தேடுதல்

திருத்தந்தையுடன் வத்திக்கான் பணியாளர்கள் திருத்தந்தையுடன் வத்திக்கான் பணியாளர்கள்   (ANSA)

வத்திக்கான் பணியாளர்களுக்குத் திருத்தந்தையின் கிறிஸ்துமஸ் செய்தி!

இந்தச் சந்திப்பின்போது பணிவு, உழைப்பு மற்றும் கிறிஸ்து பிறப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திருத்தந்தை, இல்லமாக இருந்தாலும் சரி, அலுவலகமாக இருந்தாலும் சரி, அனைவரும் தங்கள் அன்றாடப் பணிகளை அர்ப்பணிப்புடனும் நம்பிக்கையுடனும் செய்து, அதில் ஒரு நோக்கத்தைக் கண்டடையுமாறு அவர்களை ஊக்குவித்தார்.

ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்

இயேசுவின் பிறப்பில் வெளிப்பட்ட எளிமையையும் தாழ்ச்சியையும் கடைப்பிடிக்குமாறும், இந்த விழுமியங்கள்  வரவிருக்கும் 2026-ஆம் ஆண்டில் திரு அவையை வழிநடத்தும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

டிசம்பர் 22, திங்களன்று, வத்திக்கானின் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கில், வத்திக்கான் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கிய கிறிஸ்து பிறப்பு உரையில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை.

இந்தச் சந்திப்பின்போது பணிவு, உழைப்பு மற்றும் கிறிஸ்து பிறப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திருத்தந்தை, இல்லமாக இருந்தாலும் சரி, அலுவலகமாக இருந்தாலும் சரி, அனைவரும் தங்கள் அன்றாடப் பணிகளை அர்ப்பணிப்புடனும் நம்பிக்கையுடனும் செய்து, அதில் ஒரு நோக்கத்தைக் கண்டடையுமாறு அவர்களை ஊக்குவித்தார்.

மேலும், தமக்கு அளிக்கப்பட்ட அன்பான வரவேற்பிற்குத் தனது நன்றியைத் தெரிவித்த திருத்தந்தை, குறிப்பாக, பலரை முதல்முறையாகச் சந்திப்பதிலும், அதுவும் குடும்பங்கள் முன்னிலையில் இந்தச் சந்திப்பு நடப்பதிலும் தமக்கு இருக்கும் பெருமகிழ்வை வெளிப்படுத்தினார்.

இயேசு பிறப்புக் காட்சி குறித்த தனது சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, கொல்லர் மற்றும் விடுதிக் காப்பாளர் போன்ற எளிய மனிதர்களுக்கும் மதிப்பு உண்டு என்பதை அவர்களுக்கு நினைவுறுத்தியதுடன், கடவுளின் திட்டத்தில் அனைத்து பணிகளுக்கும் அர்த்தம் உண்டு என்பதை இது காட்டுகிறது என்று கூறினார்.

அனைவருக்கும்  கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டதுடன், அவர்களின் அன்புக்குரியவர்களுக்கும், குறிப்பாக முதியோர்களுக்கும் நோயாளர்களுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவிக்குமாறு அவர்களிடம் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

இயேசு என்னும் அருள்கொடையின் வழியாக, இந்தக் கிறிஸ்து பிறப்பு உங்களுக்கு நிறைமகிழ்வையும் அமைதியையும் அளிப்பதாக! என்று  கூறி அவர்களுக்குத் தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கி தனது உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 டிசம்பர் 2025, 12:42