மறைச்சாட்சிகள் மைக்கேல் தொமாஸ்ஸெக், ஸ்பிக்னியூ ஸ்ட்ரால்கோவ்ஸ்கி, அலெஸாண்ட்ரோ தோர்டி மறைச்சாட்சிகள் மைக்கேல் தொமாஸ்ஸெக், ஸ்பிக்னியூ ஸ்ட்ரால்கோவ்ஸ்கி, அலெஸாண்ட்ரோ தோர்டி  

வேறுபாடுகள் கிறிஸ்துவில் ஒன்றுபடும்போது திருஅவையில் ஒன்றிப்பு எழுகிறது!

திருத்தந்தை தனது உரையில் Chimbote நகரத்தின் மறைச்சாட்சிகளின் வாழ்க்கையையும் தியாக மரணத்தையும் அனைத்துக் கிறிஸ்தவர்களுக்கும், குறிப்பாக, அடுத்த தலைமுறையினருக்கும் ஒன்றிப்பு, விசுவாசம் மற்றும் துணிவுமிகு மறைபரப்பு பணிக்கான அழைப்பாக வடிவமைத்துள்ளார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

"மறைச்சாட்சிகளின் இரத்தம் தனிப்பட்ட பணிகளுக்காகவோ அல்லது கருத்துகளுக்காகவோ சிந்தப்படவில்லை, மாறாக இறைவனுக்கும் அவரது மக்களுக்கும் அன்பின் ஒற்றை காணிக்கையாக செலுத்தப்பட்டது" என்று கூறியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

பெரு நாட்டிலுள்ள Chimbote நகரத்தின் மறைச்சாட்சிகள் மைக்கேல் தொமாஸ்ஸெக், ஸ்பிக்னியூ ஸ்ட்ரால்கோவ்ஸ்கி, அலெஸாண்ட்ரோ தோர்டி ஆகியோர் அருளாளர் பட்டம் பெற்ற 10-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அனுப்பியுள்ள செய்தியொன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

அவர்களின் நாட்டுரிமை, பயிற்சி, அணுகுமுறை ஆகிய பன்முகத்தன்மை ஒரு வலிமையாக மாறியது என்றும், அதுவே, கடவுளுக்கும் மக்களுக்கும் பணியாற்றுவதில் அவர்களின் முயற்சிகளை ஒன்றிணைத்தது என்றும் எடுத்துக்காட்டியுள்ள திருத்தந்தை, வேறுபாடுகள் கிறிஸ்துவில் ஒன்றுபடும்போது திருஅவையில் உண்மையான ஒன்றிப்பு எழுகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்

அவர்களின் மறைச்சாட்சியம் விசுவாசம், அன்பு மற்றும் ஒன்றிப்புக்கு ஓர் எடுத்துக்காட்டு என்றும், மறைபரப்புப் பணி என்பது சேவையின் நீளத்தால் அல்ல, விசுவாசத்தின் மூலம் பலனளிக்கிறது என்பதைக் காட்டுகிறது என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்

அருள்பணித்துவ வாழ்வாக இருந்தாலும் சரி, துறவு வாழ்வுக்கான அர்ப்பண வாழ்க்கையாக இருந்தாலும் சரி, அல்லது மறைபரப்புப் பணியாக இருந்தாலும் சரி, திருஅவையை, குறிப்பாக இளைஞர்களையும் இளம் அருள்பணியாளர்களையும், கடவுளின் அழைப்பை துணிவுடன் ஏற்றுக்கொள்ள அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை.

இந்த ஆண்டு நிறைவு விழா, கிறிஸ்து திருஅவையில் தனது பணியைத் தொடர்கிறார் என்ற நம்பிக்கையுடன், நற்செய்தி அறிவிப்பு, பணிவு, வலுவற்றவர்களுக்குப் பணி மற்றும் நம்பிக்கைக்கான அர்ப்பணிப்பைப் புதுப்பிப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாக அமைந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 டிசம்பர் 2025, 13:59