நம்பிக்கையின் கலங்கரை விளக்கங்களாக குடும்பங்கள் திகழ வேண்டும்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
தனது மனைவியையும் குழந்தையையும் பாதுகாப்பாக அழைத்துச் சென்றதன் வழியாக, கடவுடைய திருவுளத்திற்குக் கீழ்ப்படிந்த புனித யோசேப்பின் செயல் மீட்பின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியது என்றும், உலகம் முழுவதற்கும் ஒளியைக் கொண்டுவரும் பொருட்டு, எகிப்தில், திருக்குடும்பத்தின் அன்பின் சுடர் வளர்ந்து, வலிமை பெற்றது என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
டிசம்பர் 28, ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு வழங்கிய நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையில் இவ்வாறு மொழிந்தார் திருத்தந்தை.
ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட திருக்குடும்ப பெருவிழாவின் நற்செய்தி வாசகத்தை (காண்க. மத் 2: 13-15, 19-23) மையமாகக் கொண்டு தனது சிந்தனைகளை விசுவாசிகளுடன் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை.
திருக்குடும்பம் வழங்கும் பதில்
எகிப்துக்குத் தப்பியோடும் திருக்குடும்பத்தின் செயல், இன்று சோதனைகளை எதிர்கொள்ளும் குடும்பங்களுக்கு நம்பிக்கையின் வலிமையை வழங்குகிறது என்று குறிப்பிட்ட திருத்தந்தை, இதற்கு நேர்மாறாக, திருக்குடும்பம் அச்சம், பேராசை மற்றும் கொடுங்கோன்மை ஆகியவற்றால் குறிக்கப்பட்ட உலகத்திற்கு அன்பு, பணிவு மற்றும் தற்கையளிப்பு உள்ளிட்ட உயர் விழுமியங்களைக் கொடுக்கிறது என்றும் எடுத்துரைத்தார்.
யோசேப்பின் கீழ்ப்படிதல்
மரியாவையும் குழந்தை இயேசுவையும் பாதுகாப்பதில் புனித யோசேப்பின் கீழ்ப்படிதலை எடுத்துரைத்த திருத்தந்தை, விசுவாசத்தில் வாழும் குடும்ப வாழ்க்கையின் மீட்பின் மதிப்பீட்டை வலியுறுத்தினார்.
எகிப்திற்கு, அதாவது, ஆபத்திலிருந்து வெகு தொலைவில் சென்ற திருக்குடும்பம், குடும்ப அன்பின் சுடர் பாதுகாக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டு, முழு உலகிற்கும் ஒளியின் ஆதாரமாக மாறியது என்று சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.
நவீன காலத்து ஏரோதுகள்
வளர்ச்சியடைந்துள்ள இந்த நவீன சமுதாயம் இன்னும் அதன் சொந்த "ஏரோதுகளை" கொண்டுள்ளது என்று எச்சரித்த திருத்தந்தை, அவர்கள் எந்த விலை கொடுத்தாவது வெற்றியை அடைய முயலுதல், அதிகாரத்தை நியாயமற்ற முறையில் பயன்படுத்துதல் மற்றும் மேலோட்டமான மகிழ்ச்சி ஆகியவற்றில் தங்களை வெளிப்படுத்துகிறார்கள் என்றும், இது தனிமை, மோதல் மற்றும் சோகத்தை ஏற்படுத்தும் என்றும் விவரித்தார்.
மேலும் இந்தத் தவறான இலட்சியங்கள் தங்கள் வீடுகளில் அன்பை அணைக்க விடக்கூடாது என்று குடும்பங்களை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
குடும்பங்கள் நற்செய்தியின்படி வாழ வேண்டும்
கிறிஸ்தவக் குடும்பங்கள் செபம், அடிக்கடி அருளடையாளங்களில் பங்கேற்பது, உண்மையான உரையாடல், விசுவாசம் மற்றும் எளிமையான அன்றாட அன்பின் செயல்கள் வழியாக நற்செய்தியின்படி வாழ வேண்டும் என்று ஊக்குவித்த திருத்தந்தை, அத்தகைய குடும்பங்கள்தாம், சமூகத்திற்குள் அன்பின் பள்ளிகளாகவும் நம்பிக்கையின் அடையாளங்களாகவும் மாற முடியும் என்று மொழிந்தார்.
திருக்குடும்பத்திடம் இறைவேண்டல்
இறுதியாக, அனைத்துக் குடும்பங்களையும் மரியா மற்றும் யோசேப்பின் பரிந்துரை செபத்தில் ஒப்படைத்த திருத்தந்தை, அவைகள் கடவுளின் பிரசன்னத்தையும் உலகிற்கு அளிக்கும் எல்லையற்ற பிறரன்புப் பணியையும் வெளிப்படுத்த வேண்டும் என்று இறைவேண்டல் செய்து தனது மூவேளை செபவுரையை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
