திருமண செல்லா நிலை குறித்த சீர்திருத்தத்தின் 10-ஆம் ஆண்டு நிறைவு
ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்
திருமண செல்லா நிலை குறித்த சீர்திருத்தத்தில் உண்மை, நீதி, இரக்கம் அவசியம் என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருமண செல்லா நிலை குறித்த சீர்திருத்தத்தின் 10-வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், ரோமன் ரோட்டாவால் ஏற்பாடு செய்யப்பட்ட பயிற்சி வகுப்பில் பங்கேற்றவர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.
குறிப்பாக, இதன் குறிக்கோள்கள் மூன்று முக்கிய பரிமாணங்களான திருஅவை, நீதித்துறை மற்றும் மேய்ப்புப்பணி இவைகளை மையமாகக் கொண்டவை என்பதையும் அவர்களிடம் வலியுறுத்திக் கூறினார்.
மேலும் இந்த மூன்று பரிமாணங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்றும், திருமண செல்லா நிலை செயல்பாட்டில் ஒவ்வொன்றும் முக்கிய பங்கு வகிக்கின்றது என்றும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, உண்மை, நீதி மற்றும் இரக்கம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார்.
திருமண செல்லா நிலைச் சார்ந்த வழக்குகளை தொழில்நுட்ப விடயங்களாகப் பார்க்காமல், அவற்றில் திருஅவையின் முக்கியத்துவத்தைப் புரிந்து அணுக வேண்டும் என்று எடுத்துக்காட்டிய அதேவேளை, நீதித்துறை என்பது நீதியையும் இரக்கத்தையும் நிலைநாட்ட முற்படும் திருஅவையின் அதிகாரத்துடன் பிணைந்துள்ளது என்பதையும் பங்கேற்பாளர்களுக்கு நினைவூட்டினார் திருத்தந்தை.
இந்தச் சீர்திருத்தம் செயல்முறையை மேலும் அணுகக்கூடியதாகவும் திறமையாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதை ஒப்புக்கொண்ட திருத்தந்தை, இது ஒருபோதும் உண்மையை அழிக்கக் கூடியதாக இருக்கக் கூடாது என்று தெளிவுபடுத்தினார்.
இந்தச் செயல்முறையின் இறுதி இலக்கு ஆன்மாக்களின் மீட்பு என்பதை மீண்டும் வலியுறுத்திய திருத்தந்தை, மேய்ப்புப் பணி பொறுப்பு அவசியமானதாக இருந்தாலும், திருஅவை திருமண நீதிமன்றங்களின் பணியைப் புறக்கணிக்க முடியாது என்பதை கோடிட்டுக் காட்டினார்.
குடும்பங்களின் நன்மையை மேம்படுத்துவதிலும், திருமணத்தின் புனிதமான பிணைப்பின் ஒன்றிப்பை உறுதி செய்வதிலும் இந்த மூன்று பரிமாணங்களையும் ஒருங்கிணைக்கும் ஒரு முழுமையான அணுகுமுறைக்கு அழைப்பு விடுத்து தனது உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
