இதயநோய் நிபுணர்கள் குழுவுடன் திருத்தந்தை இதயநோய் நிபுணர்கள் குழுவுடன் திருத்தந்தை   (ANSA)

அறிவியல் சிறப்பை மனிதகுல சேவையுடன் இணைக்க வேண்டும்

"மருத்துவ சிகிச்சையில் ஏற்படும் முன்னேற்றங்கள் அனைவருக்கும், குறிப்பாக ஏழைகள் மற்றும் ஓரங்கட்டப்பட்டவர்களுக்கு அணுகக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்வது மட்டுமல்லாது, உலகளாவிய ஒன்றிப்பைத் தொடர்ந்து வளர்க்க வேண்டும்" : திருத்தந்தை பதினான்காம் லியோ

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

அன்பான இதய நோய் மருத்துவர்களே, உங்கள் பணி அறிவியல், இரக்கம் மற்றும் நெறிமுறை பொறுப்பு ஆகியவற்றில் முக்கியமான முடிவுகளை எடுக்கவேண்டிய கட்டத்தில் இருக்கிறது என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

டிசம்பர் 04, வெள்ளிக்கிழமையன்று, இதயநோய் நிபுணர்கள் குழு ஒன்றை திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, தலையீட்டு இதய மருத்துவத்தை முன்னேற்றுவதில் அவர்கள் ஆற்றிய பணிக்கு அன்பான வரவேற்பையும் நன்றியையும் தெரிவித்தார்.

உடல் ரீதியாகவும் உருவக ரீதியாகவும் குணப்படுத்த முயலும் அவர்களின் பணி, பொது நன்மைக்கு சேவை செய்வதற்கான ஒரு வழியாக அறிவியல் ஆய்வினை திருஅவை உறுதிப்படுத்துவதோடு அதனுடன் ஒத்துப்போகிறது என்று வலியுறுத்தினார்.

நோயுற்றோர் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கான கிறிஸ்துவின் பராமரிப்பிலிருந்து உள்ளொளி பெற்று, அவர்களின் வாழ்வே பணியாக அமைய வேண்டும் என்பதை  அவர்களுக்கு நினைவூட்டினார் திருத்தந்தை.

மருத்துவ சிகிச்சையில் ஏற்படும் முன்னேற்றங்கள் அனைவருக்கும், குறிப்பாக ஏழைகள் மற்றும் ஓரங்கட்டப்பட்டவர்களுக்கு அணுகக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்வது மட்டுமல்லாது, உலகளாவிய ஒன்றிப்பைத் தொடர்ந்து வளர்க்குமாறு அவர்களை ஊக்குவித்தார் திருத்தந்தை.

இறுதியாக, அவர்களின் பணியை இயேசுவின் திரு இதயத்திடம் ஒப்படைத்து, அவர்களின் சேவையில் துணிவு, விடாமுயற்சி மற்றும் மகிழ்ச்சியை வேண்டிய திருத்தந்தை, தங்களின் பணியில் அவர்கள் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்தி, அவர்களின் முயற்சிகள் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்திட ஆசீர்வதித்து, அறிவியல் சிறப்பை மனிதகுல சேவையுடன் இணைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு தனது உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 டிசம்பர் 2025, 14:29