திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
டிசம்பர் 31, புதன்கிழமை, வத்திகானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகம் முழுவதும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திருப்பயணிகளால் நிறைந்திருந்தது. முன்னதாக, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், வத்திக்கான் வளாகம் முழுவதும் தனது திறந்த வாகனத்தில் வலம் வந்து அங்கு குழுமியிருந்த திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்தினார். அப்போது மகிழ்ச்சி பொங்க திருப்பயணிகள் அனைவரும் தங்கள் கரங்களைத் தட்டி திருத்தந்தையை வரவேற்றனர். சரியாக காலை 10 மணிக்கு திருத்தந்தை தனது புதன் பொது மறைக்கல்வி உரையைத் தொடங்கினார். முதலில் புனித பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து (எபே 3:20-21) இறைவார்த்தைகள் ஆங்கிலம் மற்றும் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசிக்கப்பட்டன. இப்போது வாசகத்திற்கு செவிமடுப்போம்.
வாசகம்
"நம்முள் வல்லமையோடு செயல்படுபவரும் நாம் வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் மிகவும் மேலாக அனைத்தையும் செய்ய வல்லவருமான கடவுளுக்கே திருச்சபையில் கிறிஸ்து இயேசு வழியாக தலைமுறை தலைமுறையாக என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்" (எபே 3:20-21)
திருமுக வாசகத்திற்குப் பிறகு திருத்தந்தை தனது சிந்தனைகளைத் திருப்பயணிகளுடன் பகிர்ந்துகொண்டார்.
அன்புள்ள சகோதரர் சகோதரிகளே!
இந்த ஆண்டின் இறுதி நாளில், யூபிலி விழாவின் முடிவிற்கு அருகில் மற்றும் திருபிறப்புக் காலத்தின் மையத்தில் நாம் இருக்கின்றோம். கடந்து சென்ற இந்த ஆண்டு நிச்சயமாக குறிப்பிடத்தக்க நிகழ்வுகளால் குறிக்கப்பட்டுள்ளது. அவற்றில் சில மகிழ்ச்சிகரமானவை, எடுத்துக்காட்டாக, இந்த யூபிலி புனித ஆண்டின் போது பல விசுவாசிகளின் திருப்பயணம்; மற்றவை வேதனையானவை, எடுத்துக்காட்டாக, நமது அன்புக்குரிய முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவு மற்றும் புவியை நடுக்கமுறச் செய்து வரும் போரின் காட்சிகள்.
இந்த ஆண்டின் நிறைவில், திருஅவை நம்மை இறைவனுக்கு முன்பாக அனைத்தையும் ஒப்படைக்க வேண்டும் என்றும், நம்மை அவருடைய பாதுகாப்பில் கையளித்து, நம்மிலும் நம்மைச் சுற்றிலும், வரும் நாள்களில், அவருடைய அருளின் வியப்புக்குரிய செயல்களும் இரக்கமும் புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும் அழைக்கிறது. இந்த ஆற்றலுக்குள்தான் Te Deum எனப்படும் புனிதமான நன்றி வழிபாட்டைக் கொண்டாடும் பாரம்பரியம் அதன் இடத்தைப் பெறுகிறது, இதன் வழியாக இன்று மாலை வழிபாட்டில், நாம் பெற்ற நன்மைகளுக்காக இறைவனுக்கு நன்றி கூறுவோம். "கடவுளே, நாங்கள் உம்மைப் புகழ்கிறோம், நீரே எங்கள் நம்பிக்கை, உமது இரக்கம் எப்போதும் எங்களுடன் இருப்பதாக" என்று நாம் பாடுவோம். இது சம்பந்தமாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "உலக நன்றியுணர்வும் உலக நம்பிக்கையும் வெளிப்படையானவை, அவை உள்ளுயிர் (self) மீதும் அதன் நலன்களின் மீதும் நிலைத்திருக்கின்றன" என்றும், இந்த வழிபாட்டில், இறைபுகழ், வியப்பு, நன்றியுணர்வு என ஒருவர் முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையை சுவாசிக்கிறார்" என்றும் குறிப்பிட்டார். (புனித கன்னி மரியா கடவுளின் தாய் பெருவிழாவின் முதல் திருப்புகழ் மாலை இறைவேண்டல், டிசம்பர் 31, 2023).
