புனித வின்சென்ஷா மரியா பொலோனி
மெரினா ராஜ் - வத்திக்கான்
19 ஆம் நூற்றாண்டில் வெரோனா தலத்திருஅவையை சிறப்பித்த நிறுவனர்கள் மற்றும் புனிதர்களில் வின்சென்சா மரியா போலோனியும் ஒருவராவார். அப்போஸ்தலிக்க புதுப்பித்தலின் தீவிரத்தை உணர்த்துவதற்காக அவர் இரக்கத்தின் சகோதரிகள் சபையினை நிறுவினார். 1802ஆம் ஆண்டு ஜனவரி 26, இல் வெரோனாவில் பிறந்த இவரின் திருமுழுக்குப் பெயர் லூய்ஜியா. இளம்பருவத்தினராக இருந்தபோது, அருளாளர் கார்லோ ஸ்டீப்பின் (1773-1865) ஆன்மீக வழிகாட்டுதலுக்கு தன்னை ஒப்படைத்தார். 38 வயது வரை தனது குடும்பத்துடன் மிகுந்த அர்ப்பணிப்புடன் வாழ்ந்த இவர், தனது தந்தையின் மளிகைக் கடை மற்றும் மருந்தகத்தில் உதவினார். உள்ளூர் தொண்டு நிறுவனமான பியோ என்னும் இடத்தில் நாள்பட்ட நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கும், அவர்களின் வீடுகளில் மற்றவர்களுக்கும் உதவவும் பராமரிக்கவும் தன்னார்வத் தொண்டுகளைச் செய்தார்.
இரக்கத்தின் சகோதரிகளின் வரலாறு 1840 ஆம் ஆண்டில் தொடங்கியது, லூய்ஜியா போலோனியும் மூன்று தோழர்களும் பியோ ரிக்கோவெரோவில் செவிலியர்களாக பணியமர்த்தப்பட்டு பெண்கள் பகுதியை ஒட்டிய இரண்டு அறைகளில் குழுவாக வாழத் தொடங்கினர். ஏழைகள் மற்றும் நோயுற்றவர்களின் ஆளுமையில் இயேசு கிறிஸ்துவை அங்கீகரிக்கவும், அன்பு செய்யவும், பணியாற்றவும் கற்றுக்கொள்ள உதவ வேண்டும் என்பதை அவரது ஆன்மிக இயக்குநரின் நோக்கத்தின்படி தங்களது நோக்கமாகக் கொண்டு தீவிரமாகப் பணியாற்றினர். 1846 ஆம் ஆண்டு தொடங்கி, அவர் பியோ ரிக்கோவெரோவிடம் அதிகாரியாகப் பொறுப்பேற்றார், அடுத்த ஆண்டு, அந்த நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான பள்ளியின் மேற்பார்வையாளராகவும் ஆனார். அன்னை போலோனியின் பணியை இறைவன் புதிய அழைத்தல்களுடன் ஆசீர்வதித்தார்.
அவரும் மற்ற பன்னிரண்டு பெண்களும் 1848, செப்டம்பர் 10, அன்று தங்கள் துறவற வாழ்வைத் தொடங்கினர்: அந்த தருணத்திலிருந்து, அவரது பெயர் வின்சென்சா மரியா என்று மாறியது. முதல் மூன்று புதிய இல்லங்களை நிறுவி அதனை அவர் மேற்பார்வையிட்டார். "கடவுள் விரும்பியபடி நாம் புனிதர்களாக இருக்க வேண்டும், அவர் தனது நன்மையால், ஏழைகளுக்கு பணியாற்றுவதில் பரிபூரண நிலைக்கு நம்மை அழைத்தார், அவர் நம் தலைவர்” என்று தனது சகோதரிகளிடத்தில் அடிக்கடி கூறுவார். 1855, நவம்பர் 11, அன்று அவரது நெஞ்சில் ஏற்பட்ட காயம் அவரது மரணத்திற்கு வழிவகுத்த நோயின் அறிகுறியானது. திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்கள் 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 21, அன்று அன்னை வின்சென்சா மரியாவை அருளாளராக அறிவித்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
