் மறையுரை வழங்கும் திருத்தந்தை   (AFP or licensors)

கிறிஸ்து பிறப்பு உலகிற்கு கடவுளின் அமைதி வருவதைக் காட்டுகிறது!

"மற்றவர்களின் வலி நம் இதயங்களைத் தொட அனுமதிக்கும்போதும், நமது சுய பாதுகாப்பை உடைக்கும்போதும் அமைதி தொடங்குகிறது" : திருத்தந்தை பதினான்காம் லியோ

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

"நாம் நம்மிடம் பேசுவதை நிறுத்திவிட்டு, மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு, அவர்களின் மனித மாண்பிற்கு மதிப்பளிக்கும் போது அமைதி வருகிறது" என்றும், இதில், அன்னை கன்னி மரியா திருஅவையின் அன்னையாகவும், நற்செய்தியின் விண்மீனாகவும், அமைதியின் அரசியாகவும் இருக்கிறார் என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

டிசம்பர் 25, வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் சிறப்பிக்கப்பட்ட கிறிஸ்து பிறப்பு விழாத் திருப்பலியின்போது வழங்கிய மறையுரையில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை.

“கிறிஸ்து பிறப்பு உலகிற்கு கடவுளின் அமைதி வருவதைக் காட்டுகிறது” என்றும், “அது வலிமையாலோ அல்லது வார்த்தைகளாலோ அல்ல, மாறாக சிறிய, வலுக்குறைந்த குழந்தை இயேசுவின் வழியாக வருகிறது” என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

வித்தியாசமான அமைதி

எசாயா மற்றும் யோவானின் நற்செய்தியை எடுத்துக்காட்டி, “கடவுளின் வார்த்தையான இயேசு கட்டாயத்தினால் அல்ல, மாறாக மிகவும் வலுக்குறைந்த வகையில் நம்மிடையே வருகிறார்” என்றும், “மக்கள் தன்னை சுதந்திரமாக ஏற்றுக்கொள்ள இயேசு அழைக்கிறார்” என்றும் கூறிய திருத்தந்தை, “இது ஒரு வித்தியாசமான அமைதியை வெளிப்படுத்துகிறது” என்றும், “இது மனித துன்பங்களைக் காணும்போது, ​​கேட்கும்போது, ​​அரவணைக்கும்போது தொடங்கும் ஒன்று” என்றும் விளக்கினார்.

“குழந்தைகள், முதியவர்கள், வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள், புலம்பெயர்ந்தோர் மற்றும் போர், வறுமை அல்லது புறக்கணிப்பு காரணமாக நியாயமற்ற முறையில் நடத்தப்பட்ட அனைவரையும் கவனித்துக்கொள்வதன் மூலம், மக்கள் பலவீனத்திற்கு இரக்கத்துடன் பதிலளிக்கும் இடமெல்லாம் கடவுளின் அமைதி நிலவுகிறது” என்று எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.

மேலும் போர் மண்டலங்கள் போன்ற துன்ப இடங்களில், இடம்பெயர்ந்த மற்றும் புலம்பெயர்ந்தோர் மக்கள் மத்தியில், இளம் வீரர்களுடன் கிறிஸ்து இன்னும் இருக்கிறார் என்று சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

பிறரின் வலியை உணரும்போது அமைதி பிறக்கிறது

“மற்றவர்களின் வலி நம் இதயங்களைத் தொட அனுமதிக்கும்போதும், நமது சுய பாதுகாப்பை உடைக்கும்போதும் அமைதி தொடங்குகிறது” என்று கூறிய திருத்தந்தை, “கிறிஸ்து பிறப்பு, திருஅவையை மறைபரப்புத் திருஅவையாக இருக்கவும், முழு மனிதகுலத்துடனும் இணைந்து பயணிக்கவும், ஆதிக்கம் செலுத்தாமல், செவிசாய்க்கவும், உரையாடவும், பணியாற்றவும் அழைக்கிறது” என்றும் விளக்கினார்.

உண்மையான புதுப்பித்தல்

“உண்மையான புதுப்பித்தல் என்பது கட்டாயத்திலிருந்தோ அல்லது சுயநலத்திலிருந்தோ வருவதில்லை மாறாக, திருஅவையின் அன்னையும், அமைதியின் அரசியுமான மரியா நமக்குக் காட்டுவது போல, அது மற்றவர்களைச் சந்திப்பதிலிருந்தும், ஒருவருக்கொருவர் உதவுவதிலிருந்தும், வாழ்க்கையின் அமைதியான வலிமையைப் பாராட்டுவதிலிருந்தும் வருகிறது” என்று கூறி தனது மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 டிசம்பர் 2025, 13:26