திருத்தந்தையுடன் ஸ்பெயின் நாட்டுத் திருப்பயணிகள் திருத்தந்தையுடன் ஸ்பெயின் நாட்டுத் திருப்பயணிகள்   (ANSA)

புனிதர்களின் முன்மாதிரியைப் பின்பற்ற திருப்பயணிகளுக்கு அழைப்பு!

திருத்தந்தை தனது உரையில், வில்லனோவாவின் புனித தாமஸ் வாழ்வை முன்மாதிரியாகக் குறிப்பிட்டு, இறைவனுக்கு அவர் காட்டிய கீழ்ப்படிதலையும், கல்வித்துறையில் அவர் ஆற்றிய அர்ப்பணிப்புமிக்கப் பணிகளையும் குறிப்பாக, ஏழைகள் மீது அவர் கொண்டிருந்த மாறாத அன்பையும் எடுத்துக்காட்டினார்.

ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்

தங்களது யூபிலி திருப்பயணத்திற்கான ஆயத்தப் பணிகளில் ஸ்பெயின் நாட்டுத் திருப்பயணிகள் காட்டிய அர்ப்பணிப்பிற்கு நன்றி தெரிவித்த திருத்தந்தை, அவர்களின் இறைவேண்டலும், தாராள மனப்பான்மையும் திருஅவையுடனான ஒன்றிப்பின் அடையாளங்கள் என்று பாராட்டி மகிழ்ந்தார்.

டிசம்பர் 29, திங்களன்று, ஸ்பெயினின் அல்கலா டி ஹெனாரஸில் உள்ள வில்லனோவாவின் புனித தாமஸ் பங்குத்தளத்திலிருந்து வந்திருந்த திருப்பயணிகளை திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை.

வில்லனோவாவின் புனித தாமஸ் வாழ்வை முன்மாதிரியாக சுட்டிக்காட்டிய திருத்தந்தை, இறைவனுக்கு அவர் காட்டிய கீழ்ப்படிதலையும், கல்வித்துறையில் அவர் ஆற்றிய அர்ப்பணிப்புமிக்கப் பணிகளையும் குறிப்பாக, ஏழைகள் மீது அவர் கொண்டிருந்த மாறாத அன்பையும் எடுத்துக்காட்டியதுடன், அவரை இறைவனின் ஈகையாளர் என்று எடுத்துக் கூறினார்.

இறைவேண்டல், உழைப்பு மற்றும் பிறரன்புப் பணி வழியாக புனித தாமஸின் முன்மாதிரியைப் பின்பற்றுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்த திருத்தந்தை,  ஏழைகள் மீது காட்டும் அக்கறையே நம்பிக்கையின் வெளிப்படையான அடையாளம் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இறுதியாக, கிறிஸ்துவின் வழியில் தொடர்ந்து பயணிக்குமாறு அவர்களைக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, பள்ளத்தாக்கின் அன்னையின் (Our Lady of the Valley) அரவணைப்பில் ஒப்படைத்து தனது நல்வாழ்த்துகளையும் ஆசீர்வாதங்களையும் வழங்கி  தனது உரையை  நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 டிசம்பர் 2025, 13:46