இறந்தவர்கள் எதிர்கால நம்பிக்கையைத் தருகிறார்கள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
யாரும் என்றென்றும் அழிந்துபோய்விடக்கூடாது, ஒவ்வொருவரும் அவரவர்க்குரிய இடத்தைப் பெறவேண்டும், அவர்களின் தனித்துவமான அழகை வெளிப்படுத்த வேண்டும் என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ
நவம்பர் 2, ஞாயிறன்று, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செப உரையில் இவ்வாறு தெரிவித்த திருத்தந்தை அன்று சிறப்பிக்கப்பட்ட நம்பிக்கையாளர் அனைவரின் பெருவிழாவை மையப்படுத்தி தனது சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார்.
நம்பிக்கை, உயிர்த்தெழுதல் மற்றும் நினைவுகூருதல் ஆகிய மூன்று கருப்பொருள்களின் அடிப்படையில் சிந்தித்த திருத்தந்தை, இயேசுவின் உயிர்த்தெழுதல் ஒவ்வொரு நபரின் இறுதிகட்ட வாழ்வை வெளிப்படுத்துகிறது என்றும், யாரும் இழக்கப்பட வேண்டியவர்கள் அல்ல, கடவுளின் அன்பில் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவமான இடம் உண்டு என்றும் திருப்பயணிகளுக்கு நினைவூட்டினார்.
அனைத்துப் புனிதர்கள் தினத்தை வேற்றுமையில் ஒற்றுமை என்பதன் கொண்டாட்டம் என்று விவரித்த திருத்தந்தை, அங்கு ஒவ்வொரு நபரின் அங்கீகாரம் மற்றும் மகிழ்ச்சிக்கான விருப்பமும் நிறைவாழ்வில் நிறைவைக் காண்கிறது, இது முடிவில்லாத நேரத்தில் அல்ல, எல்லையற்ற அன்பில் மூழ்கியிருப்பதாகப் புரிந்து கொள்ளப்படுகிறது என்றும் எடுத்துக்காட்டினார்.
பின்னர் அனைத்து நம்பிக்கையாளர் தினத்தை நோக்கித் தனது சிந்தனைகளைத் திருப்பிய திருத்தந்தை, நினைவாற்றலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், இறந்தவர்களை நினைவுகூருவதன் வழியாக, கிறிஸ்துவில் அவர்களின் நீடித்த மாண்பை உறுதிப்படுத்துகிறோம் என்றும், வரலாற்றால் மறக்கப்பட்டவர்கள் கூட கடவுளுக்கு விலைமதிப்பற்றவர்களாகவே இருக்கிறார்கள் என்றும் கூறினார்.
மேலும் இறந்தவர்களின் உயிர்த்தெழுதல் மற்றும் வரவிருக்கும் மறுவுலக வாழ்க்கையின் மீதான கிறிஸ்தவ நம்பிக்கையை நினைவுகூர்ந்து, அமைதியான சிந்தனை மற்றும் நம்பிக்கையின் தருணங்களாக கல்லறைகளைச் சந்திக்க விசுவாசிகளை ஊக்குவித்தார்.
இறுதியாக, இறந்தவர்களை நினைவுகூருவது கடந்த காலத்தைப் பற்றியது மட்டுமல்ல, எதிர்காலத்தை நோக்கிய ஒரு நம்பிக்கையான செயல் என்று திருப்பயணிகளிடம் எடுத்துரைத்து தனது மூவேளை செப உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