இந்த மனநிலைகளுடன்தான் இன்று நாம் கடந்த ஆண்டில் ஆண்டவராம் இயேசு நமக்காகச் செய்ததைப் பற்றி தியானிக்கவும், நமது ஆன்மாவை நேர்மையான உள்ளமுடன் பரிசோதித்துப் பார்க்கவும், அவருடைய அருள்கொடைகளை நாம் எந்தளவுக்குப் பயன்படுத்தி இருக்கின்றோம் என்பதை மதிப்பீடு செய்யவும், மேலும் அவருடைய அகத்தூண்டல்களை எவ்வாறு சிறந்ததொரு கருவூலமாகக் கருதுவது என்றும், அவர் நம்மிடம் ஒப்படைத்த திறமைகளை நமது திறனுக்கு ஏற்றவாறு எவ்வாறு முதலீடு செய்வது என்றும் தெரியாத அந்தத் தருணங்களுக்காக மன்னிப்பு கேட்கவும் அழைக்கப்படுகிறோம் (மத் 25:14–30).
இது அண்மைய மாதங்களில் நம்முடன் வந்த "பயணம்" மற்றும் "இலக்கு". என்ற மற்றொரு பெரிய அடையாளத்தைப் பற்றி சிந்திக்க வழிவகுக்கிறது. இந்த ஆண்டு, உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் எண்ணற்ற திருப்பயணிகள் புனித பேதுருவின் கல்லறையில் இறைவேண்டல் செய்யவும், கிறிஸ்துவைத் தாங்கள் பின்பற்றுவதை உறுதிப்படுத்தவும் வந்துள்ளனர்.
இது நமது முழு வாழ்க்கையும், இடத்தையும், காலத்தையும் கடந்து, கடவுளுடனான சந்திப்பிலும், அவருடனான முழுமையான மற்றும் முடிவற்ற ஒன்றிப்பிலும் நிறைவடையும் ஒரு பயணம் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது (கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி படிப்பினை, 1024). "தூயவர்களின் சபையில் உமது மகிமைக்குள் எங்களை ஏற்றுக்கொள்ளும்" என்று இன்றைய மாலை நன்றி வழிபாட்டின் போதும் நாம் இதையே கேட்போம்.
எல்லையுடைய மனித வாழ்க்கை எல்லையற்றக் கடவுளைச் சந்திக்கும் இந்த ஆன்மிகத் தருணத்தில், மற்றொரு முக்கியமான அடையாளம் உள்ளது. அதுதான் புனிதக் கதவு வழியாகச் செல்வது. இந்த வழியில் சென்றபோது நம்மில் பலர் நமக்காகவும் நம் அன்புக்குரியவர்களுக்காகவும் மன்னிப்புக் கேட்டு இறைவேண்டல் செய்திருக்கின்றோம்.
கடவுள் தம்முடைய மன்னிப்பின் மூலம், நற்செய்தியால் வழிநடத்தப்பட்டு, அவரது அருளால் நிரப்பப்பட்ட ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்க நம்மை அழைக்கிறார். வாழ்க்கை என்பது மற்றவர்களை அன்புகூர்வது, அனைவருக்கும் உதவுவது மற்றும் அக்கறை காட்டுவது, நமக்குத் தெரியாதவர்கள் அல்லது விரும்புவதற்கு கடினமாக இருப்பவர்கள் உட்பட ஒவ்வொரு நபரும் நமது சகோதரர் அல்லது சகோதரியாக வாழும் மாண்பைப் பெற்றுள்ளார் (புனித ஆறாம் பவுல், யூபிலி ஆண்டின் நிறைவு நிகழ்வில் மறையுரை, டிசம்பர் 25, 1975; ஒப்பீடு. கத்தோலிக்க திருஅவையின் மறைக்கல்வி படிப்பினை, 1826–1827). நிகழ்காலத்தில் அர்ப்பணிப்புடன் வாழ்ந்து, கடவுளின் முடிவின்மையை நோக்கிய வாழ்க்கைக்கு இது "ஆம்" என்று சொல்லும் நமது பதிலாகும்.
