செயற்கை நுண்ணறிவு மனித மாண்பைப் பாதுகாக்க வேண்டும்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
நாம் குறிப்பாக நம் குழந்தைகளின் சுதந்திரத்தையும் உள் வாழ்க்கையையும் பாதுகாத்து, அவர்களை முதிர்ச்சி பெற்றவர்களாகவும் பொறுப்புமிக்கவர்களாகவும் வழிநடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
டிசம்பர் 05, வெள்ளிக்கிழமையன்று, "செயற்கை நுண்ணறிவு மற்றும் நமது பொதுவான இல்லமாகிய இப்புவியின் பராமரிப்பு" என்ற தலைப்பில் இடம்பெறும் மாநாடு ஒன்றின் பங்கேற்பாளர்களை திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
தொடக்கமாக, வத்திக்கானைத் தளமாகக் கொண்ட "திருத்தந்தையின் நூறாவது ஆண்டு" நிறுவனம் மற்றும் கத்தோலிக்க ஆராய்ச்சி பல்கலைக் கழகங்களின் கூட்டமைப்பின் உறுப்பினர்களாகிய உங்கள் அனைவரையும் வாழ்த்துவதில் நான் மகிழ்வடைகிறேன் என்று தெரிவித்த திருத்தந்தை, சமூகத்தில் செயற்கை நுண்ணறிவின் ஆழமான தாக்கம், குறிப்பாக விமர்சன சிந்தனை, கற்றல் மற்றும் உறவுகளில் அதன் தாக்கம் குறித்து விவாதிக்க நாம் ஒன்றுகூடியுள்ளோம் என்று மொழிந்தார்.
செயற்கை நுண்ணறிவு ஒரு சிலருக்கு மட்டுமல்ல, பொது நன்மைக்கும் சேவை செய்வதை எவ்வாறு உறுதி செய்வது? என்று கேள்வியெழுப்பி செயற்கை நுண்ணறிவு ஏற்கனவே உலகளவில் இலட்சக்கணக்கான மக்களைப் பாதித்து வருவதால், இது ஒரு முக்கிய கவலையாகும் என்று கூறிய திருத்தந்தை, இந்தத் தொழில்நுட்ப உலகில் மனிதராக இருப்பதன் அர்த்தம் என்ன? என்ற ஒரு கேள்வியை நாம் எழுப்பிச் சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். .
மனிதர்கள் செயற்கை நுண்ணறிவின் செயலற்ற நுகர்வோர் மட்டுமல்ல, இணை படைப்பாளர்களாகவும் இருக்க அழைக்கப்படுகிறார்கள் என்று உரைத்த திருத்தந்தை, நமது மாண்பு என்பது சிந்திக்கவும், தேர்ந்தெடுக்கவும், அன்புகூரவும், உண்மையான உறவுகளை உருவாக்கவும் நமக்கு இருக்கும் திறனில் உள்ளது என்றும் எடுத்துக்காட்டினார்.
மேலும் செயற்கை நுண்ணறிவு புதிய படைப்புக்கான சாத்தியங்களை வழங்கும் அதேவேளையில், உண்மை, அழகு மற்றும் சிந்தனைக்கான நமது திறனுக்கும் ஆபத்துகளை ஏற்படுத்துகிறது என்று எச்சரித்தார் திருத்தந்தை.
நாம் குறிப்பாக நம் குழந்தைகளின் சுதந்திரத்தையும் உள் வாழ்க்கையையும் பாதுகாத்து, அவர்களை முதிர்ச்சி பெற்றவர்களாகவும் பொறுப்புமிக்கவர்களாகவும் வழிநடத்த வேண்டும் என்று விண்ணப்பித்த திருத்தந்தை, தகவல்களை அணுகுவது மட்டுமல்ல, அதில் அர்த்தத்தையும் மதிப்பையும் கண்டறிவதும், இளைஞர்கள் தொழில்நுட்பத்தை அறிவார்ந்தவிதத்தில் பயன்படுத்தவும், உண்மையைத் தேடவும், ஆன்மிக வளர்ச்சியை வளர்க்கவும் ஊக்குவிப்பதும் இதன் நோக்கமாகும் என்றும் எடுத்துக்காட்டினார்.
பொது நலனுக்கான எதிர்காலத்தை உருவாக்க, செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியை கொண்டுசெல்லும் மனிதகுலத்தின் திறனில் நாம் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும் என்று கூறிய திருத்தந்தை, இதற்கு அரசியல், நிறுவனங்கள், வணிகம், கல்வி மற்றும் மதச் சமூகங்கள் முழுவதும் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என்றும், தனிப்பட்ட இலாபத்தை விட கூட்டு நன்மையில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் உரைத்தார்.
இந்த விதத்தில் உங்கள் நிறுவனங்களின் ஆராய்ச்சி, இந்த முயற்சிக்கு ஒரு மதிப்புமிக்க பங்களிப்பாகும் என்றும், திருவிவிலியம் மற்றும் திருஅவைகளின் போதனைகளால் வழிநடத்தப்படும் உங்கள் படைப்பாற்றல் மற்றும் அர்ப்பணிப்புக்கு நன்றிகளும் பாராட்டுகளும் என்று மொழிந்தார் திருத்தந்தை.
புனிதமிகு அன்னை கன்னி மரியா கடவுளிடம் உங்களுக்காகப் பரிந்துரைப்பாராக என்று கூறி அவர்களுக்குத் தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கி தனது உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
