மறைமாவட்ட தலைமைச் செயலகங்களின் இயக்குநர்களுடன் திருத்தந்தை மறைமாவட்ட தலைமைச் செயலகங்களின் இயக்குநர்களுடன் திருத்தந்தை   (ANSA)

நற்செய்திப் பணியாளர்களுக்கு அதிக தயாரிப்பு வேண்டும்!

"திருவழிபாட்டு உருவாக்கப் பயிற்சி புதிய முறைகளால் புதுப்பிக்கப்பட வேண்டும்" : திருத்தந்தை பதினான்காம் லியோ

ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்

கிறிஸ்தவ வழிபாட்டின் ஆழமான புரிதலை மக்களில் வளர்த்தெடுக்க புதிய வழிகள்  மற்றும் முறைகளை பயன்படுத்தி திருவழிபாட்டு உருவாக்கப் பயிற்சியைப் புதுப்பிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

உரோமையில் நடைபெற்ற மறைமாவட்ட தலைமைச் செயலகங்களின் இயக்குநர்களுடனானச் சந்திப்பில் கல்வித்துறைக்கு அப்பால் வழிபாட்டு முறைகளை விரிவுபடுத்துவதற்கான முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அழைப்பை மேற்கோள் காட்டி, எளிதில் அணுகக்கூடிய திருவழிபாட்டு கல்வியின் அவசியத்தை வலியுறுத்தினார் திருத்தந்தை.

திருமறை நூற்கள் மற்றும் திருவழிபாடு முறை குறித்த கற்றல்களை மறைமாவட்டங்களில் தொடங்குமாறு ஊக்குவித்ததோடு,  நற்செய்தி அறிவிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அதிக தயாரிப்புகளை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கத்திற்கு பிறகு வழிபாட்டு முறைகளில் முன்னேற்றம் ஏற்பட்டதை எடுத்துக்காட்டிய திருத்தந்தை, பங்குத் தளங்கள் அளவில் செயல்படும் வழிபாட்டு குழுக்களை புதுப்பித்து, புத்துணர்வுடன் செயல்படச் செய்ய தொடர்ந்த முயற்சி அவசியம் எனவும் வலியுறுத்தினார்.

வழிபாட்டில் மக்கள் பங்கேற்பை மேம்படுத்துவதற்காக மறைமாவட்ட அலுவலகங்களும் பங்குப்  பணியாளர்களும் இணைந்து செயல்பட வேண்டியதன்  முக்கியத்துவத்தையும் தனது உரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 நவம்பர் 2025, 12:57