அன்பான நண்பர்களே, கிறிஸ்து பிறப்பின்போது, இந்த அடையாளங்களைப் பற்றி நாம் சிந்திக்கும் வேளை, திருத்தந்தை புனித பெரிய லியோ அவர்கள், இயேசுவின் பிறப்பை அனைவருக்கும் ஒரு நற்செய்தியாகக் கண்டார்: "தூயவர்கள் மகிழ்ச்சியடையட்டும், ஏனென்றால் அவர்கள் தங்கள் நல்வாழ்விற்கான வெகுமதியை (நிலைவாழ்வை) நெருங்கிவிட்டார்கள்; பாவிகள் மகிழ்ச்சியடையட்டும், ஏனென்றால் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படுகிறது; விசுவாசிகள் அல்லாதவர்கள் ஊக்குவிக்கப்படட்டும், ஏனென்றால் அவர்கள் வாழ்க்கைக்கு அழைக்கப்படுகிறார்கள்" (கிறிஸ்து பிறப்பு விழாவிற்கான முதல் மறையுரை,1).
இன்றைய அவரது அழைப்பு நம் அனைவருக்கும் வழங்கப்படுகிறது: திருமுழுக்கின் வழியாக, புனிதர்களாகிய நமக்கு, ஏனெனில் கடவுள் உண்மையான வாழ்க்கையை நோக்கிய பயணத்தில் தன்னை நமது துணையாக ஆக்கியுள்ளார்; பாவிகளாகிய நமக்கு, ஏனெனில், மன்னிக்கப்பட்டு, அவருடைய அருளால் நாம் மீண்டும் எழுந்து புதிதாகப் புறப்படலாம்; இறுதியாக, ஏழைகளாகிய நமக்கு, ஏனெனில், இயேசு ஆண்டவர் நமது பலவீனத்தைத் தமக்குச் சொந்தமானதாக்கி, அதை மீட்டு, அதன் அழகையும் வலிமையையும் தனது முழுமையான மனித இயல்பில் நமக்குக் காட்டியுள்ளார் (யோவா 1:14).
1975-ஆம் ஆண்டு யூபிலி விழாவின் இறுதியில் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அவர்கள் கூறிய வார்த்தைகளை நினைவுகூர்ந்து எனது மறைக்கல்வி உரையை நிறைவு செய்ய விரும்புகிறேன். அதன் முக்கிய செய்தியை ஒரே வார்த்தையில் சுருக்கமாகக் கூறலாம் என்று அவர் கூறினார்: "அன்புதான் கடவுள்! கண்ணீர் மற்றும் மகிழ்ச்சி இரண்டும் நிறைந்த அதன் படிப்பினைகள், மன்னிப்பு மற்றும் அமைதி வழியாக யூபிலி நம்முடன் பகிர்ந்து கொள்ள விரும்பிய வியக்கத்தக்க உண்மை இதுதான். அன்பே கடவுள்! கடவுள் என்னை அன்புகூர்கிறார்! கடவுள் எனக்காகக் காத்திருந்தார், நான் அவரை மீண்டும் கண்டுப்பிடித்துள்ளேன்! கடவுளே இரக்கம்! கடவுளே மன்னிப்பு! கடவுளே மீட்பு! கடவுளே வாழ்க்கை!" (பொது மறைக்கல்வி உரை, 17 டிசம்பர் 1975)
பழைய ஆண்டிலிருந்து புதிய ஆண்டிற்குச் செல்லும் பாதையில் இந்த எண்ணங்கள் நம்முடன் வரட்டும், பின்னர் எப்போதும், நம் வாழ்நாள் முழுவதும் இவ்வெண்ணங்கள் நம்முடன் வரட்டும்.
இவ்வாறு தனது மறைக்கல்வி உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை. இறுதியாக இயேசு கற்பித்த இறைவேண்டல் செபத்திற்குப் பிறகு அனைத்துத் திருப்பயணிகளுக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசிரை வழங்கினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
