இரக்கம், எதிர்நோக்கு மற்றும் நம்பிக்கைக்கு யோசேப்பு ஒரு முன்மாதிரி!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
“நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்வோம் மற்றும் இறைவேண்டல் வழியாக எல்லாவற்றிற்கும் கடவுளிடம் நம்பிக்கைகொள்வோம்” என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
டிசம்பர் 21, ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு வழங்கிய நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையில் இவ்வாறு மொழிந்தார் திருத்தந்தை.
திருவருகைக் காலத்தின் நான்காவது ஞாயிற்றுக்கிழமையின் நற்செய்தி வாசகத்தை (காண்க. மத் 1: 18-24) மையமாகக் கொண்டு தனது சிந்தனைகளை விசுவாசிகளுடன் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை.
இரக்கம், துணிவு மற்றும் நம்பிக்கையின் முன்மாதிரி
கிறிஸ்துமஸ் நெருங்கி வரும் வேளையில், இரக்கம், துணிவு மற்றும் நம்பிக்கையின் முன்மாதிரியாக புனித யோசேப்பைப் பார்க்குமாறு விசுவாசிகளை வலியுறுத்திய திருத்தந்தை, கடவுளின் விருப்பத்திற்கு அவர் அமைதியாகக் கீழ்ப்படிந்ததையும் அவர்களுக்கு எடுத்துக்காட்டினார்.
நற்செய்தியாளர் மத்தேயுவால் நேர்மையாளர் என்று அழைக்கப்படும் புனித யோசேப்பு சட்டத்தைப் பின்பற்றி அதேவேளையில், மற்றவர்களிடம் மிகுந்த இரக்கத்தையும் அக்கறையையும் காட்டினார் என்று எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.
தூய ஆவியால் கருவுற்றிருந்த மரியாவை கண்ணுற்ற புனித யோசேப்பு, பொது மக்களின் விமர்சனங்களுக்கு மேலாக விவேகத்தையும் இரக்கத்தையும் தேர்ந்தெடுத்ததை நினைவு கூர்ந்த திருத்தந்தை, சமயக் கடமையின் உண்மையான அர்த்தம் இரக்கம் என்பதை அவர் வெளிப்படுத்தினார் என்றும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.
கனவில் கடவுளின் திட்டத்தை ஏற்றவர்
ஆண்டவரின் தூதர் யோசேப்புக்கு கனவில் தோன்றி கூறிய செய்திக்குப் பிறகு, அவர் கடவுளின் திட்டத்தை ஏற்றுக்கொண்டபோது, அவருடைய நற்பண்புகள் இன்னும் அதிகமாக வெளிப்பட்டன என்று கூறிய திருத்தந்தை, தனது தனிப்பட்ட நலன்களை விடுத்து, தன் எதிர்காலத்தை முழுவதுமாக கடவுளிடம் ஒப்படைத்தார் என்று மொழிந்தார்.
புனித அகுஸ்தினாரை மேற்கோள்காட்டி, கடவுளின் மகனை உலகிற்கு வரவேற்பதில் யோசேப்பின் பக்தியும், இரக்கமும் முக்கிய பங்கு வகித்தன என்பதை வலியுறுத்திய திருத்தந்தை, திருவருகைக் காலத்தின் இறுதி நாள்களில், யோசேப்பின் மனப்பான்மைகளான இரக்கம், பணிவு, நம்பிக்கை மற்றும் இறைவேண்டலைப் பின்பற்றுமாறு விசுவாசிகளை ஊக்குவித்தார்.
கடவுளின் உடனிருப்பை வெளிப்படுத்துங்கள்
கிறிஸ்தவர்கள் மன்னிப்பவர்களாகவும், மற்றவர்களை ஆதரிப்பவர்களாகவும் நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்பவர்களாகவும், வரவேற்கப்படுபவர்களாகவும் விளங்கிடுமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை, அவர்கள் சந்திக்கும் அனைவருக்கும் கடவுளின் உடனிருப்பை வெளிப்படுத்துமாறு விண்ணப்பித்தார்.
இறுதியாக, விசுவாசிகள் அனைவரையும் புனித யோசேப்பு மற்றும் புனித அன்னை மரியாவின் பரிந்துரை செபத்தில் ஒப்படைத்து, கிறிஸ்து பிறப்பிற்குத் தயாராகும் அனைவரும் விசுவாசத்துடனும் அன்புடனும் கிறிஸ்துவை வரவேற்க வேண்டும் என்று இறைவேண்டல் செய்து தனது மூவேளை செப உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
