கிறிஸ்தவர்கள் அமைதியையும் மன்னிப்பையும் தேர்வுசெய்ய வேண்டும்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
வன்முறை, அநீதி மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைக்கு எதிராக அமைதி, மன்னிப்பு மற்றும் நம்பிக்கையுடன் பதிலளிக்க கிறிஸ்தவர்களுக்கு அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
டிசம்பர் 26, வெள்ளிக்கிழமை, திருஅவையின் முதல் மறைச்சாட்சி புனித ஸ்தேவானின் விழாவை முன்னிட்டு, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய சிறப்பு மூவேளை இறைவேண்டல் உரையில் இவ்வாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
மறைசாட்சியம் என்பது விண்ணகப் பிறப்பு
மறைச்சாட்சியத்தை "விண்ணகப் பிறப்பு" என்று விவரித்த திருத்தந்தை, துன்பம் மற்றும் புறக்கணிப்புக்கு மத்தியிலும் கூட, விசுவாசிகள் தொடர்ந்து "ஒளியாம் கிறிஸ்துவிடம் வருவதை தேர்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஸ்தேவான் சாவை எதிர்கொண்டபோது அவரது முகம் ஒரு வானதூதரின் முகம் போல ஒளிவீசியதாக விவரிக்கப்பட்டுள்ளதை எடுத்துக்காட்டிய திருத்தந்தை, இந்த வெளிப்பாடு வரலாற்றை விட்டு விலகாமல், அன்புடன் பதிலளிக்கும் ஒரு நபரை வெளிப்படுத்தியது என்றும், இது இயேசு கிறிஸ்துவில் காணக்கூடிய தெய்வீக ஒளியை உள்ளடக்கியது என்றும் மொழிந்தார்.
கடவுளின் குழந்தைகளாக வாழ அழைக்கிறது
கிறிஸ்துவின் பிறப்பு விசுவாசிகளை கடவுளின் குழந்தைகளாக வாழ அழைக்கிறது என்பதைக் குறிப்பிட்டு, புனித ஸ்தேவானின் சான்று வாழ்வை கிறிஸ்து பிறப்பு செய்தியுடன் இணைத்துக் காட்டிய திருத்தந்தை, இயேசுவின் வாழ்க்கையின் அழகு பலரை ஈர்க்கும் அதேவேளையில், அதிகாரத்துடனும் அநீதியுடனும் இணைந்தவர்களிடமிருந்து எதிர்ப்பையும் தூண்டுகிறது என்றும், அத்தகையதொரு நிலை இன்றும் தொடர்கிறது என்றும் உரைத்தார்.
தேர்வு செய்வது மிகவும் அவசியம்
உலகின் ஒவ்வொரு பகுதியிலும், சிலர் தங்களுக்கு இழப்பு ஏற்பட்டாலும் கூட, சரியானதைச் செய்யத் தேர்வு செய்கிறார்கள் என்றும், அவர்கள் பயத்திற்குப் பதிலாக அமைதியைத் தேர்வு செய்கிறார்கள், தங்களைக் கவனித்துக்கொள்வதற்குப் பதிலாக மற்றவர்களுக்கு உதவுகிறார்கள் என்றும் விளக்கிய திருத்தந்தை, நம்பிக்கை இன்னும் உயிரோட்டமுள்ளதாக இருப்பதற்கும், அது கொண்டாடப்பட தகுதியானதாக இருப்பதற்கும் இதுபோன்ற தேர்வுகள் அடையாளங்களாக அமைந்துள்ளன என்றும் தெரிவித்தார்.
அனைவரும் சகோதரர் சகோதரிகளே
உலகில் பரவலான மோதல்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மை நிலவிவருவதை ஒப்புக்கொண்ட திருத்தந்தை, அகிம்சை மூலம் அமைதியைப் பின்பற்றுபவர்கள் பெரும்பாலும் கேலி செய்யப்படுகிறார்கள் அல்லது ஓரங்கட்டப்படுகிறார்கள் என்பதை அவர்களுக்குச் சுட்டிக்காட்டினார்.
அதேவேளையில், கருத்து வேறுபாடுகள் இருப்பினும் கிறிஸ்தவர்கள் யாரையும் எதிரியாகப் பார்க்காமல், எல்லோரையும் சகோதரர் சகோதரிகளாகப் பார்க்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விசுவாசிகளிடம் வலியுறுத்தினார்.
ஆயுதங்களைவிட அன்பே வலிமையானது
தன்னைக் காயப்படுத்தியவர்களையும் கூட மன்னித்து ஏற்றுக்கொண்ட புனித ஸ்தேவான், ஆயுதங்களை விட, மனித மாண்பிற்கான அன்பு மற்றும் மரியாதையின் வலிமையைக் காட்டினார் என்று எடுத்துரைத்தார் திருத்தந்தை.
இறுதியாக, கதிரவனுக்கு முன்பாக பனி உருகுவது போல, பயத்தை வென்று அச்சுறுத்தல்களைக் கரைக்கும் மகிழ்ச்சிக்கு அவர்களை வழிநடத்தும்படி அன்னை மரியாவின் பரிந்துரை செபத்தில் ஒப்புக்கொடுத்து தனது சிறப்பு மூவேளை இறைவேண்டல் உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
