புனித மரியா கார்மென் ரெண்டிலிஸ் மார்டினெஸ்
மெரினா ராஜ் - வத்திக்கான்
புனித மரியா கார்மென் ரெண்டிலிஸ் மார்டினெஸ் 1903ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11, அன்று வெனிசுலாவின் கராகஸில் பிறந்தார். தனது தந்தை மற்றும் தம்பியின் மரணத்திற்குப் பிறகு, தனது தாய் உடன் இணைந்து குழந்தைகளை வளர்க்க உதவினார். விரைவில் தாய்மை உணர்வையும் அவர்களுக்கான பாதுகாப்பையும் வளர்த்துக் கொண்டார். அவர் துறவற வாழ்க்கையின் பாதையைப் பின்பற்ற விரும்பினார். ஆனால் பிறப்பிலிருந்தே அவருக்கு ஒரு குறைபாடு இருந்தது அது இடது கரம் இல்லாதது, இதன் காரணமாக அவரது விண்ணப்பம் மீண்டும் மீண்டும் மறுக்கப்பட்டது. 1927 ஆம் ஆண்டில், எழுபது ஆண்டுகளுக்கு முன்பு பிரான்சில் நிறுவப்பட்ட திருநற்கருணை இயேசுவின் பணியாளர்கள் சபையில் அவர் நுழைந்தார்.
அவர் அந்த துறவறக் குடும்பத்தின் தனிவரத்தைத் தழுவி, நற்கருணை மற்றும் அருள்பணியாளார்களின் பணி மீதான தனது அன்பை இன்னும் ஆழமாக வாழ்ந்தார். சபை தன்னை ஒரு மதச்சார்பற்ற நிறுவனமாக மாற்ற முடிவு செய்தபோது, வெனிசுலா மற்றும் கொலம்பியாவின் அருள்சகோதரிகள் தாங்கள் அருள்கன்னியர்களாகவே இருக்க விரும்பி, ஒரு புதிய நிறுவனத்தை நிறுவுமாறு கேட்டுக் கொண்டனர். 1965 ஆம் ஆண்டு திருஅவையால் அங்கீகரிக்கப்பட்ட இயேசுவின் பணியாளர்கள் சபையானது 1985 ஆம் ஆண்டு திருப்பீட உரிமை நிறுவனமாக மாறியது. தொடக்கத்திலிருந்தே, முதலில் தற்காலிகமாகவும் பின்னர் 1969ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டதன் வழியாகவும், அருள்சகோதரி மரியா கார்மென் புதிய துறவற சபையின் உயர்தலைவராகப் பணியாற்றினார்.
இந்த நிறுவனம் ஒரு வளர்ச்சிக் காலத்தை அனுபவித்தது. சகோதரிகள் திருஅவைகள் மற்றும் குருத்துவ இல்லங்களில் பணிபுரிந்தனர், மத போதனை, கல்வி மற்றும் தேவைப்படுபவர்களைப் பராமரித்தனர். அவர்கள் அருள்பணியாளர்களுக்கான பொருள்கள் மற்றும் ஆடைகளையும் செய்தனர். 1974 ஆம் ஆண்டு, ஒரு கார் விபத்தில் சிக்கினார். அவர் குணமடைந்தபோது, "இது கிறிஸ்துவின் சிலுவையின் ஒரு சிறிய பகுதி, நான் அதை உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் சுமக்கிறேன்" என்று கூறினார். அவர் தனது சக அருள்சகோதரிகளுக்காக தொடர்ந்து பணியாற்றினார், சபையின் இல்லங்களுக்குச் சென்று, ஊன்றுகோல்கள் உதவியுடன் நடந்து, சக்கர நாற்காலியில் வலம் வந்தார். 1977 மே 9, அன்று அவர் தனது பூமிக்குரிய பயணத்தை முடித்தார். 2018-ஆம் ஆண்டு ஜூன் 16, அன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் அருளாளாராக உயர்த்தப்பட்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
