தன்னலமற்ற சேவையின் முன்மாதிரியைப் பின்பற்ற விசுவாசிகளுக்கு அழைப்பு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இரண்டாம் உலகப் போரின்போது காயமடைந்தவர்கள், நோயாளர்கள் மற்றும் வீடற்றவர்களுக்கு உதவுவதற்காக தன்னை அர்ப்பணித்த இளம் இத்தாலியரான ஆல்பர்த்தோ மார்வெல்லியின் முன்மாதிரியான வாழ்வை எடுத்துக்காட்டி, இப்புவியில் கடவுளின் மீட்புப் பணியில் விசுவாசிகள் பேரார்வத்துடன் பங்கேற்க வேண்டும் என்று அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
டிசம்பர் 06, சனிக்கிழமையன்று, வத்திக்கானின் பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு வழங்கிய சிறப்பு யூபிலி விழா மறைக்கல்வி உரையில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
மார்வெல்லியின் தன்னலமற்ற பணியைப் பற்றி சிந்திக்க திருப்பயணிகளை ஊக்குவித்த திருத்தந்தை, விசுவாசிகளும் இறையாட்சியின் பணியில் தங்கள் வாழ்க்கையைப் பிறருக்காக எவ்வாறு கையளிக்கலாம் என்பதைக் கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
திருவருகைக் காலம் என்பது நம் வாழ்வில் கடவுளின் உடனிருப்பை கண்டுணர்வதற்கு மட்டுமல்லாமல், அவருடைய பணியில் பங்கேற்கவும், அவரது அழைப்புக்கு பதிலளிக்கவும் கொடுக்கப்பட்டுள்ள ஒரு காலம் என்று வலியுறுத்திக் கூறினார் திருத்தந்தை.
குறிப்பாக, ஆஸ்திரேலியா, பிலிப்பீன்ஸ் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த திருப்பயணிகள் உட்பட ஆங்கிலம் பேசும் திருப்பயணிகளிடம் உரையாற்றிய திருத்தந்தை, யூபிலி ஆண்டில் அனைவரும் எதிர்நோக்கின் நற்பண்பு அதிகரிப்பை அனுபவிப்பார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
இயேசு கிறிஸ்துவின் மகிழ்ச்சியையும் அமைதியையும் அங்கிருந்த திருப்பயணிகள் அனைவருக்கும் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் வேண்டி, தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கி தனது உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
