தேடுதல்

அமெரிக்க-ஐரோப்பா இணக்கநிலை இன்றும் எதிர்காலத்திலும் முக்கியமானது!

இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பின்போது திருத்தந்தை லியோ அவர்கள் வெளிப்படுத்திய கருத்துக்கள், புவிசார் அரசியல் இணக்கநிலை, உக்ரைனில் மனிதாபிமான நெருக்கடி மற்றும் அமைதிக்கான அவரது அர்ப்பணிப்பு பற்றிய அவரது கவலைகளை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன, அதே நேரத்தில் அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய ஒரு பார்வையை வழங்குகின்றன.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வரலாற்று இணக்கநிலை எதிர்பாராதவிதமாக மாறிக்கொண்டிருக்கலாம் என்றும், இரஷ்யாவிற்கு நாடு கடத்தப்பட்ட உக்ரேனிய குழந்தைகளை மீண்டும் தாய்நாட்டிற்கு கொண்டு வருவதற்கு திருப்பீடம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

டிசம்பர் 09, இச்செவ்வாயன்று, திருத்தந்தையர்களின் கோடைகால ஓய்விடமான காஸ்தல் கந்தோல்போவில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தபோது, இவ்வாறு தெரிவித்த திருத்தந்தை, அமெரிக்க-ஐரோப்பா இணக்கநிலை, உக்ரேனிய குழந்தைகள் மற்றும் அமைதி முயற்சிகள் குறித்து தனது சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

அமெரிக்க-ஐரோப்பிய நட்புத்தொடர்பு

அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான நீண்டகால இணக்கநிலை பலவீனமடையக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் குறித்து கவலை தெரிவித்த திருத்தந்தை, இந்த உறவு தற்போதைய மற்றும் எதிர்கால உறுதித்தன்மைக்கு மிகவும் முக்கியமானது என்று கூறினார்.

அமைதித் திட்டங்களை முன்மொழிவதற்கான அமெரிக்காவின் உரிமையை ஒப்புக்கொண்ட திருத்தந்தை, ஆனால் அதேவேளையில் சில திட்டங்கள் அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான பிளவுகளை ஆழப்படுத்தக்கூடும் என்று எச்சரித்தார்.

உக்ரேனிய குழந்தைகள் மீட்பு

இரஷ்யாவால் கடத்தப்பட்ட உக்ரேனிய குழந்தைகளைத் திரும்பக்  கொண்டுவருவதற்கு உதவுவதற்கான திருப்பீடத்தின் முயற்சிகளை உறுதிப்படுத்திய திருத்தந்தை, முன்னேற்றம் மெதுவாக நிகழ்ந்தாலும், இந்த விவகாரத்தில் உக்ரைனின் அரசுத் தலைவர்  ஜெலென்ஸ்கி உட்பட அந்நாட்டு அதிகாரிகளுடன்  திருஅவை மறைமுகமாகத் தொடர்ந்து பணியாற்றி வருவதாகக் கூறினார் திருத்தந்தை.

உக்ரைனில் அமைதி செயல்முறை

மோதலைத் தீர்ப்பதில் ஐரோப்பாவின் அவசியமான பங்களிப்பை எடுத்துக்காட்டிய அதேவேளை,  ஐரோப்பிய ஈடுபாடு இல்லாமல் நீடித்த அமைதி ஒப்பந்தத்தை எட்ட முடியாது என்று வலியுறுத்திக் கூறிய திருத்தந்தை, திருப்பீடத்தின் தலையீடு மிகவும் அவசியம் என்றும், இருப்பினும் அது இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

தனிப்பட்ட குறிப்பு

தான் இன்னும் அப்போஸ்தலிக்க அரண்மனையில் உள்ள திருத்தந்தை அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறவில்லை என்றும், திருப்பீட அலுவலகத்தில் தான் தற்போது வசிக்கும் இடத்தையே விரும்புவதாகவும் பகிர்ந்து கொண்டார்.

அண்மைய தனது திருத்தூதுப் பயணத்தின்போது துருக்கியில் உள்ள நீல மசூதிக்கு சென்றது குறித்தும்  குறிப்பிட்ட திருத்தந்தை, தனது இறைவேண்டல் பாணி தனித்துவமான சிந்தனைகளை கொண்டிருந்தது என்பதையும் அவர்களுக்கு விவரித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 டிசம்பர் 2025, 15:27