ஜனவரி 2026-இல் முதல் கர்தினால்கள் ஆலோசனை அவைக் கூட்டம்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
வரும் ஜனவரி மாதம் 7, 8 ஆகிய தேதிகளில், வத்திக்கானில் இடம்பெறவிருக்கும் தனது முதல் கர்தினால்கள் ஆலோசனை அவைக் கூட்டம் குறித்து திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் அறிவிப்பொன்றைச் செய்துள்ளார் என்று கூறியுள்ளது திருப்பீடச் செய்தித் தொடர்பகம்.
உலகம் முழுவதிலுமிருந்து வரும் கர்தினால்கள் ஒன்றுகூடி, திருத்தந்தைக்காக இறைவேண்டல் செய்யவும், கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளவும், அவருக்கு ஆலோசனைகள் வழங்கவும் இந்த இரண்டு நாள் கூட்டம் நடைபெறும் என்றும் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.
இந்தக் கர்தினால்கள் ஆலோசனை அவைக் கூட்டம், பல்வேறுத் தளங்களில் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கும், ஒன்றிணைந்து சிந்திப்பதற்கும் நல்லதொரு தருணமாக அமையும் என்றும் அதன் அறிக்கை உரைக்கிறது.
மேலும் திருத்தந்தையும் கர்தினால்களும் நெருக்கமாகப் பணியாற்றவும், உலகளாவியத் திருஅவையை வழிநடத்த உதவுவதில் தங்கள் உறவை வலுப்படுத்தவும் இது ஒரு வாய்ப்பாக அமையும் என்றும் மொழிகிறது அதன் அறிக்கை.
இந்தக் கர்தினால்கள் ஆலோசனை அவை என்பது, திருத்தந்தை தனது முடிவுகளை எடுக்கவும், திருஅவையை வழிநடத்துவதில் அவருக்குத் தங்கள் ஆதரவையும் ஆலோசனையையும் வழங்கவும் உதவும் ஒரு முக்கியமான நிகழ்வாகும் என்றும் அதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு திருத்தந்தைக்கும் கர்தினால்களுக்கும் இடையிலான தொடர்பை எவ்வாறு வலுப்படுத்துகிறது என்பதையும், குறிப்பாக திருஅவையின் வாழ்க்கை மற்றும் பணிக்கான முக்கியமான பிரச்சினைகள் வரும்போது, இது எடுத்துக்காட்டுகிறது என்றும் தெரிவித்துள்ளது அதன் அறிக்கை.
ஜனவரி 6, செவ்வாய்க்கிழமையன்று கொண்டாடப்படும், திருக்காட்சிப் பெருவிழாவன்று, புனித பேதுரு பெருங்கோவிலில் புனிதக் கதவை மூடிய அடுத்த நாள், அதாவது, ஜனவரி 7, புதன்கிழமையன்று, திருப்பலியுடன் முதல் கர்தினால்கள் ஆலோசனை அவைக் கூட்டம் தொடங்கும் என்றும் அவ்வறிக்கை உரைக்கிறது.
இக்கூட்டம் உரோமையில் உள்ளவர்கள் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள அனைத்துக் கர்தினால்களும் சந்திக்கும் ஒரு சிறப்பு நிகழ்வாகும் என்றும், அனைத்துக் கர்தினால்களுடனும் முக்கியமான விடயங்களைக் குறித்து விவாதிக்க திருத்தந்தை இந்தக் கூட்டத்தைப் பயன்படுத்திக்கொள்வார் என்றும் தெரிவிக்கிறது திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் அறிக்கை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
