புனித பர்த்தலோ லோங்கோ
மெரினா ராஜ் - வத்திக்கான்
புனித பர்த்தலோ லோங்கோ என்ற பெயர் நேபிள்ஸுக்கு அருகிலுள்ள பொம்பே ஆலயத்தின் அன்னை மரியா பக்தி மற்றும் தொண்டு பணிகளுடன் தொடர்புடையது, இது உலகம் முழுவதும் அறியப்படுகிறது. லாங்கோ 1841 ஆம் ஆண்டு பிப்ரவரி 10, அன்று பிரிண்டிசி மாகாணத்தில் உள்ள லடியானோவில் பிறந்தார். அவர் லெக்ஸில் சட்டப் படிப்பைத் தொடங்கி நேபிள்ஸ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று, ஒரு வழக்கறிஞரானார். சிறிது காலம் ஆவியுலக நடைமுறைகளைப் பின்பற்றிய அவர், 1865 இல் நம்பிக்கைப் பயிற்சிக்குத் திரும்பி, நல்ல செயல்களை ஊக்குவிப்பதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அவர் ஒரு டொமினிகன் மூன்றாம் நிலை மற்றும் செபமாலையின் தீவிர உறுப்பினராக தன்னை மாற்றிக்கொண்டார். 1872 அக்டோபர் இல், டி ஃபுஸ்கோவின் கைம்பெண்ணான கம்பி கவுண்டஸ் மரியானா ஃபர்னாராரோவின் சொத்துக்களை நிர்வகிக்க பொம்பே பள்ளத்தாக்குக்குச் சென்றார். அவர் அங்கு இருந்தபோது, அந்தப் பகுதியில் வசிப்பவர்களின் ஆன்மிக மற்றும் பொருள் தேவைகளை கவனித்துக்கொண்டார். அவர்கள் முற்றிலும் கைவிடப்பட்டனர். அவர் தூய கன்னி மரியாவிடம், "நீங்கள் வாக்குறுதி அளித்தது உண்மையாக இருந்தால்... செபமாலையை ஊக்குவிப்பவர்கள் மீட்கப்படுவார்கள், நான் மீட்கப்பபடுவேன், உங்கள் செபமாலை பக்தியை பரப்பாமல் நான் இந்த பொம்பே நாட்டை விட்டு வெளியேற மாட்டேன் என்று செபித்தார்.
அந்த நேரத்தில், நண்பகல் மூவேளை செப உரைக்கான மணிகளின் சத்தம் ஒலித்தது, இதுவே தனது பணியாக இருக்கும் என்பதை அவர் புரிந்துகொண்டார். 1875 நவம்பர் 13 அன்று, அவர் செபமாலை அன்னையின் உருவத்தை பொம்பேவிற்கு கொண்டு வந்தார், மேலும் 1876 மே 8 அன்று, ஆலயத்தின் முதல் கல் நாட்டப்பட்டது. அவர் பல பக்தி புத்தகங்களை எழுதினார் மற்றும் இல் ரோசாரியோ எ லா நுவா பாம்பீ (ஜெபமாலை மற்றும் புதிய பாம்பீ) என்ற செய்தித்தாளை வடிவமைத்தார். 1883 ஆம் ஆண்டில், அவர் பொம்பே அன்னைக்கு மன்றாட்டுக்கள் இயற்றினார். கவுண்டஸ் டி ஃபுஸ்கோ என்னும் பெண்ணை மணந்த லோங்கோ எப்போதும் கற்பைக் கடைப்பிடித்தார். தனது மனைவியுடன் சேர்ந்து, 1887 ஆம் ஆண்டு பொம்பேயில் ஒரு பெண்கள் அனாதை இல்லத்தையும், சிறைக்கைதிகளின் மகன்கள் (1892) மற்றும் மகள்களுக்கான வீடுகளையும் (1922) கட்டினார். அவர் டொமினிகன் சகோதரிகள் சபையை "பொம்பேயின் புனித செபமாலையின் புதல்விகள்" என்று நிறுவினார், மேலும் 1906 ஆம் ஆண்டு தனது அனைத்து சொத்துக்களையும் நன்கொடையாக வழங்கினார். அவர் 1926 அக்டோபர் 5, அன்று இறந்தார், மேலும் 1980-ஆம் ஆண்டு அக்டோபர் 26, அன்று புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்களால் அருளாளராக உயர்த்தப்பட்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
