யூபிலி ஆண்டு முடிவுறும் வேளையில் எதிர்நோக்கில் நிலைத்திருங்கள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
யூபிலி ஆண்டு நிறைவடையும் வேளையில், எதிர்நோக்கு மனித மற்றும் ஆன்மிக வாழ்க்கைக்கு இன்றியமையாதது என்றும், கிறிஸ்தவர்கள் எதிர்நோக்குடன் வாழ வேண்டும் என்றும் விசுவாசிகளிடம் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
டிசம்பர் 20, சனிக்கிழமையன்று, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய சிறப்பு யூபிலி விழா பொது மறைக்கல்வி உரையில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
எதிர்நோக்கு மனித குலத்திற்கு எப்போதும் தேவை
எதிர்நோக்கு என்பது திருஅவையின் சிறப்பு யூபிலி ஆண்டுடன் முடிவடைந்துவிடுவதில்லை, மாறாக, அது மனிதகுலத்திற்கு எப்போதும் தேவைப்படும் ஒன்று என்று மொழிந்த திருத்தந்தை, எதிர்நோக்கு இல்லாமல், வாழ்க்கை வாடி வதங்கிவிடும் என்றும், அதேவேளையில் எதிர்நோக்குத்தான் கடவுள் வழியாக புதுப்பித்தல் மற்றும் புதிய வாழ்க்கையைப் பிறப்பிக்கிறது என்றும் எடுத்துக்காட்டினார்.
எதிர்நோக்கு என்பது உயிரை உருவாக்குவதாலும், கடவுளின் அன்பைப் பிரதிபலிப்பதாலும், அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறையை விட வலிமையானது என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை, உலகின் தற்போதைய நிலையை, இயேசுவினுடைய வருகைக்காகவும், அவருடைய அரசுக்காகவும் இறை இரக்கத்தின் முழுமைக்காகவும் ஏங்கிக் கொண்டிருக்கும் பிரசவ வேதனையில் இருக்கும் ஒரு பெண்ணுடன் ஒப்பிட்டுக்காட்டினார்.
மரியாவின் முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்
கிறிஸ்து பிறப்பை எதிர்பார்த்து, மரியாவை எதிர்நோக்கின் மாதிரியாக எடுத்துக்காட்டிய திருத்தந்தை, கடவுள் நம்மோடு என்று பொருள்படும் இம்மானுவேல் என்னும் இயேசுவை அவர் பெற்றெடுத்தார் என்று குறிப்பிட்டார்.
விசுவாசிகள் தங்கள் சொந்த வாழ்க்கையில் எதிர்நோக்கிற்கு உயிர்க்கொடுத்து, தங்கள் செயல்கள் வழியாகவும், கடவுளுடைய வார்த்தையை வெளிப்படுத்துவதன் வழியாகவும், அன்னை மரியாவுடைய முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும் என்று விசுவாசிகளிடம் வலியுறுத்தினார் திருத்தந்தை.
விசுவாசிகளை அன்னை கன்னி மரியாவின் பராமரிப்பில் ஒப்படைத்து, அவர்களின் நம்பிக்கைப் பயணத்தில் மரியா அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்று அவர்களுடன் இணைந்து இறைவேண்டல் செய்து தனது உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.
அமெரிக்கத் திருப்பயணிகளுக்கு வரவேற்பு
தனது உரையின் இறுதியில், அமெரிக்காவிலிருந்து வந்திருந்த ஆங்கிலம் பேசும் திருப்பயணிகளை வரவேற்று மகிழ்ந்த திருத்தந்தை, கிறிஸ்துமஸ் நெருங்கி வரும் இவ்வேளையில், அவர்கள் மீதும் அவர்களது குடும்பங்கள் மீதும் மகிழ்ச்சி மற்றும் அமைதி நிலவிடவேண்டி இறைவேண்டல் செய்தார். மேலும் அமைதியின் இளவரசர் இயேசுவின் பெயரால் அவர்களை ஆசீர்வதித்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
