மீட்பு என்பது அதிகாரத்தில் அல்ல, பணிவில் வெளிப்படுகிறது!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
“கிறிஸ்து பிறப்பு என்பது விசுவாசத்தின் விழா, ஏனென்றால் கடவுள் கன்னியிடமிருந்து பிறந்து மனிதராகிறார். இது ஓர் அன்பின் விழா, ஏனென்றால் கடவுள் தம்முடைய ஒரே மகனை நமக்குக் கொடுக்கிறார், இது நம்மை ஒருவருக்கொருவர் அன்புகூர வழிவகுக்கிறது. இது நம்பிக்கையின் விழா, ஏனென்றால் குழந்தை இயேசு நம்மை நம்பிக்கையால் நிரப்பி, நம்மை அமைதியின் தூதர்களாக மாற்றுகிறார்” என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ
டிசம்பர் 25, புதன்கிழமை இரவு வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் இடம்பெற்ற கிறிஸ்து பிறப்புப் பெருவிழா இரவுத் திருப்பலியில் வழங்கிய மறையுரையில் இவ்வாறு தெரிவித்த திருத்தந்தை, “இந்த நற்பண்புகளை நம் இதயங்களில் கொண்டு, இருளைக் குறித்து அச்சம் கொள்ளாமல் ஒரு புதிய நாளின் விடியலைச் சந்திக்க நாம் புறப்படுவோம்” என்றும் தெரிவித்தார்.
மீட்பு அதிகாரத்தில் அல்ல, பணிவில் வெளிப்படுகிறது
“மனிதகுலம் நீண்ட காலமாக இருளில் அர்த்தத்தைத் தேடி வருகிறது” என்றும், “இந்தத் தேடல் ஒரு குழந்தையாக வரலாற்றில் நுழையும் உண்மையான ஒளியான இயேசுவின் பிறப்பில் நிறைவேறுகிறது” என்றும் மொழிந்த திருத்தந்தை, “மீட்பு என்பது அதிகாரம் அல்லது புகழில் அல்ல; பணிவில் வெளிப்படுகிறது, அதாவது, கடவுளின் மகத்துவம் பலவீனம், நெருக்கம் மற்றும் அன்பின் வழியாக வெளிப்படுகிறது” என்று எடுத்துரைத்தார்.
இயேசுவின் மனுவுருவெடுத்தல் மதிப்பை வெளிப்படுத்துகிறது
“இயேசுவின் வழியாக, கடவுள் நமது பிரச்சனைகளைத் தீர்ப்பது மட்டுமல்லாமல், ஒவ்வொரு நபரையும் குணப்படுத்தும், மீட்டெடுக்கும் மற்றும் மதிக்கும் ஓர் அன்பில் தம்மையே நமக்குத் தருகின்றார்” என்று கூறிய திருத்தந்தை, “மனிதராக மாறுவதன் வழியாக, கடவுள் ஒவ்வொரு நபரின், குறிப்பாக ஏழைகள், வலுக்குறைந்தவர்கள் மற்றும் ஒதுக்கப்பட்டவர்களின் அளவற்ற மதிப்பை வெளிப்படுத்துகிறார்” என்றும், “மனிதருக்கு மதிப்பில்லாத இடத்தில் கடவுளுக்கு இடமில்லை” என்றும் விளக்கினார்.
மனிதகுலத்திற்குப் பணியாற்ற வந்த இயேசு
முந்தைய திருத்தந்தையர்களின் படிப்பினைகளை எடுத்துக்காட்டி, மக்களைப் பொருள்களாகக் கருதி ஆதிக்கம் செலுத்தத் தேடும் உலகத்திற்கு எதிராக எச்சரித்த திருத்தந்தை, “கடவுள் மனிதகுலத்தின்மீது கொண்ட அன்பின் காரணமாகத் தன்னைத் தாழ்த்தி, மனிதர்களுக்குப் பணியாற்றும் வழியைத் தேர்ந்தெடுத்தார்” என்றும், “உண்மையான அமைதி வலிமையால் அல்ல, மாறாக கிறிஸ்துவில் விண்ணகத்தையும் மண்ணகத்தையும் இணைக்கும் அன்பின் வழியாக வருகிறது” என்றும் சுட்டிக்காட்டினார்.
எதிர்நோக்கின் சாட்சிகளாக வாழ்வோம்
யூபிலி ஆண்டு நிறைவடையப்போகும் இவ்வேளையில், திருஅவை நன்றியுணர்வுடன் இருக்கவும், கிறிஸ்து பிறப்பின் மகிழ்வை எல்லோருக்கும் அறிவித்து, நம்பிக்கை, தொண்டு மற்றும் எதிர்நோக்கின் சாட்சிகளாக மாறவும் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை.
இறுதியாக, “வார்த்தை மனிதரானார் என்பதைப் பற்றி சிந்திக்கும் விசுவாசிகள், அமைதியைப் பரப்பவும், கிறிஸ்துவின் ஒளியைப் பகிர்ந்து கொள்ளவும், சிறந்த உலகத்தை உருவாக்க உதவவும் அனுப்பப்படுகிறார்கள்” என்று கூறி தனது மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
