தேடுதல்

உரை வழங்கும் திருத்தந்தை உரை வழங்கும் திருத்தந்தை   (ANSA)

ஆயுதங்களற்ற அமைதியை ஏற்படுத்தும் அர்ப்பணம் வேண்டும்!

"அதிகரித்து வரும் பதட்டங்கள் மற்றும் பகுதி பகுதியாக மோதல்கள் இடம்பெற்று வரும் உலகில், ஏழைகளும் ஓரங்கட்டப்பட்டவர்களும் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்" - திருத்தந்தை பதினான்காம் லியோ

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

"திருஅவையிலும் சமூகத்திலும், நமது தனிப்பட்ட உறவுகளிலும், பன்னாட்டு உறவுகளிலும், அனைத்து நபர்களின் மாண்பையும் கடவுளின் உயர்ந்த கொடையான அவரது படைப்பை மதிக்கும் நமது பணியிலும் நமக்குத் தேவையான நம்பிக்கையை மீட்டெடுக்க உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்" என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ

டிசம்பர் 06, சனிக்கிழமையன்று, உஸ்பெகிஸ்தான், மல்தோவா, பஹ்ரைன், இலங்கை, பாகிஸ்தான், லைபீரியா, தாய்லாந்து, லெசோதோ, தென்னாப்பிரிக்கா, பிஜி, மைக்ரோனேஷியா, லாத்வியா, பின்லாந்து ஆகிய 13 நாடுகளைச் சேர்ந்த திருப்பீடத் தூதரக அதிகாரிகளை திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை.

திருஅவைச் சமூகம் மற்றும் பன்னாட்டு உறவுகளுக்குள் நம்பிக்கையைப் புதுப்பிப்பதற்கான ஒரு நேரமான, திருத்தந்தை தனது தலைமைப் பொறுப்பின்  காலத்தின் தொடக்கத்திலும், நம்பிக்கையின் எதிர்நோக்கு என்ற தலைப்பில் நிகழும் இந்த யூபிலி விழாவின்போதும் அவர்களுடனான இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது என்பதை  அவர்களுக்கு எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.

"ஆயுதங்களற்ற மற்றும் ஆயுதங்களைக் களைந்த அமைதி" என்ற தனது தொலைநோக்குப் பார்வையை அவர்களிடம் வலியுறுத்திக் கூறிய திருத்தந்தை, உண்மையான அமைதி என்பது மனித இதயத்தில் தொடங்கும் ஒரு செயல்பாடுள்ள, அதிக அர்ப்பணிப்புடன் கூடிய ஒரு முயற்சி என்று விளக்கினார்

அதிகரித்து வரும் பதட்டங்கள் மற்றும் பகுதி பகுதியாக மோதல்கள் இடம்பெற்று வரும் உலகில், ஏழைகளும் ஓரங்கட்டப்பட்டவர்களும் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அவர்களுக்கு எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.

மேலும் ஒரு சமூகத்தின் மகத்துவம் என்பது, குறிப்பாக விரைவான தொழில்நுட்ப மற்றும் பொருளாதார மாற்றங்களுக்கு மத்தியில், தேவையில் இருப்போரை அது எவ்வாறு நடத்துகிறது என்பதில் வெளிப்படுகிறது என்று அவர்களுக்குச் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

அநீதி, சமத்துவமின்மை மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக, திருப்பீடம் அமைதியாக இருக்காது என்பதை மீண்டும் உறுதிப்படுத்திய திருத்தந்தை, மனசாட்சிக்கு செவிமடுத்து, மிகவும் வலுகுறைந்த நிலையில் இருப்போரின் குரல்களைக் கேட்பதன் வழியாக, மனிதகுலத்திற்குப் பணியாற்றுவதை வத்திக்கானின் தூதரக உறவு நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர்களுக்கு எடுத்துக்காட்டினார்.

திருப்பீடத்திற்கான தூதரக அதிகாரிகளுடனான ஒத்துழைப்பு என்பது உலகளாவிய ஒத்துழைப்பைப் புதுப்பிக்கவும், மோதல்களைத் தீர்க்க உருவாக்கப்பட்ட பன்னாட்டு நிறுவனங்களை வலுப்படுத்தவும் உதவும் என்று நம்பிக்கை தெரிவித்தார் திருத்தந்தை.

நாம் ஒன்றிணைந்த நிலையில் புறக்கணிக்கப்பட்ட மக்களின் கவனத்தை ஈர்க்கவும், மிகவும் நீதியான, உடன்பிறந்த உறவுக்கான மற்றும் அமைதியான உலகத்தை ஊக்குவிக்கவும் முடியும் என்று தான் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர்களிடம் தெரிவித்தார் திருத்தந்தை.

இறுதியாக, திருப்பீடம் தொடர்ந்து அவர்களுக்கு ஆதரவை அளிக்கும் என்றும், மேலும் அவர்களின் பணி உரையாடல், ஒன்றிப்பு  மற்றும் அமைதியை வளர்க்கும் என்றும் கூறிய திருத்தந்தை, அவர்கள் மீதும், அவர்களது குடும்பங்கள் மற்றும் நாடுகள் மீதும் தனது அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்குவதாகக் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 டிசம்பர் 2025, 13:35