ஒரு பொதுநிலையினர் உட்பட 12 பேருக்கு அருளாளர் பட்டம்!
ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்
ஒரு பொதுநிலையினர் உட்பட 12 பேருக்கு அருளாளர் பட்டம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளதுடன், மேலும் மூன்று நபர்களின் வீரத்துவப் பண்புகளை ஏற்றுக்கொண்டார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
டிசம்பர் 18, வியாழக்கிழமையன்று, புனிதர் பட்ட படிநிலைகளுக்குரிய திருப்பீடத் துறையின் தலைவர் கர்தினால் மார்செல்லோ செமராரோ அவர்களைச் சந்தித்தபோது, விசுவாசத்திற்காக உயிர்நீத்த 12 புதிய அருளாளர்கள் தொடர்பான ஆணைகளை வெளியிடுவதற்கு ஒப்புதல் அளித்தார் திருத்தந்தை.
மேலும், இத்தாலியைச் சேர்ந்த தூய ஆவியார் சபையின் துறவிகளான சகோதரர் பெரார்டோ அடோனா மற்றும் சகோதரி டொமினிகா கேத்ரினா ஆகியோரையும், இந்திய அருள்பணியாளர் ஜோசப் பஞ்சிக்காரன் ஆகியோரையும் வணக்கத்திற்குரியவர் என அறிவித்துள்ளார் திருத்தந்தை.
ஏழைகள், நோயாளர்கள் மற்றும் ஓரங்கட்டப்பட்ட மக்களுக்கு அவர்கள் ஆற்றிய சேவையில் வெளிப்பட்ட வீரத்துவப் பண்புகளை ஏற்றுக்கொண்டு இந்த ஒப்புதலை வழங்கியுள்ளார் திருத்தந்தை.
1936 முதல் 1937 வரை இடம்பெற்ற ஸ்பானிய உள்நாட்டுப் போரின்போது கத்தோலிக்கர்களுக்கு எதிராக நடந்த அடக்குமுறையில் கொல்லப்பட்ட பதினொரு ஸ்பானிய அருள்பணித்துவ மாணவர்கள், ஓர் அருள்பணியாளர் மற்றும் ஒரு பொதுநிலையினர் ஆகியோர் மறைசாட்சிகளாக அறிவிக்கப்பட்டனர்.
அர்ஜென்டினாவைச் சேர்ந்த தொழிலதிபரும் ஒன்பது குழந்தைகளுக்குத் தந்தையுமான என்ரிக் எர்னஸ்டோ ஷா, கத்தோலிக்க சமூகப் போதனைகளைப் பணியிடங்களில் பரப்பியதற்காகப் புகழ்பெற்றவர். இவரது பரிந்துரையால் நிகழ்ந்த ஒரு புதுமை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அவருக்கு விரைவில் அருளாளர் பட்டம் வழங்கப்படவுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
