புனித பீட்டர் தோ ரோத்
மெரினா ராஜ் - வத்திக்கான்
புனித பீட்டர் தோ ரோத், அவர்கள் பாப்புவா நியூ கினியாவில் உள்ள நியூ பிரிட்டன் தீவில் வசித்து வந்தார். அவர் 1912 ஆம் ஆண்டு ரகுனை என்ற வர்த்தக கிராமத்தில் பிறந்தார். 18 வயதில், தலிலிகாப்பில் உள்ள புனித பவுல் கல்லூரியில் சேர்ந்து நற்செய்தியை அறிவிக்க முழுநேர போதகராகப் பயிற்சி பெற்றார். 1933 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அவர் ரகுனையில் ஒரு மறைப்போதகராக ஆனார். 1936ஆம் ஆண்டு நவம்பர் 11, அன்று, அவர் பவுலா இயா வார்பிட் என்பவரை மணந்து மூன்று குழந்தைகளைப் பெற்றேடுத்தார். ஜனவரி 1942ஆம் ஆண்டில், ஜப்பானிய இராணுவம் தீவை ஆக்கிரமித்து ஐரோப்பிய மறைப்பணியாளர்களை சிறையில் அடைத்தது. பீட்டர் தனது பணியை வழிநடத்துவதில் தனியாக இருப்பதைக் கண்டார். ஆரம்பத்தில் அதிக சகிப்புத்தன்மை கொண்ட ஆக்கிரமிப்பாளர்கள், கிறிஸ்தவர்கள் மீதான தங்கள் அணுகுமுறையை நாளுக்கு நாள் அதிகமாகக் கடினப்படுத்தினர். மார்ச் 1944-ஆம் ஆண்டில் எந்த மத நடவடிக்கையையும் மேற்கொள்ளக்கூடாது என்று தடை செய்தனர். எனவே பீட்டர் ஒரு நிலத்தடி தங்குமிடம் கட்டி அங்கு திருவழிபாடுகளைக் கொண்டாடுவதற்காக மக்களைக் கூட்டிச் சேகரித்தார். அதே காரணத்திற்காக கைது செய்யப்பட்டு கொல்லப்பட்ட மற்றவர்களைப் பற்றி அவருக்குத் தெரிந்திருந்ததால், அவர் எடுக்கும் முயற்சி மிகுந்த ஆபத்துகளை உள்ளடக்கியது என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார்.
கிராமத் தலைவர்கள் மற்றும் உள்ளூர் மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக, ஜப்பானியர்கள் பலதார மணத்தை சட்டப்பூர்வமாக்கினர். இது முந்தைய பத்தாண்டுகளில் கத்தோலிக்க மறைப்பணியாளர்களால் தொடர்ந்து எதிர்க்கப்பட்டது. ஒருதார மணம் மற்றும் பிரிக்க முடியாத திருமணத்தைப் பாதுகாப்பதில் அவர் கொண்டிருந்த நிலைப்பாட்டின் காரணமாக, ரகுனாயின் மத போதகரான பீட்டர் ஓர் எதிரியாகக் கருதப்பட்டார். 1945ஆம் ஆண்டு வசந்த காலத்தில், அவர் கைது செய்யப்பட்டு இரண்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். சிறையில் இருந்தபோது, அவரது சகோதரி அவரைப் பார்க்க வந்தார். அவர் அவளிடம், “அழாதே. நான் ஒரு நல்ல காரணத்திற்காக இங்கே இருக்கிறேன். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், ஏனென்றால் நான் என் நம்பிக்கைக்காக இங்கே இருக்கிறேன்” என்று கூறினார். ஜூலை 1945ஆம் ஆண்டு ஒரு வெள்ளிக்கிழமை அவரது தண்டனை முடிவடையும் நேரத்தில், விஷ ஊசி செலுத்தி கொல்லப்பட்டார். திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்கள் தலைமையில், 1995ஆம் ஆண்டு 17 ஜனவரி அன்று பாப்புவா நியூ கினியாவின் தலைநகரான போர்ட் மோர்ஸ்பியில் இவரது அருளாளர் பட்ட நிகழ்வுத்திருப்பலியானது கொண்டாடப்பட்டது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
